கலிபோர்னியா: மில்லியன் கணக்கான இன்ஸ்டாகிராம் பயனர்களின் கடவுச் சொற்களை படிக்கக் கூடிய வடிவத்தில் சேமித்து வைத்திருப்பதாக பேஸ்புக் நிறுவனம் அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்துள்ளது.
கடந்த 2012-ஆம் ஆண்டில் இன்ஸ்டாகிராம் செயலியை பேஸ்புக் நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
“இன்ஸ்டாகிராம் கடவுச்சொற்களின் கூடுதல் பதிவுகள் படிக்கக்கூடிய வடிவத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். இது பல மில்லியன் பயனர்களை பாதித்திருப்பதை நாங்கள் இப்போது மதிப்பிட்டுள்ளோம். இந்த பயனாளர்களுக்கு இது குறித்து நாங்கள் தெரியப்படுத்துவோம்.
ஆயினும், எங்களின் விசாரணையின்படி, இவ்வாறு சேமித்த கடவுச்சொற்கள் தவறாக அணுகப்படவில்லை” என வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் பேஸ்புக் தெரிவித்தது.
கடந்த மார்ச் மாதப் பிற்பகுதியில், நூற்றுக்கணக்கான மில்லியன் பயனர்களின் கடவுச்சொற்களை ஓர் எளிய எழுத்து வடிவத்தில் சேமித்து வைத்திருப்பதாக பேஸ்புக் தெரிவித்ததுடன், பின்னர் அப்பிரச்சினையை பேஸ்புக் சரி செய்துவிட்டது எனத் தெரிவித்திருந்தது.