Home உலகம் சிங்கையில் அண்ணாமலை பல்கலைக் கழக முன்னாள் மாணவர் சங்கத்தின் தமிழ்ப் பணிகள்

சிங்கையில் அண்ணாமலை பல்கலைக் கழக முன்னாள் மாணவர் சங்கத்தின் தமிழ்ப் பணிகள்

1420
0
SHARE
Ad

சிங்கப்பூர் – தமிழ்நாட்டின் தில்லையம்பதி என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் தமிழ்மொழியைக் கற்பிக்க உருவாக்கப்பட்ட மீனாட்சிக் கல்லூரி 1929 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகமாய் பதிவு செய்யப்பட்டது. இந்தியக் குடியரசுத் தலைவர் , அறிவியல் ஆய்வாளர்கள் , பொறியியல் வல்லுனர்கள் , விவசாய ஆய்வாளர்கள், தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள், திரைப்படத்துறை இயக்குனர்கள், அரசாங்க பொறுப்புகளில் உயர்பதவி வகித்தவர்கள்,வகிப்பவர்கள் என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை உருவாக்கிய பெருமையைப் பெற்றது அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

1998 முதல் இயங்கும் சங்கம்

அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் சிங்கப்பூர் பிரிவு 1998 ஆம் ஆண்டு சிங்கையில் பதிவு செய்யப்பட்டது. குடும்ப தினம், விளையாட்டுப் போட்டிகள், தொழில் முறை பட்டறைகள் , கருத்தரங்குகள, வணிகக் கருத்தரங்குகள், குழந்தைகள் மகளிருக்கான நிகழ்ச்சிகள் என பல நிகழ்ச்சிகள் முன்னாள் மாணவர்கள் மற்றும் அவர்தம் குடும்ப உறுப்பினர்களுக்காகவும் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ் மொழி விழா மற்றும் மக்கள் கழகத்துடன் கைகோர்த்து இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும், ஆண்டுக்கு 1000 மணி நேர சமூக சேவை செய்வதாய் உறுதியளித்து சமூகப்பணிகளிலும் ஈடுபட்டுவருகிறது அண்ணாமலை பல்கலைக் கழக முன்னாள் மாணவர்களின் சங்கம்.

#TamilSchoolmychoice

சிங்கப்பூரில் தமிழ் வாழும் மொழியாகவும், பேசும் மொழியாகவும் விளங்கிட செயல்பட்டுவந்த வளர்தமிழ் இயக்கத்தின் போற்றத்தக்க நிகழ்ச்சியான தமிழ்மொழி விழா 2005 ஆம் ஆண்டு முதல் 30 க்கும் மேற்பட்ட அமைப்புகளுடன் நடைபெற்று வந்தது.

தமிழுக்காகத் தொடங்கப்பட்ட கல்லூரியின் மண்ணில் தவழ்ந்த நாம், தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட சிங்கைத் திருநாட்டில் நமது பங்களிப்பு இல்லாமை ஓர் தனிமையை உணர்த்தியதன் பயனாய் 2013 ஆம் ஆண்டு தமிழ்மொழி விழாவில் தமிழ் பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகளை மாணாக்கர்களே படைக்கும் விதமாக முன்னெடுக்கும் ஆலோசனை பரிந்துரைக்கப்பட்டு செயற்குழு கூட்டத்தில் அனைவரின் இசைவுகளோடும் வளர்தமிழ் இயக்கத்துடன் இனிதே இணைந்தது.

AAA தனது தமிழ்மொழி விழாவின் முதலாமாண்டு (திருவள்ளுவராண்டு 2045 இல், ஆங்கில ஆண்டு 2014) பங்களிப்பை ஓர் பயிலும் பாலனாக 9 மாணாக்கர்களுடன் அங் மோ கியோ பொது நூலகத்திலிருந்து இனிதே தொடங்கியது. அதில் “இளைய தலைமுறைக்குத் தமிழ் – சமூக ஊடகங்கள்” என்ற தலைப்பு தேர்வு செய்யப்பட்டு, உயர்நிலைப்பள்ளி மாணவர்களை ஈடுபடுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டு, மேற்கூறிய தலைப்பில் மாணவர்கள் தங்களின் ஆய்வுகளை படைத்து அனைவரும் பாராட்டும் வகையில் நிகழ்ச்சியினை சிறப்பித்தார்கள்.

2-வது ஆண்டின் பங்களிப்பை மேம்படுத்த கங்கை முதல் கடாரம் பலவாகக் கொண்ட இராஜேந்திரச் சோழன் அரியணை ஏறிய 1000-வது ஆண்டு விழா 2014 ஆம் ஆண்டு சிங்கையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய திருவாளர் ஐயா குடவாய் பாலசுப்ரமணியன் அவர்கள் 2015 ஆம் ஆண்டின் தமிழ்மொழி விழாவிற்கு சிறப்பு பேச்சாளராகவும் மற்றும் மாணவர்கள் ஆய்வு செய்திட “தமிழ் தந்த கலை அற்புதங்கள்” என்ற தலைப்பும் வழங்கப்பட்டது. இவ்விழா உட்லண்ட்ஸ் நூலகத்தில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் சீரும் சிறப்புமாக நடந்தேறியது.

தமிழ்ப் புத்தகங்களை மின்வடிவமாக்கும் திட்டத்திற்கு ஆதரவு

2015 ஆம் ஆண்டு தேசிய நூலக வாரியம் ஆதரவுடன் சிங்கப்பூர் தேசிய மரபுடைமை வாரியம் கடந்த 50 ஆண்டுகளாக படைக்கப்பட்ட தமிழ் புத்தகங்களை மின்வடிவமாக்கும் திட்டத்தை செயல்படுத்தினர். அதற்கு AAA ஆதரவு அளித்து நிதி திரட்டி வழங்கினர். இந்நிகழ்வை சார்ந்து, 2016 இல் “இணையத்தில் சிங்கைத் தமிழ் இலக்கியங்கள் – ஓர் ஆய்வு” என்ற தலைப்பு மாணவர்களுக்கும், “உலகத் தமிழ் இலக்கியத்தில் சிங்கைத் தமிழ் இலக்கியம்” என்ற தலைப்பில் சிறப்பு பேச்சாளர் ஊடகவியலாளர் திரு. மாலன் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

மேலும் இவ்விழாவில் திரு கோட்டி முருகானந்தம் எழுதிய “சி. கு. மகுதூம் சாயுபும் சிங்கை நேசனும் – ஓர் ஆய்வு” எனும் நூல் வெளியீடு செய்யப்பட்டு மூன்று முத்தான அங்கங்களுடன் உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் முழுமையாக தமிழ் விருந்து படைக்கப்பட்டது.

தமிழர் பாரம்பரிய உணவு குறித்த நிகழ்ச்சி

2017-ம் ஆண்டில் உண்ணும் உணவை கருப்பொருளாகக் கொண்டு “தமிழர் பாரம்பரிய உணவும் ஆரோக்கியமும்” என்ற தலைப்பு மாணவர்களுக்கும், “தமிழ் உணவுக்கும் அமுதென்று பேர்” என்ற தலைப்பு சிறப்பு பேச்சாளரான மருத்துவர் கு. சிவராமனுக்கும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு உணவைப் பற்றியும், உடல் ஆரோக்கியத்தைப் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தியதோடு மற்றும் தமிழர்களின் உணவுமுறை பல ஆயிரம் ஆண்டுகளின் அறிவியல் நீட்சி என்பதை உணரும் ஓர் உன்னத நிகழ்ச்சியாகவும் அமைந்தது. இவ்விழா உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் வெற்றிகரமாக கொண்டாடப்பட்டது.

“தமிழர் அறிவியல்” என்ற தலைப்பில் உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் 60-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பங்களிப்புடன் 450-க்கும் மேற்பட்ட அவையோர்கள் முன்னிலையில் 2018இல் அரங்கேறியது.

இவ்விழாவில் சிறப்பு பேச்சாளராக முனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அழைக்கப்பட்டார். இவ்விழாவானது அரங்கம் கண்ட அவையோர்கள் அனைவரும் வியக்கும் வண்ணம் தமிழர்களின் அறிவியல் இன்றளவும் அனைத்து நாடுகளின் பயன்பாட்டிலும் உள்ளதென்பது உள்ளத்தளவில் தமிழர்களாய் பெருமிதம் கொள்ளச் செய்யும் மிகப் பிரமிப்பான விழாவாக கொண்டாடப்பட்டது.

இவ்வாண்டு (திருவள்ளுவராண்டு 2050 , சித்திரைத் திங்கள் 7ம் திகதி , ஆங்கில ஆண்டு 2019 ஏப்ரல் 20 ) மாலை மணி 6 முதல் 8.30 வரை நடைபெற இருக்கும் ஆறாவது தமிழ்மொழி விழா “எதிர்காலத் தொழில்நுட்பத்தில் தமிழ்” என்ற தலைப்பில் படைக்கப்பட இருக்கின்றது.

அதையொட்டி உயர்நிலைப்பள்ளி, தொடக்கக்கல்லூரி மாணவர்களுக்கான ஆய்வுகள் படைப்புப் போட்டி 13.04.2019 அன்று உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைப்பெற்றது. மதியம் 1.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை நடைபெற்ற இந்தப் போட்டியில் 44 மாணவர்கள் கலந்துகொண்டு “எதிர்காலத் தொழில்நுட்பத்தில் தமிழ் “என்ற தலைப்பில் தங்களின் ஆய்வுகளை படைத்தார்கள். உயர்நிலை( 1,2 ), உயர்நிலை ( 3,4 ), தொடக்கக்கல்லூரி என மூன்று பிரிவுகளாக மாணவர்கள் பிரிக்கப்பட்டு இப்போட்டி நடைப்பெற்றது.

உயர்நிலைப் பள்ளி 1,2 மற்றும் தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கு நடுவர்களாக திரு. ரஜித் அகமது, திரு. நாராயணன் ஆண்டியப்பன் மற்றும் திருமதி. கஸ்தூரி இராமலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
உயர்நிலைப் பள்ளி 3,4 மாணவர்களுக்கு நடுவர்களாக திரு. ரவிச்சந்திரன் சோமு, திரு. சு. கல்யாண்குமார் மற்றும் முனைவர் திருமதி. வி. தேன்மொழி ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

இந்தப் போட்டியில் முதல் பரிசை வென்றவர்கள் ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெறும் நிகழ்வில் தங்களின் ஆய்வினை படைப்பார்கள். அன்று சிறப்பு பேச்சாளராக திரு.முத்து நெடுமாறன் அவர்கள் “எதிர்காலத் தொழில்நுட்பத்தில் தமிழ்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தவிருக்கிறார்.