வாஷிங்டன் : பேஸ்புக் நிறுவனத்தின் இரண்டு மிகப் பெரிய சொத்துடமைகளாகப் பார்க்கப்படுபவை வாட்ஸ்எப் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக ஊடகங்களாகும். ஆனால், இத்தகைய ஆதிக்கம் வணிகப் போட்டிகளில் சிறிய போட்டியாளர்களை பேஸ்புக் நசுக்க வாய்ப்பாகி விட்டது எனக் கூறி அமெரிக்க மத்திய வணிக ஆணையம் வழக்கு தொடுத்துள்ளது.
இதே போன்ற வழக்குகளை ஏறத்தாழ எல்லா அமெரிக்க மாநிலங்களும் தொடுத்துள்ளதால் பேஸ்புக்கின் நிலைமை மேலும் சிக்கலாகியிருக்கிறது.
பேஸ்புக், வாட்ஸ்எப், இன்ஸ்டாகிராம் ஆகிய மூன்று உலகின் மிகப் பெரிய சமூக வலைத் தளங்களும் ஒரே குடையின் கீழ் வருவதால், சிறிய போட்டியாளர்களை விலை கொடுத்து வாங்குவது அல்லது அந்தப் பரிந்துரைக்கு ஒப்புக் கொள்ளாவிட்டால், கடும் போட்டி கொடுத்து அந்த சக போட்டி சமூக வலைத்தளத்தை வணிக ரீதியாகத் தோற்கடித்து மூடி விடுவது போன்ற அணுகுமுறைகளை பேஸ்புக் கடைப்பிடிப்பதாக அரசாங்கத் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நேற்று புதன்கிழமை (டிசம்பர் 10) இதற்கான வழக்குகள் நீதிமன்றங்களில் பதிவு செய்யப்பட்டன.
இத்தகைய வழக்குகளை எதிர்நோக்கும் இரண்டாவது மிகப் பெரிய நிறுவனம் பேஸ்புக்காகும்.
கடந்த அக்டோபரில் அமெரிக்க நீதித் துறை கூகுள் நிறுவனத்தின் மீது இதே போன்ற வழக்கொன்றைத் தொடுத்தது.
கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்களின் ஆட்சேபத்துக்குரிய வணிக நடவடிக்கைகளைத் தொடர்ந்து அந்த மாபெரும் நிறுவனங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்ளும் போட்டி சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமை 2012-இல் 1 பில்லியன் டாலருக்கு பேஸ்புக் வாங்கியது. 2014-இல் வாட்ஸ்எப் சமூக வலைத்தளத்தை 19 பில்லியன் டாலருக்கு பேஸ்புக் வாங்கியது.
இந்த அடிப்படையிலேயே வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. இதுவரையில் 46 அமெரிக்க மாநிலங்கள் இத்தகைய வழக்குகளில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளன.
வாட்ஸ்எப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் கோடிக்கணக்கான டாலர்கள் முதலீடு செய்ததன் மூலமே அந்த ஊடகங்கள் இந்த அளவுக்கு வெற்றிகரமாக வளர்ச்சியடைய முடிந்தது என பேஸ்புக் தரப்பில் தற்காப்பு வாதம் முன் வைக்கப்படுகிறது.
எனினும் இந்த வழக்குகள் முழுமையாக முடிவடைவதற்கு பல ஆண்டுகள் பிடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த வழக்குகளால் சம்பந்தப்பட்ட சமூக ஊடகங்களுக்கு உடனடி பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.