கோலாலம்பூர்: கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிகளில் இன்று புதன்கிழமைத் தொடங்கி நான்கு நாட்களுக்கு நீர் விநியோக தடை ஏற்படவுள்ளது.
இவ்வாறு திட்டமிடப்பட்ட 86 மணி நேர நீர் தடை பற்றிய தகவல்களை உடனடியாக அறிந்து கொள்வதற்கு சிலாங்கூர் மாநில நீர் விநியோக நிறுவனம் செயலி ஒன்றின் வாயிலாக மக்களுக்கு ஆக கடைசி நிலவரத்தை தந்துக் கொண்டிருக்கிறது.
திட்டமிடப்பட்ட அல்லது திட்டமிடப்படாத நீர் விநியோக தடை குறித்த விபரங்களை அந்த செயலியின் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம். மேலும், அவ்வாறான தடங்கல்கள் மீண்டும் எப்போது செயல்பாட்டிற்கு வரும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
‘ஆயர் சிலாங்கூர்’ (Air Selangor) எனும் செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். இந்தச் செயலியில், பயனர்கள் ‘அயிரா’, எனும் சேவையை பயன்படுத்தி சம்பந்தப்பட்டவர்களுடன் நீர் தடை குறித்து பேசலாம்.
தற்போதைக்கு, பயனர்கள் தங்களின் கருத்துக்களை பதிவிடவும், செயலியின் பயன்பாட்டை மதிப்பிடவும், வாடிக்கையாளர் அழைப்பு வசதியைப் பயன்படுத்தவும் இந்த செயலியைப் பயன்படுத்தலாம்.