Home நாடு தேசிய ஒற்றுமைக்கு ஊறுவிளைவிப்போர் – கடும் நடவடிக்கை தேவை – வேதமூர்த்தி வேண்டுகோள்

தேசிய ஒற்றுமைக்கு ஊறுவிளைவிப்போர் – கடும் நடவடிக்கை தேவை – வேதமூர்த்தி வேண்டுகோள்

636
0
SHARE
Ad

புத்ராஜெயா: சம்ரி வினோத் என்ற ஒரு நபர் மேற்கொண்ட ஒரு மதப் பிரச்சாரத்தின்போது இந்து சமயத்தை சிறுமைப்படுத்தியதுடன் பரிகாசமும் செய்தது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவலாக பரவி வருகின்ற நிலையில் அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

இத்தகைய நடவடிக்கை, நாட்டில் சலசலப்புக்கு இடம் அளிக்கும் வகையில் இனத்தையும் சமயத்தையும் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்த முனையும் மலேசியர் யாவருக்கும் தக்கப் பாடமாக அமைய வேண்டும்.

சம்ரி வினோத்தின் இத்தகைய வெறுப்புப் பேச்சு, இனங்களுக்கு இடையே நிலவும் ஒற்றுமைக்கும் இணக்கத்திற்கும் ஊறுவிளைவிக்கும் அதேவேளை, பயங்கரவாத நடவடிக்கைக்கு அடித்தளம் அமைக்கும் தொடக்கக்கட்ட தீவிரவாதப் போக்கிற்கும் இடம் அளிக்கும்.

#TamilSchoolmychoice

நிந்தனைப் பேச்சாளர் சம்ரி வினோத்திற்கு எதிராக இதுவரை ஏறக்குறைய 790 புகார்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மலேசியவாழ் இந்துப் பெருமக்களை எந்த அளவுக்கு காயப்படுத்தி உள்ளார் என்பது புலனாகிறது.

இலங்கையிலும் உலகின் பல பாகங்களிலும் நடைபெற்றுவரும் பயங்கரவாத நடவடிக்கைக்கு, தீவிரவாதத் தன்மைதான் அடித்தளமாக அமைகிறது. சம்ரியைப் போன்றவர்களுக்கு சட்டத்தின் வலிமை என்ன என்பதைப் புரியவைத்தால்தான் அவரைப்போல சமயத்தை ஒரு துருப்புச் சீட்டாக தங்களின் சுயநலத்திற்காகப் பயன்படுத்த விரும்பும் மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக அமையும்.

நாட்டில் இனங்களுக்கிடையே நிலவும் ஒற்றுமைக்கும் சமயங்களுக்கு இடையே பேணப்படும் நல்லிணக்கத்திற்கும் கேடு செய்யும் விதமாக பேசிய சம்ரி வினோத்திற்கு எதிராக காவல் துறையினர் குற்றவியல் (பீனல் கோட்) சட்டம் 298-ஏ பிரிவின் கீழ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தன்னைத்தானே பிரகடனம் செய்துகொண்ட இந்த நிந்தனைப் பேச்சாளர், இணைய சேவையை முறையற்ற வகையில் பயன்படுத்தியதற்காக ‘1998 தகவல் மற்றும் பல்ஊடகச் சட்ட’த்தின் கீழும் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

எனவே, மலேசிய மக்களால் காலங்காலமாக நிலைநாட்டப்படும் தேசிய ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் சம்ரி வினோத் போன்ற சக்திகள்மீது நடைமுறையில் இருக்கின்ற சட்டத்தின் மூலம் காவல் துறையினர் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.