Home நாடு “தோட்டப் பாட்டாளிகளின் உரிமைக்காக தம்முயிர் துறந்த தியாகத் தலைவர்கள்; மலாயா கணபதி – ...

“தோட்டப் பாட்டாளிகளின் உரிமைக்காக தம்முயிர் துறந்த தியாகத் தலைவர்கள்; மலாயா கணபதி – வீரசேனன்” வேதமூர்த்தி புகழாரம்

1101
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – இனம், மொழி பாராமல் தோட்டத் தொழிலாளர்களுக்காகவும், இந்திய சமுதாயத்தின் உரிமைகளுக்காகவும், போராடி தங்களின் இன்னுயிரைத் தந்த அமரர்கள் கணபதி மற்றும் வீரசேனன் ஆகியோரின் மறைவை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர்களின் தியாகத்தையும், பெருமையையும் பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி நினைவு கூர்ந்தார்.

“மலை சூழ்ந்த நிலம் மலாயா என்று இந்த மண்ணிற்கு பெயர் தந்தது தமிழ்; மலைசூழ் நிலம் மட்டுமல்ல; கடல்சூழ் நிலமாகவும் துலங்குகின்ற இந்த மலைத்திருநாட்டிற்கு பண்பாட்டையும் கலாச்சாரப் பெருமையையும் இறக்குமதி செய்தது குமரிக் கடல்; பூஜாங் பள்ளத்தாக்கைச் சூழ்ந்துள்ள யான் மண்டலத்தே வாழ் மக்களிடம் இன்றளவும் காணப்படும் நாகரிகக் கூறுகளுக்கு அடிப்படை, ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே குமரிக் கடல் வழியே படை நடத்திய தமிழர்தம் நாகரிகத்தின் வெளிப்பாடு என்பதெல்லாம் அனைவரும் அறிந்த செய்தி. இடையில் இந்த மண்ணில் எழுந்த இஸ்லாமிய மறுமலர்ச்சியாலும் வர்த்தகத்தில் ஏற்பட்ட மடைமாற்றத்தாலும் மலாயாவிற்கும் தமிழர்தம் பாரம்பரிய நிலத்திற்கும் இடையே நிலவி வந்த தொடர்பில் மெல்லத் தொய்வு ஏற்பட்டது” என வேதமூர்த்தி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மலாயா எஸ்.ஏ.கணபதி

“அதை மீண்டும் புதுப்பித்தவர்கள் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் என்பதை ஏற்றுக் கொண்டாலும், தென்னிந்தியத் தொழிலாளர்களுக்கு குறிப்பாக தமிழ்ப் பாட்டாளிகளுக்கு ஆங்கிலேய தோட்ட முதலாளிகள் இழைத்த அநீதியும் புரிந்த கொடூரமும் சொல்லி மாளாது. பாடசாலை, கள்ளுக்கடை, வழிபாட்டுத் தலம், ஆயாக் கொட்டகை இந்த நான்கை மட்டும் தோட்டங்கள்தோறும் காட்டிக்காட்டியே, தோட்டப் பாட்டாளிகளின் பொருளாதார ஆணி வேரை அவ்வப்பொழுது அடியறுத்துக் கொண்டிருந்தனர், ஆங்கிலேய ஆட்சியாளர்கள். இதில், வேதனையும் துயரமும் மிகுந்தது ஒரேத் தோட்டத்தில் ஒரேவித வேலையை செய்த தமிழர்கள் மற்றும் சீனர்கள் இடையே பேதத்தை உருவாக்கியதுதான்; இன்னும் சொல்லப் போனால், சீனர்களைவிட அதிக ஈடுபாட்டோடும் அக்கறையோடும் பணிபுரிந்த இந்தியப் பாட்டாளிகளுக்கு குறைவான ஊதியத்தை வழங்கியதுடன் மிகை நேரப் பணி நேரத்தைக் கணக்கிடுவதிலும் அசட்டையும் அலட்சியமும் காட்டினர்” எனவும் வேதமூர்த்தி தனது அறிக்கையில் சுட்டிக் காட்டினார்.

#TamilSchoolmychoice

வேதமூர்த்தி தனது அறிக்கையில் தொடர்ந்து பின்வருமாறு குறிப்பிட்டார்:

“இதையெல்லாம் தட்டிக் கேட்டதாலும் தோட்டப் பாட்டாளிகளுக்காகக் குரல் கொடுத்ததாலும் இளம் புரட்சித் தலைவர் மலாயா கணபதியை ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்குப் பிடிக்காமல் போனது. எனவே, அவரை வீழ்த்துவதற்கு தந்திர வலை விரித்தனர். அதற்கேற்ப ஒருசிலரும் ஆங்கிலேயரின் நடவடிக்கைக்கு துணை போயினர். அகில மலாயா தோட்டத்தொழிலாளர் சங்க சம்மேளனத் தலைவர் கணபதியின் இருப்பிடம் குறித்தும் நடவடிக்கைக் குறித்தும் தகவல் பெற்ற ஆங்கிலேய காவலர்கள் அவரைக் கைது செய்தனர்”

“மலாயா இந்திய தோட்டத் தொழிலாளர்களிடையே செல்வாக்கு பெற்ற இளந்தலைவர் மலாயா கணபதி என்பதால், அவரை இரகசியமாக கைது செய்ததுடன் விசாரணை இன்றி உடனே புடு சிறையில் அடைத்தனர். தலைவர் மலாயா கணபதிமீது ஆங்கில ஆட்சியாளர் முன்வைத்த குற்றச்சாட்டு, ‘அவர் துப்பாக்கியும் தோட்டாவும் வைத்திருந்தார்’ என்பதுதான்.”

“பேரறிஞர் அண்ணா, அவரின் கோரிக்கையை ஏற்று ஜவகர்லால் நேரு ஆகியத் தலைவர்கள் எல்லாம் வேண்டுகோள் விடுத்தும் அன்றைய ஆங்கில ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்கள், தலைவர் கணபதியை காவு வாங்குவதிலேயே குறியாக இருந்தனர். இந்தப் பிரச்சினையை நேரு பிரிட்டிஷ் பேரரசியின் கவனத்திற்கு கொண்டு செல்ல முனைப்பு காட்டிய வேளையில், அவசர அவசரமாக 1949-ஆம் ஆண்டு மே மாதம் 4-ஆம் நாள் விடியற்காலையில் கோலாலாம்பூர் புடு சிறைச்சாலையில் கணபதியை தூக்கில் இட்டனர்.”

“மலாயாத் தோட்டத் தொழிலாளர்களின் இளம் புரட்சித் தலைவர் ‘மலாயா’ கணபதி கைது செய்யப்பட்ட அதிர்ச்சித் தகவல் கிடைத்ததும் கொதித்துப்போன தொழிலாளர்களை சாந்தப்படுத்தவும் அடுத்தக் கட்ட நகர்வை மேற்கொள்ளவும் அகில மலாயா தோட்டத் தொழிலாளர் சங்க சம்மேளனத்தின் இடைக்காலத் தலைவராக வீரசேனன் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரையும் சிலாங்கூர் மாநிலத்தில் சுரங்கத் தொழிலாளர்கள் நிறைந்திருந்த சிறுபட்டணமான பத்து ஆராங்கில் ஆங்கிலேயக் காவலர்கள் சுட்டுக் கொன்றனர்”

“அதுவும், மலாயா கணபதியைத் தூக்கில் இடுவதற்கு ஒரு நாள் முன்னமே! இப்படி, மலேசியத் தோட்டத் தொழிலாளர்களின் உரிமை வாழ்வுக்கு குரல் கொடுத்த காரணத்தால் தம் இன்னுயிரை இளம் பருவத்திலேயே இழந்த தியாகச் சீலர்களான மலாயா கணபதியையும் வீரசேனனையும் மலேசியவாழ் தமிழ் மக்கள், குறிப்பாக தோட்டப் பாட்டாளிகளின் வழித்தோன்றல்கள் இன்றைய தினம் எண்ணிப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்றும் வேதமூர்த்தி அறைகூவல் விடுத்தார்.