Home இந்தியா ஆந்திராவின் ‘பாகுபலி’ ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றார் – ஸ்டாலின் கலந்து கொண்டார்

ஆந்திராவின் ‘பாகுபலி’ ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றார் – ஸ்டாலின் கலந்து கொண்டார்

1011
0
SHARE
Ad

விஜயவாடா – ஆந்திரப் பிரதேசத்தின் புதிய முதல்வராக இன்று வியாழக்கிழமை (மலேசிய நேரப்படி பிற்பகல் 2.50 மணியளவில்) இந்திய நேரப்படி நண்பகல் 12.20 மணியளவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திரா மாநிலத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.

மிகப் பெரிய பெரும்பான்மையில், தெலுகு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவை வீழ்த்திய ஜெகனுக்கு ஊடகங்கள் ‘ஆந்திராவின் பாகுபலி’ என புதிய பட்டப் பெயரைச் சூட்டியுள்ளன.

அவரது பதவியேற்புச் சடங்கு விழாவில் கலந்து கொள்ளாமல் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு புறக்கணித்தார். எனினும் ஆந்திர மாநிலத்தில் இருந்து பிரிந்து சென்று புதிய மாநிலமாக உருவெடுத்த தெலுங்கானாவின் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார்.

#TamilSchoolmychoice

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் ஜெகனின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார்.

ஆந்திராவின் ஆளுநர் முன்னிலையில் ஜெகன் மோகன் ரெட்டி தெலுங்கு மொழியில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரமுகர்கள், பொதுமக்கள் முன்னிலையில் ஜெகன் மோகன் ரெட்டியை புதிய முதல்வராக ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

2009-ஆம் ஆண்டில் தனது தந்தை ஒய்.எஸ்.ஆர்.ராஜசேகர் ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தொன்றில் காலமாகிவிட, அரசியலில் தள்ளப்பட்டார் ஜெகன்.

முதலில் காங்கிரசுடன் போராட்டம், பின்னர் தனிக்கட்சி தொடங்கி தெலுகு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடுவுடன் அரசியல் மோதல்கள், தனக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக 15 மாத சிறைவாசம் – என கடந்த 10 ஆண்டுகளாக ஜெகன் நடத்தி வந்த அரசியல் போராட்டங்களின் விளைவாக நடந்து முடிந்த ஆந்திர சட்டமன்றத் தேர்தல்களில் பெரும்பான்மை தொகுதிகளைக் கைப்பற்றினார் ஜெகன்மோகன் ரெட்டி.

ஆந்திராவின் மொத்தமுள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில் 151 தொகுதிகளை அவரது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. சந்திரபாபு நாயுடுவின் தெலுகு தேசம் 23 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.

பாஜக, காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் ஆந்திராவில் எந்த சட்டமன்றத் தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.

நாடாளுமன்றத் தேர்தல்களில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் 22 தொகுதிகளை ஜெகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கைப்பற்றியது. எஞ்சிய 3 தொகுதிகளை தெலுகு தேசம் கைப்பற்றியது.