ஜோர்ஜ் டவுன்: விண்கல் ஒன்றுக்கு பினாங்கைச் சேர்ந்த இரு 16 வயதுடைய மாணவர்களின் பெயர்கள் வைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவில் நடைபெற்ற உலகளாவிய அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்றதன் காரணமாக இவர்களின் பெயர்கள் விண்கல் ஒன்றுக்கு வைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
மெல்வின் செங் சுன் லே மற்றும் தம் யோங் ஷியாங் எனும் இம்மாணவர்கள், 2019-ஆம் ஆண்டுக்கான இண்டெல் இண்டர்நேஷனல் சைன்ஸ் அண்ட் என்ஜினேரிங் கண்காட்சியில், வேதியல் பிரிவில் பங்குக் கொண்டனர். ஏடிஸ் கொசுக்களின் முட்டை புழுக்களை ஒழிக்கும் மருந்தை கண்டுபிடித்ததால் இவர்களுக்கு இந்த அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
“உலகளாவிய நிகழ்வில் 24 பிரிவுகள் இருந்தன. முதல் மற்றும் இரண்டாவது இடத்தை வென்றவர்களின் பெயர்கள் வானுலக இருப்புகளுக்கு பெயராக சூட்டப்படும்” என தம் கூறினார்.
இருப்பினும், விண்கல்லில் பெயரிடுவது சில அறிவியல் நடைமுறைகளைச் சார்ந்தது என்றும், அதற்கு ஓர் ஆண்டு காலம் வரையிலும் காத்திருக்க நேரிடலாம் எனவும் அவர்கள் கூறினர்.