புது டில்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆந்திரப் பிரதேசத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டதாக வெளியான தகவலை மறுத்துள்ளார்.
கடந்த மத்திய அமைச்சரவையில் சுஷ்மா சுவராஜ் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார். அண்மையில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. தேர்தலில் வென்று மீண்டும் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கர் வெளியுறவுத் துறை அமைச்சர் பதவியைப் பெற்றுள்ளார்.
பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜ் டெல்லி முதல்வராகவும் இருந்தவர். நீண்ட அனுபவம் கொண்ட இவர் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து ஒதுங்கியதால், பாஜக இவருக்கு வேறு முக்கியப் பொறுப்பை வழங்கலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இச்சூழலில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் ஆளுநராக சுஷ்மா சுவராஜ் நியமிக்கப்படலாம் எனும் பேச்சு அடிப்பட்டது. டுவிட்டர் பக்கத்தில் பரவலாக சுஷ்மா சுவராஜ்ஜுக்கு பலர் வாழ்த்துகள் தெரிவித்து வந்த வேளையில், தாம் ஆந்திரப் பிரதேசத்தின் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டதாக வரும் செய்தியில் உண்மை இல்லை என டுவிட்டரில் அவர் குறிப்பிட்டிருந்தார்.