ஹாங்காங்: ஹாங்காங்கில் ஜனநாயகம் கோரி கடந்த 2014-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குடை போராட்டத்திற்கு பிறகு தற்போது நடக்கும் போராட்டம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.
இலட்சக்கணக்கான மக்கள் வீதியில் கூடி போராட்டம் நடத்தி வரும் வேளையில், காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கு இடையே நடந்த மோதலில் 79 பேர் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இன்று காலை வியாழக்கிழமை முதலே, மிகப்பெரிய அளவிலான கூட்டம் ஹாங்காங் அரசு அலுவலகங்களை சுற்றி கூட ஆரம்பித்துள்ளனர்.
அரசியல் எதிர் கருத்து உடையவர்களுக்கு எதிராக செயல்படும் என கருதப்படும் சீனாவின் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது ஆயிரக்கணக்கான மக்கள் ஹாங்காங்கில் பேரணியில் கலந்து கொண்டுள்ளனர். இந்த சட்டத்திருத்தமானது ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபரை சீனாவிடம் ஒப்படைக்க அனுமதிக்கிறது. இவ்வளவு போராட்டங்களுக்கு மத்தியிலும் ஹாங்காங் அரசு இச்சட்ட திருத்தத்தை செய்யும் முடிவிலிருந்து பின்வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களுடைய கருத்துக்கு யாரும் செவிசாய்க்க மறுப்பதன் விளைவாகவே இந்த போராட்டம் நடத்தப்படுவதாக போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். அனைத்துலக நிதி மையமாக விளங்கும் ஹாங்காங்கின் மரியாதையை மட்டும் இந்த சட்டம் கெடுக்காமல், நீதி அமைப்பின் மீதும் அதன் தாக்கம் செலுத்தப்பட உள்ளதாக மக்கள் கருதுகின்றனர்.