பிஷ்கெக்: கிர்கிஸ்தானில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் (எஸ்சிஓ) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீண்டும் அரசதந்திர நெறிமுறையை மீறிவிட்டார் என்ற பதிவுடன் டுவிட்டரில் பதிவொன்று பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
கடந்த முறை சவூதியில் நடைபெற்ற ஒஐசி மாநாட்டில் அவர் இவ்வாறு நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இம்முறை கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) உச்சமாநாட்டின் தொடக்க விழாவில் அவ்வமைப்பின் தலைவர் அரங்கத்தின் உள்ளே நுழையும் போது அனைவரும் எழுந்து மரியாதை செலுத்திக் கொண்டிருக்கையில், இம்ரான் கான் மட்டும் அமர்ந்திருப்பது போன்ற காணொளியும் புகைப்படங்கள் சமூகப் பக்கங்களில் நிரம்பின.
அவர் மட்டுமே அமர்ந்திருப்பதை உணர்ந்தவுடன், அவர் எழுந்து நின்று, பிறகு அனைவரும் அமர்வதற்கு முன்பதாகவே அமர்ந்துவிட்டார். இம்மாத தொடக்கத்தில் சவுதி அரேபியாவில் நடைபெற்ற 14 –வது ஒஐசி உச்சமாநாட்டில் இம்ரான் கான் அவ்வமைப்பின் இராஜதந்திர நெறிமுறைகளை மீறியதாகக் குறிப்பிடப்பட்டார்.
அந்த மாநாட்டின் போது, சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல் அசிஸ்ஸுடனான சந்திப்பின் போது, இம்ரான் கான் சல்மானின் மொழிபெயர்ப்பாளரிடம் பேசி, அச்செய்தி மன்னருக்கு மொழிபெயர்ப்பதற்கு முன்பதாகவே அவர் அவ்விடத்தை விட்டு நடந்து சென்றதாகக் கூறப்பட்டது.
அந்த காணொளி சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டது கடும் விமர்சனத்திற்கு இம்ரான் ஆளானார்.