கோலாலம்பூர்: சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகரான ஜாகிர் நாயக்கை இந்திய அரசிடம் ஒப்படைக்க மறுப்பு தெரிவித்த பிரதமர் மகாதீர் முகமட்டின் கருத்தினை முன்னாள் மஇகா தலைவர் டாக்டர் சுப்ரமணியம் விமர்சித்துள்ளார்.
தனது முனநூல் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டிருந்த அவர், மற்ற நாடுகளின் நீதி முறைமைகளை பேசுவது நியாயமற்ற செயலாகும் என்று குறிப்பிட்டுள்ளார். அதுவே, வெளிநாடுகள் இதே கேள்விகளை நம் நாட்டின் நீதித்துறை மீது வைத்தால் நாம் அதனை ஏற்றுக் கொள்ள இயலுமா என்று அவர் வினவியுள்ளார்.
உலகின் மூன்றாவது பெரிய முஸ்லீம் மக்கள் தொகையைக் கொண்ட நாடாகஇந்தியா திகழ்கிறது என்பதனை பிரதமர் மறந்து விடக்கூடாது என சுப்ரமணியம் கூறியுள்ளார். அங்குள்ள அவரது ஆதரவாளர்கள் அவருக்கு நியாயமான முறையில் நீதி கிடைப்பதற்கு உறுதுணையாக இருப்பார்கள் என பிரதமருக்கு நினைவுறுத்தினார்.
அண்மையில், மலேசியா ஜாகிர் நாயக்கை இந்தியாவிற்கு நாடுகடத்துவதிலிருந்து தடுக்கலாம் எனும் கருத்தினை பிரதமர் மகாதீர் முன்வைத்திருந்தார்.