கோலாலம்பூர்: நாடாளுமன்ற சிறப்புத் தேர்வுக் குழு (பிஎஸ்சி) புதிய மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் (எம்ஏசிசி) தலைவரான லத்தீஃபா கோயாவை அடுத்த வாரம் மூன்று விடயங்கள் குறித்து விசாரிக்கும் என அக்குழுவின் தலைவர் வில்லியம் லியோங் கூறினார்.
“அவருக்கு ஊழல் போன்ற வழக்குகளை விசாரிப்பதில் எந்த அனுபவமும் இல்லை, மற்றும் அவர் அதனை எவ்வாறு கையாள போகிறார் என்று நாங்கள் அறிய வேண்டும்,” என வில்லியம் ஸ்டார் நாளிதலுக்கு அளித்தப் பேட்டியில் கூறினார்.
மேலும்,ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கு லத்தீஃபா கொண்டிருக்கும் குறிக்கோளையும் தொலைநோக்கு பார்வையும் கண்டறியப் போவதாகவும் அவர் கூறினார்.
வருகிற ஜூன் 20-ஆம் தேதி லத்தீஃபாவுடனான சந்திப்பை பிஎஸ்சி ஏற்பாடு செய்துள்ளது.
கடந்த ஜூன் 1-ஆம் தேதி முன்னாள் ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் சுக்ரி அப்துல் தாம் அப்பதவியிலிருந்து விலகிக் கொள்வதாகக் கூறிய பிறகு வழக்கறிஞர் லத்தீஃபா கோயாவை பிரதமர் மகாதீர் முகமட் அப்பதவியில் நியமித்தார். இந்த நியமனம் குறித்து தாம் பிஎஸ்சியிடம் கலந்தாலோசிக்கவில்லை என பிரதமர் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.
பிரதமரின் இந்த நியமனம் குறித்து தாங்கள் எவ்வித கேள்விகளும் எழுப்ப விரும்பவில்லை என்றும், லத்தீஃபா அவரது பணிகளை எவ்வாறு செய்யவிருக்கிறார் என்பதை மட்டும்தான் வினவ உள்ளதாக வில்லியம் கூறினார்.