பிஷ்கெக்: இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இருநாட்டு தலைவர்கள் குடைப் பிடித்து சென்றது அவர்களின் தன்னடக்கத்தையும் பெருந்தன்மையையும் பிரதிபலிப்பதாக சமூக ஊடகங்களில் மக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு (எஸ்ஓசி) வருகைப் புரிந்த பிரதமர் மோடிக்கு கிர்கிஸ்தான் நாட்டு அதிபர் சூரன்பை ஜீன்பெகவ் குடை பிடித்து அழைத்து சென்றது சமூகப் பக்கங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. இம்மாதிரியான சூழல்களில் தலைவர்களின் பாதுகாவலர்களே குடைப் பிடித்து அவர்களை அழைத்துச் செல்வர். உலக நாடுகளின் தலைவர்கள் இவ்வாறு செய்திருப்பது அவர்களின் பெருந்தன்மையைப் பிரதிபலிப்பதாக உள்ளது.
இதே மாதிரியான மரியாதை பிரதமர் மோடி இலங்கைக்கு சென்றிருந்த போது இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா வழங்கியதாகக் கூறப்படுகிறது. அதற்கு சான்றாக பலப் புகைப்படங்களும் சமூகப் பக்கங்களில் பகிரப்பட்டன.
இவ்விருநாட்டு அதிபர்களின் இந்த செயல் இந்தியப் பிரதமர் மோடியின் மனதைத் தொட்டு விட்டதாகவும் அவர்களின் இந்த செயலுக்கு தலைவணங்குவதாக அவர் குறிப்பிட்டதாகவும் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.