Home இந்தியா பா.ரஞ்சித் வீசிய வாள் பட்ட இடம் மனம் திறக்கப்படாத தமிழர்களின் பெருமையில்!

பா.ரஞ்சித் வீசிய வாள் பட்ட இடம் மனம் திறக்கப்படாத தமிழர்களின் பெருமையில்!

1323
0
SHARE
Ad
இயக்குநர் பா.ரஞ்சித்

இராஜராஜ சோழனைப் பற்றி சமீபத்திய தமது உரையில் இயக்குனர் பா.ரஞ்சித் தற்சார்பான கருத்துகளை முன்வைத்ததாகக் கூறப்படுகிறது. அதுவும் சாதி, இனம் அடிப்படையில் மக்களுக்கிடையே பிளவு ஏற்படுத்தும் வகையில் அவரது உரை இருந்ததாகக் கூறப்பட்டது.

இந்த விவகாரம் அடிப்படையில் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் அவர் மீது இரு பிரிவுகளில் வழக்குத் தொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதாவது சாதி, இனம், மொழி ரீதியாக மக்களைப் பிளவுப்படுத்தும் வகையில் அவரது உரை இருந்ததாகக் குறிப்பிட்டு அவர் மீது 153,153ஏ பிரிவுகளில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இதனிடையே, பா.ரஞ்சித் இந்த வழக்கு தொடர்பில் முன் ஜாமின் கோரியிருந்தார். அம்மனுவில், பலர் இம்மாதிரியான கருத்துகளைப் பொதுவிலும் எழுத்து வடிவிலும் பேசி உள்ளனர் என்றும், தாம் அதே கருத்தினை வெளிப்படுத்தும் போது அது வேறு விதமாகப் பார்க்கப்படுகிறதென்றும் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

ரஞ்சித்தை பிரதிநிதித்த வழக்கறிஞர் கூறுகையில், ரஞ்சித்தின் உரையானது, நீலகண்ட சாஸ்திரி எழுதிய சோழர்கள், தந்தை பெரியாரின் சுயமரியாதை சமதர்மம், குடவாயில் சுப்ரமணியம் எழுதிய தஞ்சாவூர் மற்றும் வெண்ணிலா எழுதிய தேவரடியார் என்ற நூல்களின் அடிப்படையில்தான் அமைந்தது என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆயினும், இது குறித்து கருத்துரைத்த நீதிபதி 1,000 வருடத்திற்கு வாழ்ந்த மன்னரைப் பற்றி எதற்கு இப்போது பேச வேண்டும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கிடையே, ஜூன் 19-ஆம் தேதி வரையிலும் பா.ரஞ்சித் கைது செய்யப்பட மாட்டார் என்ற உத்தரவாதத்தையும் நீதிபதி வழங்கியதாகக் கூறப்படுகிறது.

பா.ரஞ்சித், வரலாற்று விரும்பிகளின் நோக்கம் என்ன?

ரஞ்சித் முன்வைத்த அனைத்து கருத்துகளும் சாதிய அடிப்படையில் முன்வைக்கப்பட்ட ஒரு குற்றச்சாட்டாகவே கவனிக்க வேண்டி உள்ளது. முதலாக, மேடையில் அவர் பேசிய தொனி மற்றும் நோக்கம் வேறொரு திசை நோக்கி பயணம் செய்வதைக் காணலாம்.

வரலாற்று ரீதியாக பேச வேண்டுமென்ற எண்ணம் அவரிடத்தில் இல்லை. தஞ்சை மண் என்ற அடிப்படையில் அவ்விடத்தில் அவர் அதனை பேச வேண்டுமென்ற கட்டாயமும் இல்லை. அவரது உரையில், தனது சாதி, இனம் என்ற எழுச்சிமிக்க சாடல்கள் மட்டும் ஓங்கி நின்றன. வரலாற்றை கூற முற்பட்டிருந்தாலும் அவர் அதனை கையாண்ட விதம் திசை மாறியது.

அதற்காக அவர் கூறியவை அனைத்தும் தவறு என்று நாம் கூறிவிட முடியாது. முதலில் இந்த ‘சாதி’ என்ற சொல்லை பயன்படுத்துவதை எவராகினும் நிறுத்த வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம். இச்சொல் வெறும் சமூகப் பிரிவாக மட்டுமே கருதப்படவில்லை, அது மக்களைப் பிளவுப்படுத்தி அடக்கியாளப் பயன்படுத்தப்படுகிற ஓர் ஆதிக்கக் கருத்தோட்டமாக உருபெற்றுள்ளதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வளவு எளிதில் அதிலே ஊறிப்போனவர்களை பேசி திருத்திவிடலாம் எனும் எண்ணம் மூடத்தனமானது.   

ஒரு வரலாற்று ஆய்வாளராக இருந்து ரஞ்சித்தின் உரையைக் கேட்க வேண்டியிருந்தால், இம்மாதிரியான இடங்களில் வரலாறு பேச வேண்டும் என்ற எண்ணமே மடிந்து விடும். கருத்தியல்களை அதற்குண்டான வரையறைக்குள் விவாதிக்கும் போதுதான் அதற்கான மதிப்பும் ஆழமும் பெறப்படும். கோபத்தினால் ஓரிரு குற்றச்சாட்டுகளை 1,000 வருடத்திற்கு முன் வாழ்ந்த மன்னரை நோக்கி வைக்கும் போது, அதே கோபத்தோடு ஓரிரு வரலாற்றாசிரியர்களும் தங்களின் கோபம் கலந்த சான்றுகளை முன்வைக்கின்றனர்.

இவர்களின் நோக்கம்தான் என்ன? அடிப்படையில் ரஞ்சித் அம்மேடை பேச்சினால் எதனை சுட்டிக் காட்ட, மாற்ற, அல்லது திருத்த முற்பட்டார்? அதற்கு பதிலளித்த பொது மக்கள், ஆர்வக் கோளாறுகள், அரசியல்வாதிகள், சாதிய அடிப்படையிலான சங்கங்கள், வரலாற்றாளர்கள், ஆய்வாளர்கள் எதனை நிலைநிறுத்த மல்லுக்கட்டுகிறார்கள்?

பா.ரஞ்சித் பேசியது

தற்கால இராஜராஜ சோழரின் சிலை- தஞ்சாவூர்

சோழர் காலம் ஓர் இருண்ட காலம் என்ற கருத்தை ரஞ்சித் முன்வைத்துள்ளார். முதலில் வரலாற்று விவகாரங்களைத் தொடும் பொழுது அதன் எல்லா சாரங்களையும் ஆராய்ந்து கூறுவதே சிறப்பாகும். ரஞ்சித் அன்றைக்கு நின்ற மேடையானது இராஜராஜனைப் பற்றி பேச வேண்டிய மேடையல்ல.

ஆனால், அவர் எடுத்துக்கொண்ட கருத்தியலுக்கு இராஜராஜன் தேவைப்பட்டார். இராஜராஜனைப் பற்றி கூறப்படாத (மாற்று வரலாற்றை) கூற வேண்டியக் கட்டாயத்தை அம்மேடை ஏற்படுத்தியது.  ஒரு போதும் ரஞ்சித் இராஜராஜனை போற்றி பேச அம்மேடையானது அமைக்கப்பட்டிருக்காது. அது அவரது தன்மையும் கூட அல்ல.

ஒரு சில நேரங்களில் இம்மாதிரியான எண்ண அலைகளோடு இருப்பவர்களிடம் ஒருவர் செய்த நல்ல விசயங்களைப் பற்றி எடுத்துக் கூறினாலும், அவ்விடத்தில் அவை நிற்க தடுமாறும். அவர்களுக்கு அவ்வாறான கருத்துகள் தேவையற்றது.

நேற்மறையான ஒன்றை எதிர்மறையான கருத்துகளை கொண்டு எந்நேரத்திலும் அவர்களது நியாயங்களைக் கொண்டு சிதற விடுவர். அது சில நேரங்களில் உண்மையாகக் கூட இருக்கலாம். ஆயினும், எல்லா காலங்களிலும் சாதனைப் புரிந்தவர்களின் ஆட்சியிலோ அல்லது தற்காலச் சூழலில் தலைமையிலோ ஏதாவதொரு பின்னடைவு இருக்கவே செய்திருக்கும். அதற்காக, அவர்களின் காலத்தை இருண்ட காலம் என குறிப்பிட்டுக் கூறுவது ஏற்க இயலாததொன்று. 

இராஜராஜன் இன்னார் என்று அவரவர் தங்களின் சாதிகளை வைத்து போட்டிப் போட்டுக் கொண்டிருப்பதாகவும் ரஞ்சித் குறிப்பிட்டிருந்தார். இவ்விவகாரத்தில் ரஞ்சித்தின் வாதத்தை நான் மறுக்கப்போவதில்லை. இராஜராஜன் எந்த சாதியை சார்ந்தவராக இருந்தால் என்ன?

இங்கு பிரச்சனையாக பார்க்கப்படுவது, இவர்களின் சாதிய உணர்ச்சிதான். இராஜராஜன் இன்னாரின் சாதியைச் சேர்ந்தவர் என்ற கருத்து வெளிப்பட்டால், தானாகவே அவரவர் சாதியானது உயர்த்தி பிடிக்கப்படும். இம்மாதிரியான கேவலமான சாதி சார்ந்த அரசியலைத்தான் இவர்கள் தூக்கிப் பிடிக்க துணிகின்றனர் என்ற கருத்தினை நான் ஆமோதிக்கிறேன். இவர்களின் சாதியை மெச்சிக் கொள்வதற்கு 1,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மன்னனும் அவரது புகழும் தேவைப்படுகிறது.      

இராஜராஜன் காலத்தில்தான் தம்முடைய நிலமானது பறிக்கப்பட்டது என்ற கருத்தையும் ரஞ்சித் முன்வைத்துள்ளார். மேலும், சாதி ரீதியிலான ஒடுக்குமுறை இராஜராஜன் காலத்தில்தான் ஓங்கியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். பொதுவாகவே, சமூக மாற்றமானது ஓசையின்றி படிப்படியாய் நிகழ்ந்தது என்று கூறலாம். எப்போது, எவரால் இது நடந்தப்பட்டது எனும் இறுதியான முடிவினை கூறிவிட இயலாது. சரியாகக் கூறப்போனால் கி.பி 12-ஆம் நூற்றாண்டுக்கு பிறகே தமிழகத்தில் சாதி வலுப்பெற்றது எனக் கூறலாம்.

வேட்டைச் சமூகமாக இருந்தவர்கள் மேய்ச்சலை நோக்கி நகர்ந்தனர். தாய்வழிச் சமூகம் தந்தை வழிச் சமூகமாக தலையெடுத்தது. ஆதி பொதுவுடைமைச் சமூகத்தில் இருந்து அடிமைச் சமூகமும் நிலப்பிரபுத்துவ சமூகமும் தோன்றின. இக்காலக்கட்டத்தில்தான் இரு வர்க்கங்கள் உருவெடுத்தன. ஒன்று உழைக்கும் வர்க்கம், மற்றொன்று உழைப்பைச் சுரண்டும் வர்க்கம். அக்காலத்திலேயே இவ்விரு வர்க்கங்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள், மோதல்கள் ஏற்பட்டன.

அக்காலச் சூழலில் இவ்வாறான வேற்றுமைகளும், மோதல்களும் எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்  என்பதை 100 விழுகாடு நம்மால் சரிவரக் கூறிவிட முடியாது. எப்போதும், வரலாற்று நிகழ்வுகளை தற்காலச் சூழலுக்கு ஒப்ப ஒப்பிட்டுப்பார்த்து பகுத்துப்பார்க்க தெரிந்திருக்க வேண்டும். ஒருவேளை ரஞ்சித் இதனை கருத்தில் கொண்டிருந்தால் அவருக்கு இப்புதிய பிரச்சனை எழுந்திருக்காது.

மனித வரலாற்றில் அரசு என்ற அமைப்பு இல்லாதிருந்த காலகட்டம் ஒன்று இருந்தது. அக்காலக்கட்டதில் மக்கள் ஆதி பொதுவுடைமைச் சமூகமாக, இனக்குழுவாக வாழ்ந்தனர். ஆதி பொதுவுடமைச் சமூகத்திலிருந்து அடிமைச் சமூகமும் நிலப்பிரபுத்துவ சமூகமும் தோன்றின. இத்தகைய சூழலில் முடி மன்னர்கள் தம் நாட்டு எல்லையையும் ஆட்சி அதிகாரத்தையும் விரிவுப்படுத்த அண்டை நிலத்தோரோடும் அருகில் உள்ள குறிஞ்சி, முல்லை, நிலங்களில் வாழ்ந்த இனக்குழு மாந்தருடனும் போர்களை நிகழ்த்தினர்.

அப்போர்களைத் தமிழ் இலக்கண நூல்கள் வெட்சி, கரந்தை, உமிஞை, நொச்சி, வஞ்சி, தும்பை எனப் பல வகைகளாகக் குறிக்கின்றன. நிலப்பிரபுத்துவ சமூகத்தில் அரசர்கள் நிகழ்த்திய இப்போர்கள் அவர்களின் மண்ணாசை மற்றும் அதிகாரபோதை காரணமாக நிகழ்த்தப்பட்டவையாகும். இதனை எவராலும் மறுக்க இயலாது. இவ்வாறான சூழ்நிலைகளில் குறிப்பிட்ட ஓர் இனத்தின் நிலங்கள், இராஜராஜன் காலத்தில் பறிக்கப்பட்டன (ரஞ்சித் கூறுவது போல) என்பது உண்மையான கூற்றாக இருக்கவும் முடியாது, அதற்கான வரலாற்று சான்றுகளும் இல்லை.

வரலாறு முழுமையாக பேசப்பட வேண்டும்

பொதுவாகவே, இராஜராஜனை தமிழர்கள் உயர்வாக பார்த்தும் படித்தும் பழகிக் கொண்டவர்கள். அவர் நடத்திய போர்களையும் இரசித்து கொண்டாடினர். சோழப் பேரரசர்களுள் முதலிடம் வகிக்கும் முதலாம் இராஜராஜன் ஆற்றல் மிகு போர்வீரராவார். சோழ நாட்டின் வடக்கு எல்லையை விந்தியமலை விளிம்புவரை கொண்டு சென்றவர். தஞ்சை நகரில் இவர் எழுப்பிய பெருங்கோயில் தமிழர்களின் கலைப் பெருமையை உலகிற்கு உணர்த்தியதுடன் இராஜராஜ சோழரின் பெயரை வரலாற்றில் நிலைக்க வைத்துள்ளது.

தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் (தஞ்சைப் பெரிய கோயில்)

சோழப் பேரரசை விரிவுபடுத்துவதில் பல போர்க்களங்களை இராஜராஜன் கண்டுள்ளார். இவற்றுள் முதல் போர் காந்தளூர்ச் சாலை, கலமறுத்தது என்று வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. சேர நாட்டில், திருவாங்கூர்க்கடலில் நிறுத்தப்பட்டிருந்த கலங்களை ஒரு சேர அழித்ததால் இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. கேரளத்தை வென்ற பின்னர், பாண்டியன் இருந்த திசையில் முதலாம் இராஜராஜன் தன் பார்வையைச் செலுத்தினார்.

வீரபாண்டியனுக்குப் பின் பட்டத்திற்கு வந்த அமரபுயங்கன் சோழருக்கு அடங்க மறுத்தான். அவனை அடக்கியதால் பாண்டிய குலநாசினி என்று இராஜராஜன் அழைக்கப் பெற்றான். பாண்டிய மன்னனை வென்ற பின்னர் கன்னட நாட்டு கங்கர்களையும் இராஜராஜன் பணிய வைத்தார்.

பல்லவர் காலத்திலிருந்தே தமிழ் நாட்டுக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த சாளுக்கியர்களுடன் போர் தொடுத்து அவர்களையும் இராஜராஜன் அடக்கினான். இராஜராஜன் சமயப்பொறை மிக்கவன். நாகைப்பட்டினத்தில் ஒரு பௌத்த விகாரம் கட்டுவதற்கும் பொருளுதவி செய்துள்ளார். இலங்கை மீது படையெடுத்து அங்கும் வெற்றிக்கொடியை இராஜராஜன் பறக்கவிட்டார்.

மேல் கூறியவற்றை, முதலிருந்து படித்து முடிக்கும் வரையில், எம்மன்னன் சிறந்தவன், பல நாடுகளை கவர்ந்தவன் என்ற எண்ணமும் பெருமையும் பொதுவாகவே, வெளிப்படையாக படிப்போர் மனதில் பற்றிவிடும். ஆனால், இதனுள் உட்கடந்து செல்லும் போதுதான் உண்மை நிலவரங்கள் வெளிப்படும்.

அவற்றையும் வரலாறாகவே நாம் கவனிக்க வேண்டுமே தவிர நம் கருத்துகளுக்கு வலு சேர்க்கும் வகையில் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு திணிக்கக்கூடாது. இப்படியாக உயர்வாக பார்த்தவரை திடீரென, அடிக்கடி சாதிய கருத்துகளை தீவிரமாகப் பதிந்து வரும் ஓர் இயக்குனர் சர்ச்சையாகப் பேசியதை ஏற்றுக் கொள்ள முடியாமல் போனதால் ஏற்பட்ட சீற்றம்தான் இது. 

ஒருவேளை ரஞ்சித் வரலாற்று பின்னணியில் தக்க சான்றுகளுடன் இந்த கருத்துகளை முன்வைத்திருந்தால், அதுவும் முறையான சொல்லாடல்களின் வழி தெளிவுப்படுத்திருந்தால் அவருக்கு இந்நிலை நிகழ்ந்திருக்காமல் இருந்திருக்கலாம்.

அவரது நோக்கமானது தற்காலத்தில் நிலவி வரும் சாதிய அரசியலை எதிர்ப்பதாக இருந்தாலும், இல்லையென்றாலும், அதனைக் கடந்து இராஜராஜனைப் பற்றி பேசியதை பெரிய சர்ச்சையாக பார்க்கும் நிலையில் தற்கால சூழல் ஏற்புடையதா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். மொத்தத்தில் இது வரலாற்று உண்மைக்காக நடக்கிற மோதல்கள் அல்ல என்பதை மட்டுமே அறுதியிட்டுக் கூறலாம்.

-நந்தன்