எல்லாத் தமிழ்த் திரைப்படங்களும் அண்மையக் காலமாக சந்தித்து வரும் சோதனைகளைப் போன்று திரையிடப்பட முடியாமல் முடங்கிக் கிடந்த படம் “சார்பட்டா பரம்பரை”.
ஜூலை 22 முதல் அமேசோன் பிரைம் கட்டண வலைத் தளத்தில் வெளியாகியிருக்கிறது.
பா.ரஞ்சித்தின் இயக்கம். கதாநாயகனாக ஆர்யா. குத்துச் சண்டை வாத்தியாராக பசுபதி. பசுபதியின் மகனாக கலையரசன். ஜான் விஜய், சந்தோஷ் பிரதாப் (பார்த்திபனின் “திரைக்கதை வசனம்” படத்தின் கதாநாயகன்) – இவர்கள்தான் படத்தில் நடிப்பவர்களில் நமக்கு நன்கு தெரிந்த முகங்கள்.
மற்றபடி எல்லாமே புதுமுகங்கள், வழக்கமாக பல படங்களில் நாம் பார்த்த துணை நடிகர்கள். இவர்களோடு தமிழர்களின் இன்னொரு மண்வாசனை வாழ்க்கையைத் தத்ரூபமாக நம் கண் முன்னே காட்டியிருக்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித்.
இரத்தமும், அரிவாள் தூக்குதலும், வன்மமும், படம் முழுக்க அதிகமாகப் பரவிக் கிடக்கிறது. இருந்தாலும், அதனூடே 1970-ஆம் ஆண்டுகளில் வட சென்னைப் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கையை பதிவு செய்திருக்கும் முக்கிய வரலாற்றுப் படம் சார்பட்டா பரம்பரை. அவர்களின் வாழ்க்கையில் ஓர் அங்கமாகப் பின்னிப் பிணைந்திருந்த குத்துச் சண்டைப் போட்டிகளை மையப்படுத்தி கதை நகர்கிறது.
கதை, திரைக்கதை என்ன?
பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும் குத்துச் சண்டை போட்டிகளில் சார்பட்டா பரம்பரை என்றும், இடியாப்ப பரம்பரை என்றும் வேறு சில பெயர்களிலும் குழுக்கள் பிரிந்து இயங்கும் வட சென்னைதான் கதைக் களம். 1975-ஆம் ஆண்டுகளில் இந்திரா காந்தி கொண்டு வந்த அவசர காலகட்டத்தில் (எம்ர்ஜென்சி) – கலைஞர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் நடப்பது போன்ற சம்பவங்கள்.
கலைஞரின் ஆட்சியைக் கலைத்து விட்டார்கள், மிசாவில் ஸ்டாலினையே கைது செய்து விட்டார்கள் நாமெல்லாம் எம்மாத்திரம், போன்ற வசனங்களும் இடையிடையே வருகின்றன.
சார்பட்டா பரம்பரையின் வாத்தியார் ரங்கன் (பசுபதி). அவர் மீது பெரும் மதிப்பு கொண்டிருக்கிறார் கபிலன் (ஆர்யா). குத்துச் சண்டையில் மிகுந்த ஆர்வம் இருந்தாலும் அதில் ஈடுபடாமல் மூட்டைத் தூக்கும் தொழிலாளியாக வாழ்கிறார் ஆர்யா. காரணம் தாயாரின் தடை.
ஆர்யாவின் அப்பா புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரராக இருந்து பின்னர் ஒரு கும்பலில் அடியாளாக சேர்ந்து அதன்காரணமாக தாக்குதலில் இறந்தவர். அதனால், மகனுக்கும் அதே போன்ற நிலைமை ஏற்படும் என அஞ்சி, அவனைக் குத்துச் சண்டை பக்கமே தலைகாட்டாமல் தடுத்து வளர்க்கிறார் ஆர்யாவின் தாயார்.
ஒரு கட்டத்தில் சார்பட்டா பரம்பரை பல தோல்விகளைச் சந்திக்க இடியாப்ப பரம்பரையின் எதிர் சவால்களை எதிர்கொள்ள ஆர்யா குத்துச் சண்டையில் இறங்குகிறார். பசுபதியிடம் தீவிரப் பயிற்சி பெறுகிறார்.
குத்துச் சண்டையில் வெற்றிக் கொடியும் நாட்டுகிறார். ஆனால் அதைத் தொடர்ந்து எழும் வன்மம், துரோகம், ஒருவரையொருவர் பின்னால் இருந்து காட்டிக் கொடுப்பது, முதுகில் குத்துவது போன்ற சம்பவங்களுடனான திரைக்கதையுடன் கதை நகர்கிறது.
படத்தில் கவரும் சிறப்பம்சங்கள்
படம் முழுக்க இயல்பான சம்பவங்களின் மூலமே அந்த மக்களின் உணர்வுகளைக் காட்டியிருக்கிறார் இயக்குநர். இறுதிவரை போரடிக்காமல், விறுவிறுவென்று திரைக்கதை நகர்வது இயக்குநரின் திறனுக்கு சான்று.
வட சென்னை மக்களின் பழக்க வழக்கங்களை படத்தில் புகுத்தியிருப்பதன் மூலம் தமிழ் நாட்டு தமிழர்களின் இன்னொரு மண்வாசனைப் பகுதியைப் பதிவு செய்யும் முக்கியப் படமாக அமைகிறது சார்பட்டா பரம்பரை.
உதாரணத்திற்கு ஆர்யா மனைவியிடம் கூறுகிறார் : “உனக்குப் பிடிக்குமேன்னு மாட்டுக் கறி பிரியாணி வாங்கிட்டு வந்திருக்கிறேன்”
படத்தை கட்டண வலைத் திரையில் திரையிட்டிருப்பதால் தாராளமாக முத்தக் காட்சிகள் இடம் பெறுகின்றன. ஆனால், கணவன் மனைவிக்கு இடையில் நடைபெறும் காட்சிகளாக வசனங்களோடு வைத்திருப்பதால் ஆபாசம் தொனிக்கவில்லை.
நடிகர்களில் ஆர்யாவின் கடும் உழைப்பு படம் முழுக்கத் தெரிகிறது. குத்துச் சண்டை வீரனுக்கு ஏற்ற வகையில் கட்டுமஸ்தான உடம்போடு வருவது – பின்னர் குத்துச் சண்டையை விட்டதும் இளம் தொந்தியுடன் காட்சி தருவது – பின்னர் மீண்டும் கட்டுமஸ்தான உடல் – என உழைப்பைக் கொட்டியிருக்கிறார். வீணாகவில்லை. மெட்ராஸ் பட்டணம் போன்ற படங்களுக்குப் பின்னர் ஆர்யாவை “சார்பட்டா” எப்போதும் நினைவு கூர வைக்கும்.
ஜான் விஜய் வழக்கமான கோணங்கித்தனங்கள் இல்லாமல் ஆங்கிலம் கலந்து பேசும் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்.
படத்தில் நடித்திருக்கும் புதிய நடிகர்களில் அசத்துவதும் நம்மை நிமிர்ந்து பார்க்க வைப்பதும் ஆர்யாவின் மனைவி மாரியம்மாவாக வரும் துஷாரா என்ற புதுமுகம். தமிழ் நாட்டுக்கே உரிய தோற்றம். இருந்தாலும் இயல்பாக வசனங்களை உச்சரிப்பதிலும், நடிப்பதிலும் அசத்தியிருக்கிறார்.
பசுபதியைப் பற்றி சொல்லத் தேவையில்லை. படத்தின் வெற்றிக்கு கதாபாத்திரமாகவும், நடிப்பிலும் முக்கியத் தூணாக நிற்பவர் அவர்தான்.
படத்தில் நம்மைக் கவரும் மற்றொரு நடிகர் டான்சிங் ரோஸ் என்ற குத்துச்சண்டை வீரராக வரும் ஷபீர் கல்லாரக்கல். உடல் மொழியால் பிரமிக்க வைக்கிறார். தமிழ்த் திரையுலகில் அடுத்து ஒரு சுற்று வரும் வாய்ப்பு உண்டு. நமக்குப் புதுமுகமாகத் தெரிந்தாலும் 15 ஆண்டுகளாக வாய்ப்புகளுக்காக போராடியிருப்பதாகக் கூறியிருக்கிறார்.
கதாபாத்திரங்கள் எல்லாம் படம் முழுக்க பேசிக் கொண்டேயிருந்தாலும் நமக்கு போரடிக்கவில்லை. இயக்குநரின் திரைக்கதை அமைப்புக்கும், படத் தொகுப்பாளரின் திறனுக்கும் இது சான்று.
குத்துச் சண்டை காட்சிகளின் நீளத்தை சற்றே குறைத்திருந்தால், படத்தின் விறுவிறுப்பு இன்னும் கூடியிருக்கும்.
“சார்பட்டா பரம்பரை” தமிழ் நாட்டு மக்களின் ஒரு பிரிவினரின் – ஒரு வட்டாரத்தின் – மண்மொழியை படம் பிடித்துக் காட்டிய விதத்தில் – அதிலும் சிறந்த முறையில் உருவாக்கப்பட்டிருப்பதன் மூலம் – உயர்ந்து நிற்கிறது.
“சார்பட்டா பரம்பரை, இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு இன்னொரு மகுடம். அவரின் கனவுக் கபிலனைத் திரையில் கொண்டு வந்த விதத்திலும் ஆர்யாவுக்கும் பெருமை சேர்க்கும் படம்.