Home நாடு ஒப்பந்த மருத்துவர்கள் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் – 5,000 பேர் பங்கேற்பு!

ஒப்பந்த மருத்துவர்கள் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் – 5,000 பேர் பங்கேற்பு!

567
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நாளை திங்கட்கிழமை ஜூலை 26-ஆம் தேதி திட்டமிட்டபடி ஒப்பந்த மருத்துவர்கள் ஹர்த்தால் எனப்படும் ஒத்துழையாமை போராட்டத்தை நடத்தவிருக்கின்றனர்.

இந்தப் போராட்டத்தில் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் மருத்துவர்கள் வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் போராட்ட இயக்கத்தின் பிரதிநிதியான டாக்டர் உமார் பாராக்கா இதனை அறிவித்தார்.

#TamilSchoolmychoice

கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாகத் தீராத பிரச்சனையாக இருந்து வரும் ஒப்பந்த மருத்துவர்களுக்கான பிரச்சனையைத் தீர்க்காவிட்டால் ஜூலை 26-ஆம் தேதி ஹர்த்தால் போராட்டம் நடைபெறும் என ஒப்பந்த மருத்துவர்கள் அறிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து சுகாதார அமைச்சின் கீழ் பணிபுரியும் சுமார் 23 ஆயிரம் ஒப்பந்த மருத்துவர்களுக்கான புதிய சலுகைகள் அடங்கிய அமைச்சரவையின் முடிவு குறித்து கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் மொகிதின் யாசின் அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பின்படி அனைத்து ஒப்பந்த மருத்துவர்களின் ஒப்பந்த காலமும், அவர்களின் கட்டாய பணிக்காலம் முடிந்த பின்னர் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். இந்த ஒப்பந்த நீட்டிப்பு உடனடியாக அமுலுக்கு வந்தது.

இதன் மூலம் அவர்கள் நிபுணத்துவ மேற்படிப்பைத் தொடர முடியும்.

நிபுணத்துவ படிப்புகளுக்காக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒப்பந்த மருத்துவர்களின் பணிக்காலம் மேலும் 4 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். இதன் மூலம் அவர்கள் நிபுணத்துவப் படிப்பை நிறைவு செய்ய முடியும்.

மேலும் ஒப்பந்த மருத்துவர்கள் நிபுணத்துவப் படிப்புக்காக செல்லும்போது அவர்களுக்கு முழு சம்பளத்துடன்  கூடிய விடுமுறை வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்தார்.

இந்தப் பிரச்சனைக்கு சிறப்புக் குழு மூலம் முழுமையான தீர்வுத் திட்டம் ஒன்றைத் தயாரிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் அந்த அறிவிப்பை மலேசிய மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் எம்.சுப்பிரமணியம் (படம்) வரவேற்றார். எனினும் இந்தப் பிரச்சனைக்கு நீண்ட காலத் தீர்வு ஒன்றைக் காண வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

எனினும் 4 ஆண்டுகள் மட்டுமே ஒப்பந்த காலம் அதிகபட்சமாக நீட்டிக்கப்பட்டிருப்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றல்ல என்றும் சில தரப்புகள் தெரிவித்திருக்கின்றன. மருத்துவர்களின் கோரிக்கைகளுக்கு பல அரசியல் கட்சிகளும் சமூக இயக்கங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாளை திங்கட்கிழமை காலை 11.00 மணிக்கு ஒப்பந்த மருத்துவர்கள் தங்களின் பணிகளில் இருந்து வெளிநடப்பு செய்வர்.

எனினும் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் நோயாளிகள், அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் ஆகியோருக்கு எந்தவித பிரச்சனையும் நேராமல் இருப்பதையும் மருத்துவர்கள் உறுதி செய்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.