Home நாடு ஒப்பந்த மருத்துவர்களுக்கு புதிய சலுகைகள் – பிரதமர் அறிவித்தார்

ஒப்பந்த மருத்துவர்களுக்கு புதிய சலுகைகள் – பிரதமர் அறிவித்தார்

512
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : தங்களின் 5 ஆண்டுகால கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் புறக்கணித்து வரும் மத்திய அரசாங்கத்திற்கு எதிராக எதிர்வரும் ஜூலை 26-ஆம் தேதி போராட்டம் நடத்தவிருப்பதாக ஒப்பந்த மருத்துவர்கள் அறிவித்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து அவர்களுக்கான புதிய சலுகைகள் அடங்கிய அமைச்சரவையின் முடிவு குறித்து இன்று வெள்ளிக்கிழமை (ஜூலை 23) பிரதமர் மொகிதின் யாசின் அறிவித்தார்.

அந்த அறிவிப்பின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  • அனைத்து ஒப்பந்த மருத்துவர்கள், பல் மருத்துவர்கள், மருந்தக அதிகாரிகள் என அனைவரின் ஒப்பந்த காலமும், அவர்களின் கட்டாய பணிக்காலம் முடிந்த பின்னர் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். இந்த ஒப்பந்த நீட்டிப்பு உடனடியாக அமுலுக்கு வருகிறது.
  • இதன் மூலம் அவர்கள் நிபுணத்துவ மேற் படிப்பைத் தொடர முடியும்.
  • நிபுணத்துவ படிப்புகளுக்காக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒப்பந்த மருத்துவர்களின் பணிக்காலம் மேலும் 4 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். இதன் மூலம் அவர்கள் நிபுணத்துவப் படிப்பை நிறைவு செய்ய முடியும்.
  • ஒப்பந்த மருத்துவர்களின் ஒப்பந்த காலத்தின் போதான சலுகைகள் அரசாங்க சேவையில் நிரந்தரமாக்கப்பட்டவர்களின் சலுகைகளைப் போன்றே வழங்கப்படும்.
  • ஒப்பந்த மருத்துவர்கள் நிபுணத்துவப் படிப்புக்காக செல்லும்போது அவர்களுக்கு முழு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படும். மற்ற அரசாங்க சேவையில் உள்ளவர்களுக்கும் இதே போன்ற சலுகைகள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
  • இந்தப் பிரச்சனைக்கு குறுகிய கால, மத்திம கால, நீண்டகால தீர்வுகளைக் காண உடனடியாக சுகாதார அமைச்சையும் மற்ற தரப்புகளையும் உள்ளடக்கிய சிறப்புக் குழு மூலம் திட்டம் ஒன்றைத் தயாரிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
#TamilSchoolmychoice

மருத்துவர்கள் உள்ளிட்ட முன்கள சுகாதாரப் பணியாளர்களின் சேவைகளையும் தியாகங்களையும் தாங்கள் உணர்ந்திருப்பதாகவும் மொகிதின் யாசின் தனது அறிக்கையில் தெரிவித்தார்.