கொழும்பு: இலங்கையில் ‘இராவணா 1’ எனப்படும் செயற்கைக் கோள் அனைத்துலக விண்வெளி நிலையத்திலிருந்து கடந்த திங்கட்கிழமை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.
அனைத்துலக விண்வெளி நிலையத்திலிருந்து 400 கிலோமீட்டர் தூரத்தில் ‘இராவணா 1’ செயற்கைக் கோள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இலங்கையை சேர்ந்த இருவரின் முயற்சியில் உருவாக்கப்பட்ட ‘இராவணா 1’ செயற்கைக் கோள் கடந்த ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி அமெரிக்காவிலிருந்து விண்ணுக்கு வெற்றிகரமாக பாச்சப்பட்டிருந்தது.
தரிந்து தயாரத்ன மற்றும் துரனி ஷாமிகா ஆகிய இரண்டு இலங்கையர்களால் தயாரிக்கப்பட்ட ‘இராவணா 1’ செயற்கைக் கோள் கடந்த பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பார்ட்ஸ் 3 திட்டம் என்ற பெயரில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இராமயணத்தில் வரும் இராவணனின் விண்வெளி தொழில்நுட்பத்தை உலகிற்கு வெளிப்படுத்தும் நோக்கத்துடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக இலங்கை விண்வெளி மையம் அறிவித்திருந்தது.