Home நாடு ஜாகிர் நாயக் மீது இண்டர்போல் சிவப்பு எச்சரிக்கை இல்லை – மொகிதின் கூறுகிறார்

ஜாகிர் நாயக் மீது இண்டர்போல் சிவப்பு எச்சரிக்கை இல்லை – மொகிதின் கூறுகிறார்

1144
0
SHARE
Ad

கோலாலம்பூர் – சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக்கை இண்டர்போல் எனப்படும் அனைத்துலகக் காவல் துறை இதுவரையில் சிவப்பு எச்சரிக்கைப் பட்டியலில் சேர்க்கவில்லை. நாடு கடத்தும் விண்ணப்பத்தை விசாரிக்கும் முன்னர் சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் கண்டு கைது செய்ய இத்தகைய சிவப்பு எச்சரிக்கை முன்னறிவிப்பு முதலில் விடுக்கப்படும். இந்த விவரங்களை உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் வெளியிட்டார்.

ஐக்கிய நாட்டு சபையின் பாதுகாப்பு மன்றத்தின் தீர்மானங்களின்படி ஜாகிர் நாயக் இன்னும் சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகளின் பட்டியலிலும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஜாகிர் நாயக் விவகாரம் குறித்து ஆகக் கடைசியான தகவல்கள் என்ன என குபாங் கெரியான் பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் துவான் சைட் இப்ராகிம் துவான் மான் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே மொகிதின் யாசின் இவ்வாறு தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இண்டர்போல் அமைப்பில் உறுப்பினராக இருக்கும் ஒரு நாடு முதலில் ஒரு நபர் மீது கைது ஆணையைப் பிறப்பித்து அதன் பின்னரே அவரை சிவப்புப் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கும்.

சமூக ஊடகங்களில் குறிப்பிடப்படுவது போல் ஜாகிர் நாயக்கிற்கு எந்தவித சிறப்பு சலுகைகளும் காட்டப்படவில்லை என்றும் அவர் சட்டபூர்வமாக நாட்டிற்குள் வந்தார், சட்டபூர்வமாகவே இங்கிருந்து வெளிநாடுகளுக்கு சென்று வந்தார் எனவும் மொகிதின் யாசின் குறிப்பிட்டார்.

தூதரகப் பரிமாற்றங்களின் வழி இந்தியா ஜாகிர் நாயக் மீதான கைது கோரிக்கையை கடந்த 29 டிசம்பர் 2017-இல் மலேசியாவுக்கு அனுப்பியது. அதன் தொடர்ச்சியாக அவரை நாடு கடத்தும் விண்ணப்பத்தை இந்திய அரசாங்கம் 19 ஜனவரி 2018-இல் மலேசியாவிடம் சமர்ப்பித்தது.

மலேசிய அரசாங்கத்திற்கும், இந்தியாவுக்கும் இடையிலான நாடுகடத்தும் விவகாரம் தொடர்பிலான சட்டத்தில் (Extradition Act 1992 – Act 479), குற்றம் சாட்டப்படும் நபருக்கு அவரது இனம், மதம் குடியுரிமை அல்லது அரசியல் கொள்கை ஆகியவற்றின் காரணமாக நியாயமான விசாரணை கிடைக்க வாய்ப்பில்லை எனக் கருதப்படுமானால், அவர் மீதான நாடு கடத்தும் விண்ணப்பத்தை காரணம் கூறாமல் நிராகரிக்கலாம் என்ற சட்டவிதி இருக்கிறது. அதன் அடிப்படையிலேயே மலேசியா ஜாகிர் நாயக்கை நாடு கடத்தும் விண்ணப்பத்திற்கு இதுவரையில் அனுமதி அளிக்கவில்லை என்றும் மொகிதின் யாசின் விளக்கியுள்ளார்.