கோலாலம்பூர்: பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலி, அன்வார் இப்ராகிமுக்கு எதிராக பிரதமராக பதவி ஏற்க வாய்ப்பில்லை என்பதை அறிந்திருக்க வேண்டும் என்று சுங்கை பெலெக் சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியு கூறியுள்ளார்.
பிகேஆர், அமானா மற்றும் ஜசெக கட்சிகள் அடுத்த பிரதமராக அன்வாரை ஆதரிக்கிறார்கள் என்று அவர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெளிவுப்படுத்தி உள்ளார்.
அஸ்மின் அலி பிரதமரின் தனிப்பட்ட விருப்பம் கொண்ட தலைவராக இருந்த போதிலும், டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு பதிலாக பக்காத்தான் ஹாராப்பான் அன்வாரே பிரதமராக பதவி ஏற்க வேண்டும் என்று ஒப்புக் கொண்டது என்று குறிப்பிட்டிருந்தார்.
அஸ்மினுக்கு ஆதரவளிக்க அம்னோ மற்றும் பாஸ் கட்சி உறுப்பினர்கள் பெருமளவில் இடம்பெயர்ந்தால் மட்டுமே இது நடக்க சாத்தியம் என்று கூறிய லியு, ஆனால் அது கூடிய விரைவில் நடக்கக்கூடியது அல்ல என்று கூறினார்.
அன்வாரிடம் அதிகாரத்தை ஒப்படைக்க காலக்கெடுவை அமைப்பதன் மூலம் பிரதமர் மகாதீர் எந்தவொரு நிச்சயமற்ற தன்மையையும் அகற்ற இயலும் என்று அவர் தெளிவுப்படுத்தினார்.
பக்காத்தான் ஹாராப்பானின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த பிகேஆர் கட்சியின் நிலைத்தன்மை மிகவும் முக்கியமானது என்று லியு கூறினார்.