கோலாலம்பூர்: மித்ரா அமைப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதி விநியோகிக்கப்படும் முறைகளை மாற்றுமாறு மலேசிய வெளிப்படைத்தன்மை அமைப்பு (டிஐஎம்) பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தியைக் கேட்டுக் கொண்டுள்ளது.
ஊழல் கண்காணிப்புக் குழுவாக செயல்படும் அவ்வமைப்பின் தலைவர் டாக்டர் முகமட் மோகன் மலேசியாகினியிடம் கூறுகையில், தேசிய முன்னணி அரசாங்கத்தின் நடைமுறைகளை மித்ரா மீண்டும் செய்யக்கூடாது என்று கூறினார். முன்னதாக, இது குறித்து பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் பி. இராமசாமி, சம்பந்தப்பட்டவர்களுக்கு உதவிகள் நேரடியாக சென்றடைய வேண்டும் குறிப்பிட்டிருந்தார்.
“சங்கங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மூலம் செல்லும் இந்த முறையை நிறுத்துமாறு நாங்கள் அமைச்சரைக் கேட்டுக் கொள்கிறோம். அதற்கு பதிலாக எந்தவொரு முறைகேட்டையும் தவிர்க்க நிதிகளை நேரடியாக தேவைப்படுபவர்களுக்கு கொடுக்கலாம்.” என்று அவர் கூறியுள்ளார்.
தற்போது மித்ராவின் இணையதளத்தில் கிடைக்கும் தகவல்களுடன் ஒப்பிடும்போது, மித்ராவின் செலவு குறித்த கூடுதல் விவரங்களை அவ்வமைப்பு வெளியிட வேண்டும் என்று டிஐஎம் கூறியுள்ளது.
“இதில் உதவி பெறுபவர்கள் யார், அவர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி அளவு மற்றும் எந்த நோக்கத்திற்காக, யார் கண்காணிக்கிறார்கள் என்ற விவரங்கள் இருப்பது முறையாக இருக்கும்” என்று மோகன் கூறினார்.
“அதிக வெளிப்படைத்தன்மை அரசாங்கத்தின் சொந்த நலனுக்கு நன்மை பயக்கும். இது நியாயமற்ற ஊகங்களைத் தவிர்ப்பதற்கான ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செயல்படுகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.