கோலாலம்பூர்: ஹாங்காங்கில் நடந்து வரும் போராட்டம் காரணமாக, நாடு திரும்ப விரும்பும் சுற்றுலாப் பயணிகள் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் தங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஸ்டார் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இப்பதற்றச் சூழல் காரணமாக சில விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதால், கடைசி நிமிட பயண ஏற்பாடுகளை அவர்கள் செய்ய வேண்டியிருந்ததாக ஹாங்காங் பயணிகள் தெரிவித்துள்ளனர்.
யான் லோ (30) எனப்படுபவர், தாங்கள் பிற்பகலில் ஹாங்காங்கிற்கு திரும்ப வேண்டிய விமானம் இரத்து செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். அவரது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன், ஆசிரியருமான அவர் கடந்த ஒன்பது நாட்களாக மலேசியாவைச் சுற்றிப்பார்க்க வந்துள்ளார்.
“விமான நிறுவனம் எங்களுக்கு வேறு விமானத்தை ஏற்பாடு செய்துள்ளது. ஆயினும், எனது குழந்தைகள் மற்றும் அவர்களின் பாதுகாப்பிற்காக நான் கவலைப்படுகிறேன்.” என்று அவர் கூறினார்.
“அடுத்த விமானத்திலாவது நாட்டிற்கு திரும்புவோமா அல்லது ஹாங்காங்கின் நிலைமை அந்நேரத்தில் எப்படியிருக்கும் என்பது எங்களுக்குத் தெரியாது,” என்று அவர் நேற்று திங்கட்கிழமை விமான நிலையத்தில் கூறினார்.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஹாங்காங்கில் போராட்டக்காரர்களுக்கும் அரசாங்கத் தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதல்களினால் அந்நாடு தற்போது பாதுகாப்பற்ற சூழலை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.