கோலாலம்பூர்: பெர்சே 2.0 மற்றும் மலேசிய முஸ்லீம் இளைஞர் இயக்கம் (அபிம்) உள்ளிட்ட இதர அரசு சாரா நிறுவனங்கள், 2021-க்குள் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் பிரதமராக பொறுப்பேற்க பிரதமர் மகாதீர் தெளிவான மாற்றத் திட்டத்தை வகுக்க வேண்டும் என்று விரும்புவதாக கூட்டு அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளனர்.
அரசியல் நிலைத்தன்மைக்காக துன் டாக்டர் மகாதீர் முகமட் குறிப்பிடப்பட இருக்கும், அந்த தேதிக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் பிகேஆர் கட்சித் தலைவரை துணைப் பிரதமராக்க வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகிறார்கள்.
“நம்பிக்கைக் கூட்டணியின் முக்கிய அங்கமான பிகேஆரின் தற்போதைய பகை, நமது குடிமக்கள் மற்றும் அனைத்துலக சமூகத்தினரிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தி வருகிறது. ஏனெனில் இது இக்கூட்டணியை உடைத்து நமது நாட்டை அரசியல் சீர்குலைவுக்குள்ளாக்கி விடும்” என்று அக்குழு தெரிவித்துள்ளது.
“ஒரு தெளிவான மற்றும் பகிரங்கமாக அறியப்பட்ட இடைநிலைத் திட்டம், உறுதியற்ற தன்மையிலிருந்தும், கூட்டணியின் முறிவைக் காண விரும்புவோரால் நிகழ்த்தப்படும் வதந்திகள் மற்றும் சதி கோட்பாடுகளை உடைத்து விடும்” என்று அக்குழு கூறியது.
தற்போதைய நிலைமை மீண்டும் நிகழாமல் இருக்க, நம்பிக்கைக் கூட்டணி தலைமைத்துவம், பிரதமர் பதவியை இரண்டு பதவிக் காலத்திற்கு மட்டுப்படுத்துவதோடு, பிரதமரின் அதிகாரத்தை குறைக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.