கோலாலம்பூர்: லோ லோ டேக் 2010-இல் அவருக்கு 200,000 அமெரிக்க டாலர் கடன் கொடுத்ததாக, நஜிப் ரசாக்கின் முன்னாள் சிறப்பு அதிகாரி அம்ஹாரி எபெண்டி நாசாருடின் நீதிமன்றத்தில் கூறினார்.
வழக்கறிஞர் முகமட் ஷாபி அப்துல்லாவுடனான குறுக்கு விசாரணையின் போது, எட்டாவது சாட்சியான அம்ஹாரி, கோத்தா டாமான்சாராவில் உள்ள தனது வீட்டை விற்று அப்பணத்தை திருப்பிச் செலுத்த விரும்பியதாகக் கூறினார்.
அம்ஹாரி ஆரம்பத்தில் பேங்க் நெகாரா மற்றும் பிற நிதி நிறுவனங்களிடமிருந்து கடன்களைப் பெற முயன்றதாகவும், மேலும், சில நபர்களிடமிருந்து கடன் வாங்க முயற்சித்ததைக் கூறினார். ஆயினும், அவை யாவும் பலன் தரவில்லை என்று குறிப்பிட்டார்.
அப்போதுதான், அல்ஹோ சான்ஸ் என்ற நிறுவனத்தில் இருந்து தனது மே பேங்க் கணக்கிற்கு ஜோ லோ பணம் கொடுக்க ஒப்புக்கொண்டதாக அவர் கூறினார்.
எவ்வாறாயினும், வீட்டை விற்க முடியாததால், ஜோ லோவுக்கு அப்பணத்தை திருப்பித் தரவில்லை என்று அம்ஹோரி கூறினார். ஆயினும், பணத்தை உடனடியாக திருப்பித் தருமாறும் ஜோ லோ கேட்டுக் கொள்ளவில்லை என்று அவர் தெரிவித்தார்.
“பின்னர் நான் மீண்டும் பணம் செலுத்த முயற்சித்தேன். நான் வீட்டை அவர் பெயருக்கு மாற்ற முடியும் என்று அவரிடம் சொன்னேன். ‘உங்கள் நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்‘ என்று அவர் கூறினார்” என்று அம்ஹாரி விவரித்தார்.
அக்கடனுக்கான எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் எதுவும் செய்யவில்லை என்றும், அவ்வாறு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று ஜோ லோ கூறியதால் அவ்வாறு செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.