புதுடில்லி – ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் எதிர்வரும் செப்டம்பர் 19 வரை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என புதுடில்லி சிறப்பு நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் திஹார் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார்.
சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வுத் துறையின் தடுப்புக் காவலில் இருந்து வரும் சிதம்பரத்தின் காவல் இன்று வியாழக்கிழமையுடன் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து அவரைத் தொடர்ந்து சிறையில் வைப்பதற்கு சிபிஐ கோரிக்கை விடுத்தது. எனினும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிதம்பரத்தின் வழக்கறிஞர்கள் அவரை அதே ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் கீழ் கள்ளப்பணப் பரிமாற்றம் தொடர்பில் அமுலாக்கப் பிரிவின் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க கோரிக்கை விடுத்தனர்.
எனினும், சிதம்பரம் தரப்பின் விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து அவர் திஹார் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் தனிச் சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த ஆகஸ்ட் 21 இரவு கைது செய்யப்பட்ட சிதம்பரம் ஐந்து முறை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு மொத்தம் 15 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
தற்போது திஹார் சிறையில் இருக்கும் சிதம்பரம் எதிர்வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி தனது பிறந்த நாளை சிறைச்சாலையில் கழிப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.