கோலாலம்பூர்: 2012-ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டத்தின் (சொஸ்மா) கீழ் புத்ராஜெயாவைச் சேர்ந்த பல உயர் அரசு அதிகாரிகள் மற்றும் அரசுத் துறை ஊழியர்களை காவல் துறையினர் தடுத்து வைத்துள்ளனர்.
பினாங்கு நகரில் 350,000 ரிங்கிட் மதிப்புள்ள மைகாட்டுகளை வெளிநாட்டினருக்கு விற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக ஹாரியான் மெட்ரோ அறிவித்திருந்ததாக மலேசியாகினி பதிவிட்டுள்ளது.
மலேசிய கடப்பிதழுக்கு விண்ணப்பித்த சீனப் பெண் வழக்கு தொடர்பாக மலேசிய குடிநுழைவுத் துறை அளித்த அறிக்கைக்குப் பின்னர் இந்த கைது செய்யப்பட்டுள்ளது.
அப்பெண்ணின் மைகாட் சட்டபூர்வமானது என்றாலும், அந்தத் துறையின் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டபோது, தேசிய மொழியில் சரியாக தொடர்பு கொள்ளத் தவறியதால், அவரது குடியுரிமை நிலை குறித்த சந்தேகங்கள் ஏற்பட்டதாக அவ்வறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
“மலாய் மொழியில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் அவர் பதிலளிக்கத் தவறிவிட்டார். கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் சிரித்தார்,” என்று அதில் குறிப்பிட்டிருந்தது.
இதனையடுத்து, இந்த அறிக்கையை விசாரிக்க காவல்துறையினர் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். மொத்தம் ஆறு மைகாட் அட்டைகளை இக்குழு வெற்றிகரமாக விற்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.