கோலாலம்பூர்: பேரரசியார் தெங்கு அசிசா அமினா மைமுனா இஸ்கண்டாரியா தனது டுவிட்டர் கணக்கை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என அனைத்து தரப்பு மலேசியர்களும் டுவிட்டரில் ஒன்று திரண்டு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
#AmpunTuanku “அம்புன் துவான்கு” எனும் ஹேஷ்டேக் இன்று காலை வியாழக்கிழமை தொடங்கி மலேசியாவின் பிரபலமாக இருந்து வருகிறது. பின்பு காலை 11 மணிக்கு #PermaisuriAgong “பெர்மாய்சுரி அகோங்” எனும் ஹேஷ்டேக் முன்னிலையில் இருக்கத் தொடங்கியது.
பல்லாயிரக்கணக்கான டுவிட்டர் பயனர்கள் தங்கள் சோகத்தை வெளிப்படுத்திய நிலையில் மீண்டும் பேரரசியார் தெங்கு அசிசாவை தம் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவும், அவரது டுவிட்டர் கணக்கை மீண்டும் செயல்படுத்தவும் கேட்டுக் கொண்டனர்.
பேரரசியார் நேற்று புதன்கிழமை இரவு தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கை முடக்கியதாக நம்பப்படுகிறது.
அவரது கணக்கு ஏன் செயலிழக்கப்பட்டது என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வழங்கப்படவில்லை என்றாலும், டுவிட்டர் பயனர்கள் இது இணைய அச்சுறுத்தலின் விளைவாக இருக்கலாம் என்று கருதுகின்றனர்.
முன்னதாக மெர்டேகா தின கொண்டாட்டத்தின் போது, பேரரசியார் அணிவகுப்பின் அதிகமான புகைப்படங்களை எடுத்ததாக சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டார். சிலர் “ஒரு சிறு குழந்தையைப் போலவே நடந்துகொள்கிறார்கள்” என்று சொல்லியும் பதிவிட்டிருந்தனர்.
அதற்கு பதிலளித்த பேரரசியார், தேசிய தின அணிவகுப்பின் போது தனது தொலைபேசியில் மாமன்னர் புகைப்படங்களை எடுக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டதாகவும், மேலும் அவர் மாமன்னரின் கட்டளையை பின்பற்றியதாகவும் கூறியிருந்தார்.
பல மலேசியர்கள் அவரது சாதமாக எழுந்து, அவரது நேர்மையான மற்றும் அன்பான டுவீட்டுகளை பெருமையாகக் கொண்டாடினர்.