புத்ரா ஜெயா – மலேசியாவில் இயங்கும் தனியார் கல்லூரிகளில் மற்றும் பல்கலைக் கழகங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
மலேசியாவில் பயிலும் ஒவ்வொரு வெளிநாட்டு மாணவனும் ஆண்டுக்கு 46 ஆயிரம் ரிங்கிட் செலவழிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அந்த மாணவனின் குடும்பத்தினர் உடன் வந்து மலேசியாவில் தங்கினால் இதே தொகை 88 ஆயிரமாக உயர்கிறது என்றும் அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தகவல்களைத் தெரிவித்த கல்வி அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ டாக்டர் முகமட் கசாலி அபாஸ், வெளிநாட்டு மாணவர்களின் கல்விக் கட்டணம், வாழ்க்கைச் செலவினங்கள், மற்றும் இதர சேவைகளைப் பெறுவது ஆகியவற்றால் நாட்டுக்கு சராசரியாக 7.2 பில்லியன் ரிங்கிட் வருமானம் கிடைப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில் மேற்குறிப்பிட்ட செலவினங்கள் ஆண்டுக்கு 10 விழுக்காடு அதிகரித்து வருகின்றன. இதை வைத்துப் பார்க்கும்போது 2020 ஆண்டில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 200 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்ற இலக்கை நாம் அடையும்போது இதன் மூலம் நாட்டிற்குக் கிடைக்கக் கூடிய வருமானம் 15.6 பில்லியனாக உயரும் என மதிப்பிடப்படுகிறது என்றும் முகமட் கசாலி இன்று நடைபெற்ற உயர் கல்வியை உலகமயமாக்கும் கருத்தரங்கத்தில் உரையாற்றும்போது கூறினார்.
இந்த ஆண்டு மார்ச் மாதத்தோடு மலேசியாவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 127,583 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 70 விழுக்காட்டினர் தனியார் உயர்கல்வி நிலையங்களைச் சேர்ந்தவர்கள். எஞ்சியவர்கள் அரசாங்கப் பொது உயர்நிலைக் கல்விக் கூடங்களைச் சேர்ந்தவர்களாவர்.