ஸ்கூடாய் – ஜோகூர் மாநிலத்திலுள்ள இந்திய மாணவர்கள் எஸ்பிஎம் தேர்வுகளில் தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்கள் தமிழ் மொழியில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கிலும், அந்த மாநிலத்திலுள்ள அனைத்து எஸ்பிஎம் தமிழ்மொழி தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் பயிற்சிப் புத்தகங்களை ஜோகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் எஸ்.இராமகிருஷ்ணன் அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

இந்த நூல்களின் மூலம் பெறும் பயிற்சிகளினால் இந்த ஆண்டு எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்ச்சித் தரமும், விகிதமும் உயரும் என எதிர்பார்ப்பதாகவும் இராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
கடந்த சனிக்கிழமை செப்டம்பர் 7-ஆம் நாள் ஸ்கூடாய் தேசிய இடைநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எஸ்பிஎம் தேர்வுகளில் தமிழ் மொழியைக் கற்பிக்கும் இடைநிலைப் பள்ளி ஆசிரியர்களின் மூலமாக இந்தப் பயிற்சி நூல்கள் வழங்கப்பட்டன.

இராமகிருஷ்ணனின் சார்பில் அவரது செயலாளரும் பிரதிநிதியுமான கேத்தி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆசிரியர்களிடம் மாணவர்களுக்குரிய நூல்களை ஒப்படைத்தார்.
எஸ்பிஎம் தமிழ் மொழி பாடத்திற்கான தேர்வு வழிகாட்டி நூலான இந்தப் பயிற்சி நூலில் 5 தொகுதிகள் மாதிரி கேள்வித் தாள்களும், அதற்குரிய விடைகளும், மாணவர்களுக்கு உதவும் வகையில் கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.

வி ஷைன் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த நூலை எஸ்.விக்னேஸ்வரி உருவாக்கியுள்ளார். தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களின் முயற்சிக்கு உதவி புரியும் வகையில், அவர்கள் இதுபோன்ற மாதிரி கேள்வித் தாள்களை வழங்கப்பட்டிருக்கும் நேரக் கட்டுப்பாட்டுடன் செய்து பார்த்து, பின்னர் விடைகளையும் சரிபார்த்து, பயிற்சி பெற்றால், இறுதித் தேர்வில் சிறந்த முறையில் தேர்ச்சிகளைப் பெற முடியும் என நிரூபிக்கப்பட்ட வழிமுறைகளின் அடிப்படையில் இந்த நூல் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

ஜோகூர் மாநிலத்தின் தேசிய இடைநிலைப் பள்ளி ஆசிரியர்கள் கழகத்தின் தலைவரான பாஸ்கரன் அரசன் இந்த நூல்கள் வழங்குவதற்கான முயற்சிகளையும், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளையும் ஒருங்கிணைப்பாளராக முன்னின்று நடத்தியிருந்தார்.
இந்த ஆண்டு ஜோகூர் மாநிலத்தில் எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு எழுதும் அனைத்து இந்திய மாணவர்களும் தங்களின் பள்ளியின் தமிழ் மொழி ஆசிரியரை அணுகி இந்தப் பயிற்சி நூலை அன்பளிப்பாகப் பெற்றுக் கொள்ளலாம்.