கோலாலம்பூர்: தீயணைப்பு வீரர் முகமட் அடிப்பின் மரண விசாரணை முடிவு இன்று வெள்ளிக்கிழமை காலை அறிவிக்கப்பட்டது. முகமட் அடிப்பின் மரணம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களால் ஏற்படுத்தப்பட்டது என்றும், சம்பவம் நடந்த நேரத்தில் காவல் துறையினர் செயல்படத் தவறியதாகவும் ஷா அலாம் மரண விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நீதிபதி ரோபியா முகமட் தனது தீர்ப்பை 41 நாட்கள் விசாரணைக்குப் பிறகு இன்று வெள்ளிக்கிழமை அதனை வாசித்தார்.
இதற்கிடையே பொது மக்கள் இந்த முடிவினை ஏற்றும் ஒரு சிலர் இன ரீதியிலான கருத்துகளை மீண்டும் பதிவிட்டும் தங்களின் ஆதங்கங்களை வெளியிட்டு வருகின்றனர். டுவிட்டர் பக்கத்தில் மலேசிய அளவில் முதன்மை இடத்தில் #JusticforADIB எனும் ஹேஷ்டேட் வலம் வந்துக் கொண்டிருக்கிறது.
அடிப்பின் மரணத்திற்கு காரணமான அனைவரும் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டும் என்று பெரும்பாலானோர் கருத்து தெரிவித்து வரும் வேளையில், போலி கணக்குகள் மற்றும் தனிப்பட்ட கணக்குகளைக் கொண்டு ஒரு சிலர் இன்னமும் இம்மாதிரியான சம்பவங்களை இன ரீதியாக கவனித்து வருவது வருத்தத்தைத் தருவதாக ஷேக் ஷாமிர் எனும் டுவிட்டர் கணக்கு உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார். கூடுமான வரையில் மரண விசாரணை சிறப்பான முறையில் நடந்து முடிந்திருந்தாலும், அதனை ஏற்கும் மனப்பக்குவம் இன்னும் மலேசிய மக்களிடத்தில் காணப்பெறுவதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றவாளி யாராக இருப்பினும் அவர் தண்டிக்கப்பட வேண்டியவர் என்று வளர் எனும் டுவிட்டர் கணக்கு உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார். கூடிய விரைவில் அவர்கள் கைது செய்யப்பட்டு, தக்க தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார். பொது மக்களைக் கடந்து இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரும் தமது கருத்தினை வெளியிட்டுள்ளார். அதாவது யாராக இருந்தாலும் குற்றவாளிகள் கிடைக்கும் வரையிலும், அவர்களை தேடிக் கண்டுபிடிக்க வேண்டுமென்றும், இந்த விவகாரத்தில் ஒட்டுமொத்த மலேசிய இளைஞர்கள் நல்லதொரு முடிவினை எதிர்ப்பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் பொது மக்கள் இன ரீதியிலான தாக்குதல்களை வெளியிட வேண்டாம் என்று துணைப் பிரதமர் வான் அசிசா வான் இஸ்மாயில் கேட்டுக் கொண்டார்.
கடந்த ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதி அதிகாலையில் அடிப் படுகாயமடைந்ததை அடுத்து, அக்காயங்களுக்கு வழிவகுத்த நிகழ்வுகளைத் தீர்மானிக்க 30 சாட்சிகள் அடங்கிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
சீ பீல்ட் கோயில் வளாகத்தில் நடந்த கலவரத்தின் போது அடிப் பலத்த காயங்களுக்கு ஆளானார். முதலாக அவர் எஸ்ஜேஎம்சிக்கு கொண்டு செல்லப்பட்டார். பிறகு, மேலதிக சிகிச்சைக்காக தேசிய இதய மையத்திற்கு (ஐஜேஎன்) மாற்றப்பட்டு, பின்னர் டிசம்பர் 17-ஆம் தேதி காலமானார்.