Home One Line P1 “உலக டிஸ்லெக்சிய விழிப்புணர்வு நாளும் நம் கடமையும்” – முல்லை இராமையா

“உலக டிஸ்லெக்சிய விழிப்புணர்வு நாளும் நம் கடமையும்” – முல்லை இராமையா

951
0
SHARE
Ad
கூலிம் தேசிய ஆரமபப் பள்ளியில் அண்மையில் நடத்தப்பட்ட டிஸ்லெக்சியா விழிப்புணர்வு பயிலரங்கின்போது…

(இன்று அக்டோபர் 4-ஆம் நாள் உலக அளவில் அனுசரிக்கப்படும் டிஸ்லெக்சியா விழிப்புணர்வு தினம் தொடர்பில், இந்தத் துறை குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, பல அனைத்துலக அரங்குகளில் உரையாற்றியிருக்கும் முனைவர் முல்லை இராமையாவின் இந்த சிறப்புக் கட்டுரை வெளியிடப்படுகிறது)

இன்று அக்டோபர் 4ஆம் தேதி, உலக அளவில், அதிகாரப்பூர்வமாக டிஸ்லெக்சியா விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது. அத்தோடு அக்டோபர் 1 முதல் 6 வரை அதிகாரப்பூர்வமாக டிஸ்லெக்சியா வாரமாக கொண்டாடப்படுகிறது. உலகம் டிஸ்லெக்சியாவிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் இதன் வழி புலப்படும். நான்கு வருடங்களுக்கு முன் துவக்கப்பட்ட மலேசிய தேசிய டிஸ்லெக்சியா அரசு சாரா இயக்கமும் இந்த அனுசரிப்பில் பங்கு பெறுகிறது.

முனைவர் முல்லை இராமையா

நான் முன்பு பலமுறை டிஸ்லெக்சியா என்றால் என்ன என்றும் எவ்வாறு கண்டறிவது என்பது பற்றியும் பல பத்திரிகைகளில் எழுதியுள்ளேன். இன்று அதன் விளைவுகள் பற்றியும் நம் கடமை பற்றியும் எழுதுகிறேன்.

பள்ளிப் படிப்பை மாணவர்கள் பாதியில் நிறுத்தும் காரணங்கள் என்ன?

#TamilSchoolmychoice

பள்ளி செல்லும் பிள்ளைகள் ஏன் ஆரம்ப, மற்றும் இடை நிலைப் பள்ளியிலிருந்து விடுபடுகிறார்கள் என்று ஆராய்ந்தோமானால் அதற்கொரு முக்கியக் காரணம் டிஸ்லெக்சியா எனும் வாசிக்க எழுத முடியாத ஒரு நிலைமை!

உலகம் முழுதும் இந்தக் கற்றல் வேறுபாடு, ஐந்தாறு பிள்ளைகளில் ஒரு பிள்ளைக்கு உள்ளது என்று பல மேலை நாட்டு ஆய்வுகள் காட்டுவதோடு பல்நாட்டு டிஸ்லெக்சியா இயக்கங்களும் இதைப் பறைசாற்றுகின்றன. இப்பேர்ப்பட்ட சூழலில் மலேசியர்கள் இதைக் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டோமானால் நம் பிள்ளைகளுக்கு நாமே இழைக்கும் தவறாகிவிடும்.

குறிப்பாக, நம் தமிழ் பள்ளிகளில் இந்த குறைபாட்டைப் பற்றி தெரியாமலும், தெரிந்தும் அதைப் பொருட்படுத்தாமலும் பல பள்ளிகள் இயங்கி வருகின்றன.

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி !

-என்கிறது திருக்குறள்

குறை என்னவென்று அறிந்த பின்னும் அதைக் கண்டு கொள்ளாமல், பள்ளியின் அடிப்படை திறன்களாகிய வாசித்தல், எழுதுதலை மாணவர்கள் கற்றுக் கொள்ளாமல் ஆரம்பப் பள்ளியை விட்டு வெளியேறினால் அதற்கு முழுப் பொறுப்பை பள்ளியே ஏற்கவேண்டும்.

இந்தக் கற்றல் குறைபாடு காலத்தால் மாறாது. அதற்குரிய பிரத்தியேக கற்பித்தல் முறையால் மட்டுமே மாறும். ஆனால் இந்த மாற்றம் நிச்சயமாக ஏற்படும். டிஸ்லெக்சியா உடைய பிள்ளைகள் அறிவு மிக்கவர்களாகவோ அல்லது சராசரி அறிவுடையவர்களாகவோ இருப்பர். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கற்பித்தல் முறையும் தொடர் பாடங்களும், நடவடிக்கைகளும் ஒலி வழியானதாக (Phonetic) இருப்பின் வெற்றி நிச்சயம்!

ஆங்கிலத்தைப் போல் அல்லாமல் தமிழ் ஓர் ஒலி மொழி. அதாவது, எழுதும் எழுத்துக்கும் சொல்லும் ஒலிக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. அதனால் தமிழை, அதுவும் தமிழ் பேசும் குழந்தைகளுக்கு கற்றுத் தருவது எளிது.
கற்பித்தலுக்கான முழுமையான உபகரணங்கள் தமிழ் பள்ளிகளில் செவ்வனே செய்யப்பட்ட ஆய்வுக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ளன.

கடை விரித்தும் கொள்வார் இல்லை என்று வள்ளலார் சொன்னது போல் ஆராய்ச்சியின் மூலம் தயாரிக்கப்பட்ட உபகரணப் பொருட்களையும், அவற்றை கையாளக் கொடுக்கப்பட்டுள்ள ஆசிரியர் வழிகாட்டி நூல்களையும், மாணவர்களுக்கான அனைத்து செய்பாடங்களையும் , விளையாட்டுகளையும் ஒலி வட்டையையும், எல்லாவற்றிற்கும் மேலாக ஒலிவழி தயாரிக்கப்பட்ட மின்னட்டைகளையும் பயன்படுத்திக்கூடப் பார்க்க நினையாமல் இன்னும் சில நூறு தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. இந்த ஒலிவழி கற்பித்தல் முறையை பயன்படுத்தி வரும் நூற்று ஐம்பது பள்ளிகளுக்கு மேல் இதன் பயனைக் கீழே தந்துள்ளர்கள்.

கிள்ளான், சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியை கோகிலவாணி கணபதியின் கடிதம்:

அனைவருக்கும் வணக்கம்!

பொதுவாகவே எழுத வாசிக்க இயலாத மாணவர்கள், எழுத்துகளை அடையாளங் கண்டு ஒலிப்பதில் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்குவர். டாக்டர் முல்லை இராமையா அவர்கள் இவ்வகையான மாணவர்களுக்கு உதவும் வண்ணம், இந்த ஒலி வழி கற்றல் முறையிலான பயிற்றுக் கருவியை உருவாக்கியுள்ளார். பல்வேறு தொடர் ஆய்வுகளுக்குப் பிறகு மிகச்சிறப்பாக இந்தப் பயிற்றுக் கருவி உருவாக்கப்பட்டுள்ளது.

எங்கள் பள்ளியில் 2015 முதல், இந்தக் கருவியை ஆசிரியர்கள், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்குப் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர். இந்தப் பயிற்றுக் கருவி மாணவர்கள் எளிதாகக் கற்றுக்கொள்ள ஏதுவான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் ஒரே ஒரு கையடக்கப் பேழையை (‘Kit’) மட்டும் பயன்படுத்திய எங்கள் பள்ளிக்கு, ஆசிரியர்களின் ஆர்வம் மற்றும் மாணவர்களின் சிறந்த அடைவினைக் கருத்திற் கொண்டு, கூடுதலாக இரண்டு செட் வாங்கப்பட்டது. இது எங்கள் பள்ளி மாணவர்களின் வாசித்தல் திறன் மேன்மை அடைய பேருதவியாக இருந்தது. எனவே, அனைத்து தரப்பினரும் நமது மாணவர்களின் வளர்ச்சியை உறுதி செய்ய ஆதரவு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!

நன்றி!

கோகிலவாணி கணபதி,
முன்னாள் தலைமை ஆசிரியை,
கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி.

நெகிரி செம்பிலான் மாநில கல்வி இலாகா, தமிழ் மொழி உதவி இயக்குநர் கி.சத்தியநாராயணனின் கடிதம்:

முனைவர் முல்லை இராமையா அவர்களின் ஒலி வழி பாட போதனை பொருளானது எங்கள் மாநில தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக திகழ்கிறது. பின் தங்கிய மாணவன் என முத்திரை குத்தப்பட்ட மாணவன் இக் கருவியினால் பயன் பெற்றுள்ளதை நான் அறிந்தேன். மிக்க நன்றி!

மெல்லப் பயிலும் மாணவர்கள், கடைநிலை மாணவர்கள், பாலர் பள்ளி மாணவர்கள் மற்றும் பிரத்தியேக வகுப்பு ( Pendidikan Khas) மாணவர்களும் பயனடையும் வகையில் அவர்களின் கருவி அமைந்துள்ளதை அறிந்தேன். மகிழ்ச்சியாக உள்ளது. அவர்கள் வழங்கிய பயிற்சியை மையமாக வைத்து ஆசிரியர்கள் இக்கருவியைப் வகுப்பறையில் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம். மீண்டும் முனைவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கி.சத்தியநாராயணன்
தமிழ் மொழி உதவி இயக்குநர்
நெகிரி செம்பிலான் மாநில கல்வி இலாகா.

டிஸ்லெக்யா வேறு – மெதுபயில்வோர் பிரிவு வேறு

பல பெற்றோர் தங்களுடைய குழந்தைகளுக்கு டிஸ்லெக்சியா உள்ளதை பெரும் வெட்கமாக கருதுகின்றனர். தன் பிள்ளைக்கு ஏதோ மன பிறழ்வு இருப்பதாக பிறர் நினைத்து விடுவர் என்று மிகத் தவறாக நினைக்கின்றனர். இது கற்றல் குறைபாடு என்று சொல்வதை விட கற்றல் வேறுபாடு என்று சொல்வதே மிகச் சரியாக இருக்கும். சராசரியான கற்றல் முறை இந்த பிள்ளைகளுக்கு உதவா!

சில பள்ளிகளில் திரும்பத் திரும்ப சொல்லிக் கொடுத்தால் மாணவர்கள் அதை உருப்போட்டு நினைவில் வைத்துக்கொள்வர் என்று நினைக்கின்றனர். ஆனால் அது ஒருபோதும் சரிவரா. ஒவ்வொரு ஒலியையும் ஒரு படத்தோடும் கருத்தோடும் இணைத்து சொல்லிக் கொடுத்தால் மட்டுமே பிள்ளைகளின் நினைவில் அது நிற்கும். டிஸ்லெக்சியா மாணவர்களுக்கு குறுகிய கால நினைவாற்றல் குன்றி இருக்கும். இந்த நிலையில் அறிவுப்பூர்வமான, தர்க்கரீதியான கற்றல் முறையே வெற்றிபெறும். காரணம் இந்தக் குழந்தைகள் அறிவுடையவர்களாக (IQ) இருப்பதால் அறிவுப்பூர்வமாக காரண காரியதோடு கற்றுக் கொடுக்கும்போது அதை மனதில் தக்க வைத்துக் கொள்வார்கள்.

ஆசிரியர்களோ, தமிழ் அறிந்த பெற்றோர்களோ இந்த ஒலி வழி கற்பித்தல் முறையை கற்றுக்கொள்வது மிக எளிது. காரணம் ஒலி வழி உபகரண பேழையில் கற்பிக்கும் முறை மிக எளிதான முறையில் வழிகாட்டி நூலில் காட்டப்பட்டுள்ளது. உபகரணப் பொருட்களை முழுமையாக திட்டப்படி முறையாக பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம்! பகுதி நேரமாக தமிழ் கற்பிக்கும் (tuition) ஆசிரியர்களும், தமிழ் நன்கு அறிந்த யாருமோ இந்த பேழையை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட பிள்ளைகளை காப்பாற்றலாம்.

தயவு கூர்ந்து டிஸ்லெக்சியா உடைய பிள்ளைகளை மெது பயில்வோர் என்றோ Slow Learners என்றோ அழைக்காதீர். மெது பயில்வோர் உண்டு, ஆனால் அவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டுமே உள்ளனர். சகட்டுமேனிக்கு எல்லோரையும் அவ்வாறு அழைப்பது அபத்தம்.
மெது பயில்வோருக்கு அறிவுநிலை சராசரிக்கும் கீழே இருக்கும். இதை அத்துணை அரசு மருத்துவ மனையிலும் இருக்கும் குழந்தை வளர்ச்சிக்குரிய மனோவியல் நிபுணர்கள் சோதித்துக் கூறுவர்.

நம்முடைய பள்ளி தலைமைத்துவமும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் இந்த கற்றல் வேறுபாட்டினை புறக்கணித்தால் அதன் விளைவுகள் விபரீதமாக இருக்கக்கூடும். வாழ்க்கையின், பள்ளியின் அடிப்படைத் திறன்களான வாசித்தல் எழுதுதல் பிள்ளைகளுக்கு கைகூடாமல் போனால் அவர்கள் கேலிக்கும் கிண்டலுக்கும் மட்டும் ஆளாகாமல் தன்னுடைய தன்னம்பிக்கையையும் இழந்து தீராத மனப் பாதிப்புக்கு உள்ளாவார்கள். அவர்களுக்கு  அதை வாய்விட்டுச் சொல்லத்தெரியாது. இந்தக் குழந்தைகளின் மன அழுத்தம் மிகப் பெரிது. அதை இந்த சமுதாயம் உணரவேண்டும்.

ஒரு கைத்தொழிலுக்குக் கூட வாசிப்பும் எழுத்தும் இன்றி அமையாதது. இன்றைய டிஜிட்டல் மய உலகில் கைத்தொலைபேசிகூட ஒலியைவிட எழுத்தையே அதிகம் பயன் படுத்துகிறது.

வாசிக்க முடியாமல், எழுத முடியாமல் தேர்வுகளில் மிக மோசமாக பின்னடைவு கண்டு, அதுவும் வறுமையின் விளிம்பில் வாழும் குழந்தைகள், பெற்றோர் ஆதரவும் கிட்டாத நிலையில் என்ன செய்வார்கள்? இந்தப் பிள்ளைகள்தான் கணிசமான அளவுக்கு வன்முறைக்கு ஈர்க்கப்படுகிறார்கள் என்று போதிய அளவு மேலைநாட்டு ஆய்வுகள் காட்டுகின்றன். ஓர் அறிவாளியான பிள்ளையை நாம் புறக்கணிப்பதால் என்ன நடக்கும்? அவன் மூளையை எங்கு செலுத்துவான்? அதற்குத் தீனி எங்கே? இந்த மிக பலகீனமான நிலையில் உள்ளபோதே அவன் தன்னுடைய அடையாளம்தான் என்ன என்று சிந்திக்கிறான். பதின்ம வயதில் சுய அடையாளம் எந்தப் பிள்ளைக்கும் இன்றியமையதாகிறது.

அப்போது கூடா சகவாசம் அவனைத் தேடி வரும். அவர்களும் இந்த பலவீனமானவர்களையே குறிவைத்து தோழமை காட்டி பொறிவைத்துப் பிடித்து விடுகிறார்கள். பின் என்ன? வன்முறையே வாழ்க்கை முறையாகி விடுகிறது. வன்முறைக்குச் சென்ற இளைஞர்களை சிறையில் சென்று அவர்கள் அங்கு வர என்ன முக்கிய காரணமாக இருக்கக்கூடும் என்று ஆராயும்போது கற்றல் குறைபாட்டினால் ஏற்பட்ட புறக்கணிப்பும், அதனால் ஏற்பட்ட சுய மதிப்பிழப்பும், அதற்கு துணைபோன பெற்றோரும், பள்ளியும், வறுமையும் என்பதை மேலை நாட்டு ஆய்வுகள் தெளிவாகக் காட்டுகின்றன.

நாம் இப்போதே சுதாரித்துக் கொள்ளாவிட்டால் கற்றல் வேறுபாடு உள்ள ஏழைப் பிள்ளைகள் தடம் மாறிப் போவதற்கு நிறைய வாய்ப்புண்டு!

முனைவர் முல்லை இராமையா
தலைவர்
தேசிய டிஸ்லெக்சியா இயக்கம்