ஹாங்காங்: யுயென் லாங்கில் ஏற்பட்ட போராட்டத்தின் போது 14 வயது சிறுவன் தொடையில் சுடப்பட்டு பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஹாங்காங் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரவு 9 மணியளவில் யுயென் லாங்கில் ஒரு நேரடி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை உறுதி செய்து ஹாங்காங் காவல் துறையினர் அறிக்கையில் வெளியிட்டுள்ளனர். ஆனால், இந்த சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயம் அடைந்தது குறித்து தெரிவிக்கப்படவில்லை.
போராட்டக்காரர்களால் தாக்கப்பட்ட பின்னர் காவல் துறை உடை அணிந்திராத, அதிகாரி தரையில் விழுந்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது.
“அவரது உயிருக்கு கடுமையான அச்சுறுத்தலை எதிர்கொண்ட அவர், தற்காப்புக்காக சுட்டார்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அவர் மீது வீசப்பட்ட பெட்ரோல் குண்டைத் தவிர்க்கும் போது அவர் தனது கைத்துப்பாக்கியையும் தோட்டக்களையும் தரையில் தவறவிட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பரவிய ஒரு காணொளியில், வெள்ளை நிற சட்டை அணிந்த ஒருவர் தனது காரில் இருந்து இறங்கியதும், அவரை எதிர்ப்பாளர்கள் சுற்றி வளைத்த பின்னர் “கிளர்ச்சி, கிளர்ச்சி!” என்று கூறிக் கொண்டே ஓர் எதிர்ப்பாளர் அவர் மீது குதிக்கிறார்.
இரண்டாவது காணொளியில், ஒரு பெர்ரோல் குண்டு அவரை நோக்கி வீசப்படுவதற்கு முன்பு, அவர் கறுப்பு உடைய அணிந்திருந்த எதிர்ப்பாளர்களால் தாக்கப்பட்டதைக் காட்டுகிறது. அவரின் ஆடை தீ பிடிக்கிறது, ஆனால் அவர் தீயில் இருந்து தப்பித்து தீயை அணைக்க முயல்கிறார். இப்போதுதான் அவர் துப்பாக்கியை தவறவிடுவது தெரிகிறது.
தவறவிடப்பட்ட துப்பாக்கியை மீட்டெடுக்க மற்றொருவர் விரைகிறார், ஆனால் வெள்ளை நிற ஆடை அணிந்திருந்தவர் அதை அவரிடமிருந்து விலக்குகிறார்.
மூன்றாவது காணொளியில், இரத்தக்களரியான அந்த நபர், மற்றொரு பெர்டோல் குண்டு அவர் மீது வீசப்படுவதற்கு முன்பு, தனது கைபேசியில் அழைப்பதைக் காண முடிகிறது. அங்கிருந்து அவர் ஓடுவதுடன் காணொளி முடிகிறது.
அந்த அதிகாரி மீது மற்றொரு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகவும், அவரது கால்களில் தீப்பிடித்ததாகவும் காவல் துறையினர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
அண்மையில், ஹாங்காங்கில் ஜனநாயகப் போராட்டவாதிகள் தொடர்ந்து தங்களின் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்த வேளையில், 18 வயது போராட்டவாதியை நோக்கி ஹாங்காங் காவல் துறை அதிகாரி துப்பாக்கியால் சுட்டிருப்பது சர்ச்சைகளைக் கிளப்பியது.