கோலாலம்பூர்: பிரதமர் மகாதீர் முகமட் இந்திய ஊடகங்களின் இலக்குக்கு ஆளாகி உள்ளார். அண்மையில், ஐக்கிய நாடுகள் சபையில் தமது உரையில் காஷ்மீரை இந்தியா படையெடுத்து ஆக்கிரமித்துள்ளது என்று குற்றம் சாட்டியதன் பின்னர், அவர் இந்தியாவில் பரவலாக விமர்சிக்கப்பட்டார்.
இதற்கிடையில், மலேசியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி 12 நபர்களை நாடு தழுவிய அளவில் காவல் துறை கைது நடவடிக்கையை மேற்கொண்டது, நிலைமையை மேலும் மோசமடையச் செய்துள்ளது.
மலேசியாவின் பல்வேறு இனங்களின் இணக்கமான வாழ்க்கை முறையை தகர்க்க டாக்டர் மகாதீர் முயற்சிப்பதாக தமிழகத்தைச் சேர்ந்த நம் நாடு தொலைக்காட்சி நிலையம் குற்றம் சாட்டியுள்ளது.
மலேசியாவில் உள்ள இந்திய சமூகத்தை ‘பறையர்’ மற்றும் ‘வந்தேறிகள்‘ என்ற வார்த்தைகளால் அவர் அவமதித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
“சமீபத்திய காலங்களில், மலேசிய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் மலேசியாவின் பல்வேறு இனங்களிடையே பெரிய அளவிலான அமைதியின்மையை ஏற்படுத்துவதாகக் காணப்படுகிறது. விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய பல அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டதன் மூலம் அவர் மீண்டும் சர்ச்சையைத் தூண்டியுள்ளார்,” என்று அந்நிலையம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டில் அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களை தடுத்து வைத்திருப்பதற்கு டாக்டர் மகாதீர் பின்னணியில் இருந்து செயல்படுகிறார் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 10 முதல், விடுதலைப் புலிகள் தொடர்பான நடவடிக்கையில் இரண்டு ஜசெக சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 12 நபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
அயோப்பின் அறிக்கையைத் தொடர்ந்து, இந்திய தொலைக்காட்சி நிலையம் புலிகள் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் இந்தியத் தலைவர்களுடன் புகைப்படம் எடுத்த மலேசியத் தலைவர்களையும் விசாரிக்க நாட்டின் காவல் துறை தயாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
விடுதலைப் புலியின் வலுவான ஆதரவாளரான மற்றொரு தமிழகத் தலைவரான வை.கோபால்சாமியுடன் (வைகோ) பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமின் புகைப்படத்தைப் பதிவேற்றி, நம்நாடு கேள்வி எழுப்பி உள்ளது.
2014-இல் மலேசியாவில் நடைபெற்ற தமிழ் மொழி மாநாட்டில் அன்வார் கலந்து கொண்டபோது, இந்தியாவில் மாநிலங்களவை உறுப்பினரான வைகோவுடன் அன்வார் புகைப்படம் எடுத்துக் கொண்டதாக நம்பப்படுகிறது.
“கமல்ஹாசன், குஷ்பூ, சிம்பு, சரத்குமார் அல்லது அமீர் போன்ற திரைப்பட பிரபலங்கள் சீமானுடன் புகைப்படம் எடுத்ததற்காக மலேசியாவில் தடை விதிக்கப்படுவார்களா என்பதை மலேசிய காவல் துறை தெளிவுபடுத்த வேண்டும்” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையில், அந்த 12 நபர்களைக் கைது செய்தது, இஸ்லாமிய மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக்கின் பிரச்சனையை மூடி மறைக்க வேண்டும் என்ற நோக்கத்தினாலேயே என்று அது கூறியுள்ளது.