ஜோகூர் பாரு: பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012-இன் (சொஸ்மா) கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து நபர்களையும் விடுவிக்குமாறு, பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் காரிம் காவல் துறைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள், ஐஎஸ் மற்றும் பிறருடன் தொடர்பில் இருப்பதாகக் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
“சொஸ்மா என்பது தேசிய முன்னணி அரசாங்கத்தால் இயற்றப்பட்ட ஒரு கொடுரமான சட்டமாகும். இது 14-வது பொதுத் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டது” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
ஒரு நபர் மாஜிஸ்திரேட்டின் உத்தரவு இல்லாமல் 28 நாட்கள் தடுத்து வைக்க அனுமதிக்க இந்த சொஸ்மா சட்டம் அனுமதி வழங்குகிறது என்றும், அது மத்திய அரசியலமைப்பின் 5-வது பிரிவுக்கு முரணானது என்றும் ஹசான் கூறினார்.
சொஸ்மாவின் கீழ் ஒரு நபர் நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு பிணை அளிக்கப்படுவதற்கான உரிமையும் மறுக்கப்படும் என்று அவர் கூறினார்.