தொராண்டோ: இரண்டாவது முறையாக ஜஸ்டின் டுருடோ கனடாவின் பிரதமாகிறார் என்ற செய்தியை அந்நாட்டின் செய்தி நிறுவனமான சிபிசி வெளியிட்டுள்ளது.
ஆயினும், ஜஸ்டின் தலைமையிலான அரசாங்கம் இதர கட்சிகளுடன் இணைந்து ஆட்சி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கனடாவின் 43-வது மக்களவை பொதுத் தேர்தலின் முடிவுகள் வெளிவர தொடங்கிய நிலையில், லிப்ரல் கட்சி ஆதரவாளர்கள் ஜஸ்டினின் இந்த வெற்றியை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.
நேற்று திங்கட்கிழமை நடந்த வாக்களிப்பில், லிப்ரல் கட்சியினர் 156 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். பெரும்பான்மை அரசாங்கத்திற்கு தேவையான 170 இடங்களை விட லிப்ரல் கட்சிக்கு இது மிகக் குறைவான வெற்றியாகக் கருதப்படுகிறது.