Home One Line P2 ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையின் உடற் கூராய்வு நிறைவு

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையின் உடற் கூராய்வு நிறைவு

1207
0
SHARE
Ad

திருச்சி – (கூடுதல் தகவல்களுடன் – மலேசிய நேரம் காலை 8.45 மணி நிலவரம் ) இங்குள்ள நடுக்காப்பட்டி என்ற கிராமத்தில்  ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சுஜித் என்ற 2 வயது குழந்தை 80 மணி நேரத்திற்கும் மேற்பட்ட போராட்டத்திற்குப் பின்னர் உயிரற்ற சடலமாக மீட்புக் குழுவினரால் வெளியே கொண்டு வரப்பட்டது.

தற்போது மணப்பாறை அரசு மருத்துவமனையில் அந்தக் குழந்தையின் உடற் கூராய்வு (பிரேத பரிசோதனை) நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் குறித்த அண்மையத் தகவல்கள் வருமாறு:

  • வெள்ளிக்கிழமை மாலை 5.40 மணியளவில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சுஜித் என்ற 2 வயதுக் குழந்தையை மீட்க கடந்த 4 நாட்களாகப் பல்வேறு மீட்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
  • முதலில் சுமார் 25 அடி ஆழத்தில் இருந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் அந்தக் குழந்தை நழுவி 80 அடி ஆழத்திற்குச் சென்று விட்டது.
  • அந்த ஆழ்துளைக் கிணறு 600 அடிகள் வரை தோண்டப்பட்ட கிணறு என்று கூறப்படுகின்றது. அந்தக் குழந்தை மேலும் கீழே சென்று விடாமல் இருக்க, வெளியில் தெரிந்த அந்தக் குழந்தையின் கை ‘ஏர்லோக்’ (Air-lock) முறையில் கம்பிகளைக் கொண்டு இறுக்கிப் பிடிக்கப்பட்டது.
  • குழந்தை விழுந்திருக்கும் குழிக்கு அருகில் மற்றொரு குழியைத் தோண்டி இரு குழிகளுக்கும் இடையில் சுரங்கம் அமைத்து குழந்தையை மீட்கத் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டன. எனினும் இரண்டாவது குழியைத் தோண்டும் போது பாறைகள் குறுக்கிட்டதால் குழிதோண்டும் இயந்திரத்தின் பற்கள் சேதமடைந்தன. இதன் காரணமாக, அதைவிட 3 மடங்கு சக்தி வாய்ந்த குழிதோண்டும் இயந்திரம் கொண்டுவரப்பட்டு, பாறைகளில் துளையிடப்பட்டு, இரண்டாவது குழி சுமார் 60 அடிவரை தோண்டப்பட்டது.
  • 98 அடிவரை இரண்டாவது குழியைத் தோண்டி அங்கிருந்து இரண்டு குழிகளுக்கும் இடையில் கைகளால் மண்ணைத் தோண்டி சுரங்கம் அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனினும் பாறைகள் குறுக்கிட்டதால் இந்த முயற்சியில் இடையூறுகள் ஏற்பட்டன.
  • இதற்கிடையில் நேற்று திங்கட்கிழமை இரவு 10.00 மணியளவில் சுஜித் விழுந்த குழியிலிருந்து துர்நாற்றம் வீசியது. அதைத் தொடர்ந்து குழந்தை உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
  • இதனால் குழந்தையை நேரடியாகக் குழியிலிருந்து மீட்க முடிவு செய்த மீட்புக் குழுவினர் (இந்திய நேரப்படி) அதிகாலை 4.30 மணிக்கு குழந்தையின் உயிரற்ற உடலை, அழுகிய நிலையில் வெளியே கொண்டு வந்து, உடனடியாக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
  • மருத்துவமனையில் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் குழுமியிருக்கின்றனர்.
  • இந்தியா முழுவதும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலரும் ஆவலுடன் பின்தொடர்ந்த இந்த விவகாரம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
  • இந்த சம்பவங்களைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் சுஜித்தின் இறுதிச் சடங்குகளுக்காக நடுக்காப்பட்டியில் கூடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • சுஜித் விழுந்த குழியும், அவனை மீட்பதற்காகத் தோண்டப்பட்ட இரண்டாவது குழியும், கான்கிரிட் எனப்படும் சிமெண்ட் கலவையைக் கொண்டு மூடப்படும் என்றும், அந்த இரண்டு குழிகளும் முழுவதுமான மூடப்பட்ட பின்னரே தான் அங்கிருந்து செல்லப் போவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.
#TamilSchoolmychoice