கோலாலம்பூர்: வாக்களிக்கும் வயது வரம்பை 18-ஆகக் குறைப்பதன் மூலம் வாக்களிப்பதற்கான தயார் நிலையில் மாணவர்களுக்கு பக்குவம் மற்றும் விழிப்புணர்வை வழங்க கல்வி அமைச்சகம் பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களுடன் நெருக்கமாக செயல்படுவதாகத் தெரிவித்துள்ளது.
தேசிய ஒற்றுமை மற்றும் தேசிய ஒருங்கிணைப்புத் துறையுடன் இணைந்து பணியாற்றுவதுடன், தேசபக்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள ‘கிளப் மலேசியாகு’ மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அது குறிப்பிட்டது.
“அதே நேரத்தில், தேர்தல் ஆணையம் பள்ளிகளில் முதல் திட்டமாக தேர்தல் செயல்முறையின் மூலமாக மாணவர் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான ஓர் உருவகப்படுத்துதல் அமர்வை நடத்துகிறது” என்று அது நேற்று திங்களன்று நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்தது.
கூடுதலாக, தேர்தல் அகாடமி (ஏபிஆர்) மூலம் அமைச்சகம் அனைத்து இடைநிலைப் பள்ளிகளிலும் சமூகக் கல்வித் திட்டத்தை நடத்துவதாகவும், தற்போதுள்ள வாக்காளர் கல்வித் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்துவதாகவும் கூறியது.
தொடர்ச்சியான முயற்சிகள் மற்றும் ஒத்துழைப்புடன், வாக்காளர்களாக தங்கள் உரிமைகள் மற்றும் பொறுப்புகளை அறிந்து கொள்ளவும், நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கவும் இது மாணவர்களை தயார்படுத்தும் என்று அமைச்சகம் நம்புகிறது.