கோலாலம்பூர்: நாளை வியாழக்கிழமை திட்டமிடப்பட்டுள்ள ‘பறக்கும் சோதனை‘ அல்லது ‘வான்வழி வாகனம்‘ சோதனையில் ஆர்வமுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் டத்தோஶ்ரீ முகமட் ரெட்சுவான் யூசோப் தெரிவித்தார்.
எந்தவொரு ஊடக பதிவிற்கும் அல்லது பொதுமக்கள் பார்வைக்கும் இது அனுமதிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.
“இது ஒரு தனியார் நிறுவனத்தின் தனிப்பட்ட அழைப்பு. இது ஒரு ‘வான்வழி சோதனை’ ஓட்டத்திற்கானது.”
“எனவே, அந்த இடத்தை என்னால் வெளிப்படுத்த முடியாது, ஏனெனில் இது நிறுவனத்தின் தனிப்பட்ட அழைப்பு” என்று அவர் நேற்று செவ்வாயன்று நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
கடந்த திங்களன்று, ஆர்வமுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் வியாழக்கிழமை சுபாங்கில் சோதனை ஓட்டத்தில் பங்கேற்க முகமட் ரெட்சுவான் அழைப்பு விடுத்திருந்தார்.
இதனிடையே, போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் இந்த சோதனை ஓட்டத்தை குறு விமான சோதனை (டிரோன்) என்று இன்று புதன்கிழமை குறிப்பிட்டுள்ளது பலரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. உண்மையில், நாளை நடைபெறும் சோதனையின் போது ‘பறக்கும் வாகனம்’ இடம்பெற உள்ளதா அல்லது குறு விமானம் செயல்பட உள்ளதா எனும் கேள்விகள் எழுந்துள்ளன.