Home உலகம் சிங்கை ‘நினைவின் தடங்கள்’ – அக்கினி குறித்த இரா.முத்தரசனின் இரங்கல் உரை

சிங்கை ‘நினைவின் தடங்கள்’ – அக்கினி குறித்த இரா.முத்தரசனின் இரங்கல் உரை

2428
0
SHARE
Ad

சிங்கப்பூர் – (கடந்த சனிக்கிழமை நவம்பர் 16-ஆம் தேதி சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் தமிழ்ச் சேவைகள் பிரிவு, கடந்த ஆண்டில் உலகளாவிய அளவில் நம்மை விட்டுப் பிரிந்த தமிழ் ஆளுமைகள் எண்மர் குறித்த நினைவலைகளைப் பகிர்ந்து கொள்ளும் வண்ணம் நினைவின் தடங்கள்” என்ற நிகழ்ச்சியை நடத்தியது. அந்த நிகழ்ச்சியில் மலேசிய எழுத்தாளர் அக்கினி சுகுமார் குறித்த நினைவஞ்சலி உரையை நிகழ்த்தினார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன். அவர் எழுதிய இந்தக்  கட்டுரையின் குறுகிய வடிவமே நினைவஞ்சலி உரையாக வழங்கப்பட்டது)

கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி மறைந்த மலேசிய எழுத்தாளர், பத்திரிகையாளர், கவிஞர் அக்கினி சுகுமார் அவர்களுடனான எனது 35 ஆண்டுகால நட்பின் அடிப்படையில் நான் அறிந்த தகவல்களைக் கொண்டும்,

எழுத்தாளரும், கவிஞருமான அவரது மனைவி  பத்மினி சுகுமார் அவர்கள் எழுதி வழங்கிய கட்டுரையில் கண்டுள்ள தகவல்களின் அடிப்படையிலும்,

#TamilSchoolmychoice

மலேசியாவின் மூத்த கவிஞர் முரசு நெடுமாறன் அவர்கள் அக்கினி குறித்து எழுதிய இரங்கல் கட்டுரையில் தெரிவித்துள்ள கருத்துகளையும் உள்ளடக்கி,

செல்லியல் இணைய ஊடகத்தின் நிருவாக ஆசிரியரான நான், எனது இனிய நண்பர்களில் ஒருவரும், எங்கள் நாட்டில் சிறந்த இலக்கிய ஆளுமைகளில் ஒருவருமான அக்கினி சுகுமாரை இழந்த சோகத்துடனும், இந்த இரங்கல் உரையை தொகுத்து உங்கள் முன் வழங்குகிறேன்.

அக்கினி – பல முனைகளில் திறன் பதித்தவர்

அக்கினி சுகுமார் குறித்த நினைவலைகளைப் பகிர்ந்து கொண்ட இரா.முத்தரசன்

அக்கினி சுகுமார், மலேசியா தமிழ் எழுத்துலகில் இவருக்கு அறிமுகம் தேவையில்லை. பத்திரிகையாளராகவும் படைப்பாளராகவும்,கவிஞராகவும்  மும்முனைகளில் முத்திரை பதித்தவர். அக்கினியின் இயற்பெயர் சுகுமார் வெள்ளத்துரை.

1973-ஆம் ஆண்டு இவரது தமிழ் பத்திரிகை பிரவேசம் ஆரம்பமானது. தமிழ் மலர் தினசரியில் ஆசிரியர் பகுதியில் சாதாரண எடுபிடி ஊழியராக தன்   பணியை ஊதியமில்லாமல் தொடங்கிய இவர், வானம்பாடி  வார இதழை உருவாக்கிய ஆதி குமணன்,இராஜகுமாரன்,அக்கினி என்கிற மூவரில் ஒருவர் என்கிற முத்திரையைப் பெற்றவர்.

வானம்பாடி காலகட்டத்தில்தான், தமிழ் பத்திரிக்கையுலகில் சுவாரசியமான கட்டுரைகளை – உதாரணமாக வெளிநாடுகளில் நடக்கும் அபூர்வமான, நம்ப முடியாத செய்திகளைத் தொகுத்து – வானம்பாடி வார இதழின் முதல் பக்கத்தில் வெளியிடும் வழக்கம் உருவானது. அதில் பெரும்பாலான கட்டுரைகளை அக்கினிதான் ஆங்கில இதழ்களில் தேடிப்பிடித்து மொழிபெயர்த்து மலேசிய வாசகர்களுக்கு ஏற்ப உருமாற்றுவார்

அறிவியல் பூர்வமான விஷயங்கள், கோள்களைப் பற்றிய கட்டுரைகள், சில வெளிநாட்டு அரசியல் விவகாரங்களை விளக்கிக் கூறும் கட்டுரைகள் என அவர் நிறையவே வானம்பாடி வார இதழிலும் பின்னர், அவர் பணியாற்றிய தமிழ் ஓசை, மலேசிய நண்பன், மக்கள் ஓசை போன்ற நாளிதழ்களிலும், அவற்றின் ஞாயிறு பதிப்புகளிலும் எழுதினார்.

அறிவியல் ரீதியான சிக்கல்களை, புதுமைகளை சாதாரண வாசகனும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடும், அறிவியலாளர்களும், மெத்தப் படித்தவர்களும் மட்டுமே அறியக் கூடிய அறிவியல் விவரங்களைச் சாதாரண வாசகனுக்குக் கடத்தும் இலக்கோடும் அவர் இத்தகைய கட்டுரைகளில் ஆர்வம் காட்டினார்.

புதுக்கவிதை ஈடுபாடு

அதே காலகட்டத்தில் வானம்பாடியில் வெளிவந்த அவரது புதுக் கவிதைகள், புதுமையான சொல்லாடல்களோடு, இலக்கிய ஆர்வலர்களைக் கவர்ந்ததோடு, அதுவரையில் மெதுவோட்டம் பயின்று கொண்டிருந்த மலேசியக் கவிதை உலகைப் புரட்டிப் போட்டு, அடுத்த கட்டப் பாய்ச்சலுக்கு தயாராக்கியது.

வானம்பாடி வெளிவருவதற்கு முன்னால் கவிதைகளில் படைப்புகளுக்கு களமாக இருந்த தமிழ் பத்திரிக்கைகள், மரபுக் கவிதைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்தன என்பதோடு, புதுக் கவிதை வடிவங்களை வெறும் உரைவீச்சுகள் என்ற அளவுக்கு ஒதுக்கி வைக்கும் மனப்பான்மையில் இருந்தன.

இந்த காலகட்டத்தில்தான் வானம்பாடியில் அக்கினியோடு, ஆதி.குமணன், இராஜகுமாரன் போன்றவர்களின் புதுக்கவிதைகள் ஏராளமாகப் பிரசுரிக்கப்பட்டதோடு, இவர்களைத் தொடர்ந்து எண்ணற்ற புதுக்கவிதை எழுத்தாளர்கள் களமாடும் தளமாகவும் வானம்பாடி உருமாறியது.

அந்த வகையில் மலேசியப் புதுக்கவிதைத் துறையில் ஒரு முன்னோடியாகவும், புதிய வழித் தடத்தைப் போட்டுத் தந்தவர்களில் ஒருவராகவும் அக்கினியைப் பார்க்கலாம். மலேசிய மண்ணில் புதுக்கவிதையின் மறுமலர்ச்சிக்கு வித்தாகவும் முன்னோடியாகவும் விளங்கிய இவரது புதுக்கவிதைகள் ஒரு புதிய தலைமுறை எழுத்தாளர்களின் எழுச்சிக்குத் துணை புரிந்தன.

ஜெயகாந்தனுடன் அக்கினி அவரது துணைவியார் பத்மினி மற்றும் எழுத்தாளர் பூ.அருணாசலம்

தனது புதுக்கவிதை அனுபவத்தை, பிரவேசத்தை, அவரது துணைவியார் பத்மினி சுகுமார் பகிர்ந்து கொண்டபடி, பின்வருமாறு அக்கினி குறிப்பிடுகிறார்:

“கவிதை படிப்பதில் இருந்த ஆர்வத்தின் விளைவால் விரல்கள் நீண்டன. மரபுக் கவிதைகளில்தான் எனது தொடக்க முயற்சிகள்.., தமிழகத்தில் வானம்பாடி           கவிஞர்களின் தாக்கம் என்னைப் பெரிதும் அழுத்திய நிலையில் மரபுகளில் இருந்து கழன்று போனேன்.

முற்றிலுமாக புதுக்கவிதைகள் ஆக்கிரமிக்கத் தொடங்கின.

 …தமிழகக் கவிஞர்களின் தரமான புதுக்கவிதைகள் பற்றிய கருத்துப் பரிமாற்றங்களும் அவ்வப்போது எங்களை ஆக்கிரமிக்கும். கொஞ்சம் கொஞ்சமாக புதுக் கவிதையில் காலூன்ற முயன்றேன். ஆனால், களம் கிடையாது. அன்றைய காலங்களில் அதாவது, 1975-இன் தொடக்கத்தில் புதுக்கவிதைகள் மலேசிய இதழியல் துறையினால் தீண்டத் தகாதவை.

இரண்டு முன்னணி தினசரிகளும் புதுக்கவிதைகள் மீது மிகுந்த சினங்கொண்டிருந்த தருணங்கள் அவை. எனினும், உரைவீச்சு என்ற போர்வையில் எப்போதாவது ஒரு மூலையில் ஏதாவது இடம் பெறும்.                             

அன்றைய காலகட்டத்தில் வெளிவந்த “வெளிச்சங்கள்” புதுக்கவிதை தொகுப்பு நூல் என்னை முழுமையாக உள்வாங்கியது. அந்நூலை தமிழகத்திலிருந்து வாங்கி வந்து தலையில் கொட்டி பரிசளித்தவர் ஆதி.குமணன்தான்.

ஆதி.குமணன் தமிழ் மலரில் பணியாற்றிய காலகட்டத்தில் அவரது செல்வாக்கைப் பயன்படுத்தி புதன்கிழமைகளில் ஒரு பக்கம் இலக்கியத்திற்காக போராடி வாங்கினார். அது “புதன்மலர்” என்றானது.

அந்த ஒரு பக்கத்தை எனக்கு கொடுத்து, “இந்தா இது நம் பக்கம்” நாம் என்ன எழுத நினைத்தாலும் எழுதலாம் என்றார்.

இலக்கிய விமர்சனங்கள், துணுக்குகள் என அதில் இடம் பெற்ற வேளையில் இடையிடையே எனது புதுக் கவிதைகளும் இடம் பெற்றன.

புதுக்கவிதைகளின் தொடக்க முயற்சிகள் அவை. அங்கு தான் அக்கினி என்ற பெயரும் அவதாரம் கண்டது. பின்னர் வானம்பாடி என்ற வார இதழின் தோற்றம்  ஆதி குமணன், அக்கினி. இராஜகுமாரன்…. என்ற ஆசிரியர் வரிசையில் நாங்கள் அனைவரும் புதுக் கவிதைத் தீவிரவாதிகள்.  

வானம்பாடி புதுக்கவிதைகளின் களமாக மட்டுமல்லாமல் ஓர் இயக்கமாக உருவெடுத்தது. எனது புதுக் கவிதை சோதனை முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக அமைந்து வாசகர்களை சென்றடைந்தது. புதுக் கவிதையாளர்கள் படை விரிவு கண்டது. அழகான கவிதைகள் இங்கே கூடு கட்டின.

பின்னர் தமிழ் ஓசை நாளிதழுக்குக் குடிபெயர்ந்தபோது நாளிதழ் வாழ்க்கை பரபரப்பினால் பஞ்சு பஞ்சாய் பிய்ந்து பல கனவுகள் காற்றில் பறந்தன. அவ்வப்போது புதுக்கவிதைகள் எழுதினாலும் கட்டுரைகள் என்னை ஆக்கிரமிக்கத் தொடங்கின.

தமிழ் நாளிதழ்களில் தொடர்ந்து பணியாற்றிய அக்கினி

‘நினைவின் தடங்கள்’ – நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினர்

பின்னர் தமிழோசை தினசரியின் தொடக்க பணியாளர் என்பதோடு அதன் செய்தி ஆசிரியராகவும் பணியாற்றினார். மலேசிய நண்பன் நாளிதழில் செய்தி ஆசிரியராகவும், மக்கள் ஓசை வார இதழில் ஆசிரியராகப் பொறுப்பேற்று வந்துள்ள அக்கினி சுகுமார், பின்னர் தமிழ்க்குரல் நாளிதழின் உருவாக்கத்திற்கு ஆணிவேராக இருந்ததோடு அதன் ஆசிரியராகவும் பொறுப்பேற்றிருந்தார். பின்னர் மூத்த பத்திரிகையான தமிழ்நேசன் நாளிதழின்  ஆசிரியர் பகுதி ஆலோசகராக ஏழு ஆண்டுகள் பொறுப்பேற்றிருந்தார். இறுதியாக அவர்    ‘வணக்கம் மலேசியா.காம்’ இணைய ஏட்டில்  மூத்த பத்திரிகையாசிரியராகவும் பொறுப்பேற்றிருந்தார்.

பத்திரிகை துறையிலும் படைப்புத் துறையிலும்  தமக்கென்று ஒரு தனித்துவத்தை கொண்டிருந்தவர் அக்கினி சுகுமார்.

3 நூல்களைப் படைத்தவர்

தன் வாழ்நாளில் மூன்று நூல்களைப் படைத்தவர் அக்கினி. “கனா மகுடங்கள்” என்ற புதுக் கவிதை  நூல், “பட்டுப்புழுக்கள்” என்ற குறுநாவல், ‘மண்ணே உயிரே’ என்ற பயணத் தொடர் ஆகியவை அவரின் 3 நூல்களாகும்.

“கனா மகுடங்கள்” பெரும்பாலும் சமூகத்தையும், காதலையும் பேசும் புதுக் கவிதைகளைக் கொண்டது.

கனா மகுடங்கள் – நூலில் உள்ள ஒரு கவிதை இது:

கல்லறையில்

உதிரும்

கனவு மலர்களை

காற்றில் விட்டு விடாதே

கைகளில்

ஏந்திக் கொள்

மண்ணில் எறிந்து விடாதே

மனதில் சூடிக் கொள்

“பட்டுப்புழுக்கள்” என்ற குறுநாவல் மாதம் ஒரு நாவல் என்ற திட்டத்தின் அடிப்படையில், சமூகப் பிரச்சனைகளைத் தொட்டு அவர் எழுதியது.

ஒரு முறை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உலகம் எங்கும் உள்ள பத்திரிக்கையாளர்களைச் சந்திக்க அழைத்தபோது, அதற்காக யாழ்ப்பாணம் சென்ற அக்கினி, அந்த ஈழப் பயண அனுபவங்களை விவரித்த நூல் ‘மண்ணே உயிரே’.

அவர் தமிழீழத்திற்கு சென்றிருந்த காலம் மிகவும் ஒரு நெருக்கடியான காலக்கட்டமாகும். பாதுகாப்பு, பயணம் என பலவேறு சிக்கல்களைத் தாண்டி அவர் செய்தியாளர் மாநாட்டில் அன்று கலந்து கொண்டார்.  அவரின்  “மண்ணே உயிரே” புத்தகம், அந்த காலகட்டத்தை எடுத்துக் கூறும் ஓர் ஆவணமாக எப்போதும் திகழும்.

அக்கினி மற்றும் கோ.முனியாண்டியின் புதுக் கவிதைப் பங்களிப்பை விவரிக்கும் காலமும் கவிதையும் என்ற ஆவணப் படம் ஒன்றையும் வல்லினம் என்ற இலக்கிய அமைப்பு வெளியிட்டிருக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

கவிதைகளுக்கு அப்பால் ஆயிரக்கணக்கான கட்டுரைகளின் வழி பல்லாயிரக்கணக்கான வாசகர்களை ஈர்த்தவர் அக்கினி சுகுமார். ஆய்வியல், அரசியல், கலையியல்,ஆன்மிகம், விளையாட்டுத்துறை என பல்வகை கட்டுரைகளை எழுதி எழுத்துலகில் அழுத்தமாகக் காலூன்றியவர்.

அறிவியல் கட்டுரைகளை தமிழில் தருவதில் அக்கினி சுகுமார் தன்னிகரற்று  விளங்கியவர். அறிவியலை எளிமைப்படுத்தி  தமிழில் அவர் வாரி வழங்கிய கட்டுரைகளே வாசகர்கள் மத்தியில் இன்றும் நினைவு கூரப்படுகின்றன எனலாம்.

கட்டுரைகள், புதுக்கவிதைகள் ஆகிய துறைகளில் மட்டும் கவனம் செலுத்திய அவர் ஏனோ சிறுகதை, நாவல் போன்ற இலக்கிய வடிவங்களின்பால் அதிகம் ஈர்ப்பு காட்டவில்லை.

அதுகுறித்து அவரே பின்வருமாறு கூறியிருக்கிறார்:

புதுக்கவிதைக்கு அப்பால் சிறுகதை முயற்சிகளில் இறங்கினேன். இது தமிழ்மலரிலேயே தொடங்கி விட்டது என்றாலும் காலப்போக்கில் தொய்வு கண்டது. “விட்டதடா ஆசை” என கையை உதறிக் கொண்டு வெளியேறிவிட்டேன். என்னைப் பொறுத்தவரை எனக்கு எல்லாமும் புதுக் கவிதைகள்தான்.. பின்னர் பத்திரிகைக்காரன் என்பதால் அதற்குத் தேவையான கட்டுரைகள், செய்திக் கட்டுரைகள் என்ற கட்டாயங்களில் கால்   பதித்தேன். பின்னர் அதுவும் என்னைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடியது.

இலக்கோ எதிர்ப்போ இல்லாமல் இவரது பத்திரிகை பயணம் அன்று ஆரம்பமானது. பின்னர் நாற்பது ஆண்டுகள் ஓடி மறைந்தன. செய்கிற பணியை செம்மையாக செய்தல் என்ற இலக்கும் எதிர்பார்ப்பும் அவரிடம் வேரூன்றியது போற்றத்தக்க விஷயமாகும்.

அக்கினி சுகுமார், தன் ஊடகத் தொழில்,படைப்பைத் தவிர்த்து  மனைவி, மக்களை அதிகம் நேசித்தவர். பெரியார் சிந்தனையில் உழன்றவர். அதனால் பெண்கள் விஷயத்தில் முற்போக்கு சிந்தனையைக் கடைப்பிடித்து வந்தவர்.

அக்கினி எழுதிய இசைப் பாடல்கள்

மலேசியாவின் மூத்த கவிஞர் முரசு நெடுமாறன், அக்கினியின் மறைவை முன்னிட்டு, தமிழ் மலர் நாளிதழில் எழுதிய இரங்கல் கட்டுரையில், அக்கினி இசைப்பாடல்கள் எழுதுவதில் ஆர்வமும் திறமையும் கொண்டிருந்தார் என்ற புதிய செய்தியைத் தருகின்றார்.

இசையமைப்பாளர் மு.நெ.இளவரசு புதிய இசைப்பாடல்களை உருவாக்கி, யூடியூப் இணையத் தளத்தில் பதிவேற்ற முயற்சிகள் மேற்கொண்டிருந்தபோது, தனது வேண்டுகோளின்படி இளவரசு அக்கினியை அணுகி, இசைப்பாடல்கள் எழுதுங்களேன் என்று கேட்ட போது முதலில் அக்கினி எனக்கு அந்தத் துறையில் அனுபவமில்லை என மறுத்தார் என்பதை முரசு நெடுமாறன் நினைவு கூர்கிறார்.

எனினும், அவரை முரசு நெடுமாறன் ஊக்குவித்து எழுதித் தரச் சொன்னதில் இரண்டு பாடல்கள் எழுதித் தந்திருக்கிறார் அக்கினி. அந்தப் பாடல்களின் சில வரிகளையும் முரசு நெடுமாறன் தனது கட்டுரையில் பின்வருமாறு நினைவு கூர்ந்திருக்கிறார்:

விரிப்போம் சிறகை

பறப்போம் வானில்

காலத்தை வென்றெடுப்போம்

இலக்கே முதல்படி

கனாவைச் சிறைப்பிடி

வாழ்ந்தே பார்த்திடுவோம்

****

உலகெனும் பெருவெளியில்

எத்தனை கால் தடங்கள்

உனக்கும் உண்டு எனக்கும் உண்டு

ஆளுக்குப் பல இடங்கள்

உணர்வை நீ பதித்து விடு

உன் இருப்பைக் குறித்துவிடு

உன் இறப்புக்கு நீயே அஞ்சலி

செலுத்தும் அவலத்தை விதைக்காதே

அக்கினி தனது இறுதிக் காலத்தில் எழுதிய இந்த இசைப் பாடல்களில் அவர் இறப்பு – அஞ்சலி என்ற சொற்களைச் சேர்த்திருப்பது இப்போது நினைக்கும்போது கண்களைக் கலங்க வைக்கிறது என்றும் முரசு நெடுமாறன் தனது இரங்கல் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

அக்கினியின் குணாதிசயங்கள்

அவருடன் நிறைய இலக்கிய விவாதங்கள், பரிமாற்றங்கள் நடத்தியிருக்கிறேன். ஆனால், இலக்கியம் தவிர்த்து, நாம் பேச வேண்டிய விஷயங்கள் தவிர்த்து எந்த வம்பும் தும்பும் பேசாத குணம் அவருடையது. பல ஆண்டுகள் அவரை நெருக்கமாக அறிந்திருந்தும், அவரது தனிப்பட்ட விவகாரங்களை அவர் பேசியது இல்லை. தேநீர்க் கடைகளில் அமர்ந்து மணிக்கணக்காக அரட்டையடிக்கும் பழக்கம் அவரிடம் நான் கண்டதில்லை.

முழுக்க முழுக்க எழுத்துத் துறை சார்ந்த உழைப்புதான் அவருடையது. ஊடகத் துறை, இலக்கியம், சில சமயங்களில் நடப்பு அரசியல் விவகாரங்கள் ஆகியவைப் பற்றி மட்டுமே அவர் பேசுவார்.

இறுதி வரை அவர் ஊடகத் துறையிலேயே பணியாற்றினார். அதில்தான் ஆர்வம் கொண்டிருந்தார்.

தனது கனா மகுடங்கள் நூலில் அக்கினி எழுதிய முன்னுரையில் தனது கவிதைப் படைப்புக்கு எது உந்துதலாக இருந்தது என்பதை விளக்கும் அவரின் சில வரிகளோடு இந்தக் கட்டுரையை நிறைவு செய்வது பொருத்தமாக இருக்கும்:

கவலை வரும் போதெல்லாம், கவிதை எழுதுவேன். எனது மனச் சுமையை எப்போதுமே வாங்கிக் கொள்வது – தாங்கிக் கொள்வது கவிதைச் சுமைதாங்கிதான்.

எழுதி..எழுதி…எல்லாவற்றையும் சேர்த்துப் பார்க்கையில் எனது கவலைச் சுமையைத் தாங்கிக் கொண்டிருந்த கவிதைகள், இப்போது சுமை கனத்து கலங்குகின்றன போலும்!

வாசக நண்பர்களே! அதன் புலம்பலுக்குச் செவிசாய்த்து.. அந்தச் சுமையை நீங்களும் சற்று பகிர்ந்து கொள்ளுங்களேன். பாவம்!

-இரா.முத்தரசன்

அடுத்து : “நினைவின் தடங்கள்” நிகழ்ச்சியில் ‘இலக்கியக் குரிசில்’ மா.இராமையாவுக்கு முத்து நெடுமாறன் நிகழ்த்திய நினைவஞ்சலி உரை