சிங்கப்பூர் – கடந்த சனிக்கிழமை நவம்பர் 16-ஆம் தேதி சிங்கையில் இயங்கி வரும் தேசிய நூலகத்தின் தமிழ்ச் சேவைப் பிரிவு கடந்த ஆண்டில் தமிழ் இலக்கிய உலகைவிட்டுப் பிரிந்த 8 முக்கிய ஆளுமைகளுக்கு, அவர்களின் சிறப்புகள் குறித்த உரைகளோடு “நினைவின் தடங்கள்” என்ற நினைவஞ்சலி நிகழ்ச்சியை நடத்தியது.
ஒவ்வொரு ஆண்டிலும் உலகளாவிய அளவில் நம்மை விட்டுப் பிரியும் குறிப்பிடத்தக்க தமிழ் ஆளுமைகளைக் கௌரவிக்கும் வகையிலும், அவர்களின் தமிழ்ச் சேவைகளை நினைவு கூரும் வகையிலும் ‘நினைவின் தடங்கள்’ என்ற நிகழ்ச்சியை சிங்கை தேசிய நூலகத்தின் தமிழ்ச் சேவை பிரிவு ஆண்டு தோறும் நடத்தி வருகிறது.

அந்த வகையில் கடந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் மலேசிய எழுத்தாளர்கள், எம்.துரைராஜ், இராஜகுமாரன் ஆகிய இருவருக்கும் இரங்கல் உரைகள் நிகழ்த்தப்பட்டன.
இந்த ஆண்டுக்கான நினைவின் தடங்கள் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் வரவேற்புரையாற்றிய சிங்கை தேசிய நூலகத்தின் தமிழ்ச் சேவைப் பிரிவுகளுக்கான தலைவர் அழகிய பாண்டியன், நிகழ்ச்சியின் நோக்கங்களை எடுத்துரைத்ததோடு, மூன்றாவது ஆண்டாக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சிக்கு பரவலான ஆதரவு கிடைத்திருப்பதாகத் தெரிவித்தார்.
தேசிய நூலக வாரியத் தமிழ் மொழிச் சேவைகள் பிரிவின் ஆலோசனைக் குழுத் தலைவர் அருண் மகிழ்நனும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, நினைவஞ்சலி உரைகளை ஆற்றியவர்களுக்கு நினைவுப் பரிசுகளை எடுத்து வழங்கினார்.
இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சியில் அண்மையில் மறைந்த மலேசிய எழுத்தாளர்கள் அக்கினி சுகுமார் மற்றும் மா.இராமையா ஆகிய இருவர் உள்ளிட்ட பின்வரும் எண்மருக்கு நினைவஞ்சலி உரைகள் நிகழ்த்தப்பட்டன:
1. பிரபஞ்சன்
2. சிலம்பொலி சின்னப்பன்
3. க.ப.அறவாணன்
4. மகரிஷி
5. தோப்பில் முகம்மது மீரான்
6. கிரேசி மோகன்
7. அக்கினி சுகுமாரன்
8. மா.இராமையா
சாகித்திய அகாடமி விருது பெற்ற பிரபஞ்சன்
தனது ‘வானம் வசப்படும்’ என்ற நூலுக்கு சாகித்திய அகாடமி பரிசு பெற்ற பிரபஞ்சன் குறித்த இலக்கிய அனுபவங்களையும், அவருடன் பழகிய நாட்களில் நிகழ்ந்த சில சுவாரசியமான சம்பவங்களையும் பகிர்ந்து கொண்டார் பிரபஞ்சன் பற்றிய நினைவஞ்சலி வழங்கிய சிங்கப்பூரின் பரணிதரன்.
பிரபஞ்சனின் அறிவாற்றல், எழுத்தாளனுக்கே உரிய சில வித்தியாசமான குணாதிசயங்கள், நிகழ்ச்சிகளுக்கு ஒப்புக் கொண்டு விட்டு வராமல் அதை சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்வது, எத்தனையோ முரண்பாடுகளைக் கொண்டிருந்தாலும் பிரபஞ்சனுடன் யாருமே ஆத்திரமோ, வருத்தமோ காட்டாததுதான் பிரபஞ்சனின் சிறப்பு என்று தனது உரையில் குறிப்பிட்டார் பரணிதரன்.

தமிழறிஞர், பேராசிரியர் க.ப.அறவாணன்
தமிழ், தமிழர் குறித்த ஆய்வுகளை பரந்த அளவில் மேற்கொண்ட பேராசிரியர் க.ப.அறவாணன் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டவர் அவரது மாணவர் இரத்தின வெங்கடேசன்.
அறவாணனின் தமிழறிவு, தமிழ் உணர்வு குறித்த பல சம்பவங்களைப் பகிர்ந்து கொண்ட அவர் அறவாணனின் சுமார் 200 மாணவர்கள் இன்னும் ஒரு குழுவாக இயங்கிக் கொண்டு அறவாணனின் பணிகளை, எண்ணங்களை இயன்ற வரையில் செயல்படுத்த முனைந்து வருகிறோம் என்றும் பெருமிதத்துடன் தனது உரையில் குறிப்பிட்டார் இரத்தின வெங்கடேசன்.

சிலப்பதிகார உரையாளர் சிலம்பொலி சின்னப்பன்
சிறந்த மேடைப் பேச்சாளராகவும், சிலப்பதிகாரம் குறித்த உரைகளில் தேர்ந்தவருமான தமிழகத்தின் சிலம்பொலி சின்னப்பன் குறித்த இரங்கல் உரையை வழங்கினார் சிங்கையைச் சேர்ந்த அ.கி.வரதராசன். சிலம்பொலி சின்னப்பனை நேரில் சந்தித்ததில்லை என்று கூறிய வரதராசன் தனக்கு தரப்பட்ட இந்த இரங்கல் உரை ஆற்றும் பணிக்கு ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் காரணம் அதன் மூலம்தான் சிலம்பொலி சின்னப்பன் என்ற தமிழறிஞர் பற்றிய விவரங்களையும், அவர் ஆற்றிய தமிழ்ப் பணிகளையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
அப்போதைய முதல்வராக இருந்த காமராசருடன் சிலம்பொலி சின்னப்பனுக்கு இருந்த பழக்கம், அதுகுறித்த சம்பவங்களையும் வரதராசன் தனதுரையில் விவரித்தார்.

வட்டார மொழியில் படைத்து சாகித்திய அகாடமி பெற்ற தோப்பில் முகம்மது மீரான்
தேங்காப்பட்டினம் என்ற கடற்கரையோரச் சிற்றூரில் பிறந்து அங்கு வாழ்ந்த தனது இஸ்லாமியத் தமிழ் சமூகம் குறித்து வட்டார மொழியையும், வாழ்வியலையும் தனது படைப்புகளில் கொண்டு வந்த தோப்பில் முகமது மீரான் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் சிங்கையைச் சேர்ந்த சிவானந்தன்.
தமிழ் இலக்கிய உலகில் அவ்வளவாக அறியப்படாமல் இருந்த தோப்பில் முகமது மீரான் 1997-ஆம் ஆண்டில் சாகித்திய அகாடமி விருதைப் பெற்ற பின்னர், அவரது நூல்கள் பல மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு, இந்திய அளவில் பிரபலமாகி நிறைய வாசகர்களை ஈர்த்தது என்றும் சிவானந்தன் தெரிவித்தார்.

நாடகம், திரைத் துறை சாதனை புரிந்த கிரேசி மோகன்
நாடகத் துறையில் கொடிகட்டிப் பிறந்ததோடு, பல தமிழ்ப் படங்களுக்கு தனது நகைச்சுவை ததும்பும் வசனங்களால் தமிழ் இரசிகர்களை ஈர்த்த கிரேசி மோகன் பற்றிய நினைவுகளை சிங்கையைச் சேர்ந்த பழனிகுமார் வழங்கினார்.
கிரேசி மோகன் நாடகத் துறையில் ஈடுபட்டது, பின்னர் அவரது பெயர் கிரேசி மோகன் என உருமாற்றம் கண்டது, கே.பாலசந்தர் கிரேசி மோகனின் நாடகத்தைப் ‘பொய்க்கால் குதிரை’ என்ற திரைப்படமாக எடுத்தது, கமல்ஹாசனுடன் ஏற்பட்ட பழக்கத்தைத் தொடர்ந்து அவரது பல படங்களுக்கு வசனங்கள் எழுதியது என கிரேசி மோகனின் திரைப்பயணத்தை சுவாரசியமாக விவரித்தார் பழனிகுமார்.

எழுத்தாளர் மகரிஷி
எழுத்தாளர் மகரிஷி குறித்த சில அரிய தகவல்களையும், அவரது பின்னணி குறித்தும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் திருமதி வித்யா அருண். ‘என்னதான் முடிவு’, ‘புவனா ஒரு கேள்விக்குறி’, ‘நதியைத் தேடிவந்த கடல்’, ‘பத்ரகாளி’, ‘வட்டத்துக்குள் சதுரம்’ போன்ற பல தமிழ்ப் படங்கள் மகரிஷியின் நாவல்கள்தான் என்ற சுவாரசியமானத் தகவலைத் தெரிவித்த வித்யா அருண், மகரிஷியின் பல நாவல் கதைகள் பல திரைப்படங்களில் எடுத்தாளப்பட்டிருப்பதையும் குறிப்பிட்டார்.
மகரிஷியின் கதையான ‘என்னதான் முடிவு’ திரைப்படமாக வெளிவந்து அந்த ஆண்டிற்கான தேசிய விருதைப் பெற்றது என்ற தகவலோடு, மகரிஷியின் எழுத்துப் பயணம் குறித்த தகவல்களையும் தனது உரையில் பகிர்ந்து கொண்டார் வித்யா அருண்.

மலேசியப் பத்திரிகையாளர் அக்கினி சுகுமார்
மலேசிய எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமான அக்கினி சுகுமாரனின் இலக்கியப் பயணம், அவரது புதுக் கவிதை ஆற்றல், அவர் எழுதிய நூல்கள், ஒரு பத்திரிகையாளராக அவர் மேற்கொண்ட புதிய கோணங்களிலான கட்டுரைகள் குறித்த விவரங்களை நினைவஞ்சலியாக வழங்கினார் ‘செல்லியல்’ இணைய ஊடகத்தின் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்.
புதுக்கவிதை என்ற இலக்கிய வடிவம் அவ்வளவாக அங்கீகரிக்கப்படாத காலகட்டத்தில் விடாமுயற்சியோடு புதுக் கவிதைத் துறையில் தீவிரமாக ஈடுபட்டு, தனக்கென ஓரிடத்தை மலேசியப் புதுக் கவிதை உலகில் செதுக்கிக் கொண்டதோடு, அதன் தொடர்ச்சியாக வானம்பாடி காலத்திலிருந்து அவர் மேற்கொண்ட முன்னெடுப்புகளையும், பத்திரிகையாளராக அக்கினி சாதித்தவை பற்றியும் பல தகவல்களை தனது இரங்கல் உரையில் இரா.முத்தரசன் தெரிவித்தார்.

மலேசியாவின் பழம் பெரும் எழுத்தாளர் மா.இராமையா
மலேசியாவின் பழம் பெரும் எழுத்தாளர்களில் ஒருவரான மா.இராமையா குறித்த இலக்கியப் பணிகளையும், தகவல்களையும் பகிர்ந்து கொண்டார் மலேசியாவின் கணினி நிபுணர் முத்து நெடுமாறன். தனது தந்தையார் முரசு நெடுமாறனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் மா.இராமையா என்பதையும், தனது தந்தையார் மூலம் அவரது எழுத்துப் பணிகள் குறித்துத் தான் அறிந்து கொண்ட பல தகவல்களை தனது நினைவஞ்சலி உரையில் பகிர்ந்து கொண்டார் முத்து நெடுமாறன்.
இறுதிவரை பகுத்தறிவாளராக, பெரியாரைப் பின்பற்றி வாழ்ந்த மா.இராமையாவின் இறுதி விருப்பத்திற்கேற்ப அவரது இறுதிச் சடங்குகள் சீர்திருத்த முறையில் அவரது குடும்பத்தினரால் நடத்தப்பட்டன என்ற தகவலையும் முத்து நெடுமாறன் தெரிவித்தார்.

பங்கேற்பாளர்களுக்கு நினைவுப் பரிசுகள்
சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் இறுதியில் நினைவஞ்சலி உரைகள் நிகழ்த்திய அனைவருக்கும் தேசிய நூலக வாரியத் தமிழ் மொழிச் சேவைகள் பிரிவின் ஆலோசனைக் குழுத் தலைவர் அருண் மகிழ்நன் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் நினைவஞ்சலி நிகழ்த்தப்பட்ட தமிழ் ஆளுமைகள் குறித்த குறிப்புகளை வழங்கியதோடு, உரை நிகழ்த்தியவர்கள் குறித்த முன்னுரைகளையும் வழங்கி, நினைவின் தடங்கள் நிகழ்ச்சியை சிறப்புற தொகுத்து வழங்கினார் தொகுப்பாளர் இலக்கியா.

