Home நாடு “வரலாறாய் வாழ்ந்த பெருமகனார் க. ப. அறவாணன்” – முரசு நெடுமாறன்

“வரலாறாய் வாழ்ந்த பெருமகனார் க. ப. அறவாணன்” – முரசு நெடுமாறன்

718
0
SHARE

(கடந்த டிசம்பர் 23-ஆம் நாள் தமிழகத்தில் மறைந்த தமிழறிஞர், பேராசிரியர் க.ப.அறவாணனின் எண்ணற்ற மாணவர்கள் உலகம் எங்கும் பல துறைகளில் பரவியிருக்கின்றனர். அவர்களில் ஒருவர் மலேசியாவின் பாப்பா பாவலர் என அறியப்பட்ட கவிஞர் முனைவர் முரசு நெடுமாறன் என்பது பலருக்கும் தெரியாத ஒரு தகவல். முனைவர் பட்டத்துக்கான தனது ஆராய்ச்சிப் பதிவுகளுக்கு வழிகாட்டியாக இருந்தவர் அறவாணன் என்பதை நன்றியோடு நினைவு கூர்ந்து, அறவாணன் குறித்த தனது கருத்துகளை செல்லியல் ஊடகத்துக்காக வரைந்த இந்தச் சிறப்புக் கட்டுரையில் முரசு நெடுமாறன் பதிவு செய்துள்ளார்)

“இருபது, இருபத்தொன்றாம் நூற்றாண்டுகளில் தமிழில் முகிழ்த்த புத்துலக ஆக்கங்கள் பல; பலப்பல. அவ்வாக்கங்களை நிகழ்த்திய சான்றோர் பலராவர். படைப்பிலக்கியத்தில்  வியக்கத்தக்க ஆக்கங்களைத் தந்தனர்
ஒருவகையினர்.

விளக்க ஆய்வு முறையில் பழந்தமிழ் இலக்கியங்களைப் புதிய தலைமுறைக்கு அறிமுகப் படுத்தினர் ஒரு சாரார். பழந்தமிழர் கலைகளைச் சூழ்ந்திருந்த மாசுகளை அகற்றித் தூயபடைப்புகளை அறிமுகம் செய்தனர் ஒரு பிரிவினர். வரலாற்றை ஆய்ந்து உண்மைகளை வெளிப்படுத்தி மாறுதல்களுக்கு வழிவகுத்தனர் ஒரு குழுவினர். புதிய ஆய்வு நெறி வழிநின்று நிலைத்து நிற்கத் தக்க ஆய்வுகளைத் தந்தனர் ஒரு அணியினர். சமூகவியல் நெறி சார்ந்து தமிழினத்தின் பல நிலைகளை ஆய்ந்து நூல் செய்தனர் ஒரு தொகுதியினர். இங்ஙனம் இவ்விரு நூற்றாண்டுகள் தமிழ், தமிழிலக்கிய பரவலுக்கும் நிலைப்பாட்டிற்கும் அறிஞர் பெருமக்கள் அளித்த பங்கு மிகுதி.

பேராசிரியர் க.ப.அறவாணன்

அப்பேர்ப்பட்ட அறிஞர் பெருமக்கள் வரிசையில் ஒருவர்தான் பேராசிரியர் க. ப. அறவாணன்.

‘தமிழர்மேல் நிகழ்ந்த பண்பாட்டுப் படையெடுப்புகள்’ என்ற நூல் மூலம், தமிழரைத் தம் வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் முனைவர் க. ப. அறவாணன். இவ்வகையில், அவர் ஒன்பது வரலாற்று நூல்களைப் படைத்துத் தமிழினத்திற்குப் புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.

தமிழ்ச் சமுதாயம், உலகம் போற்றும் உயர்தரமான பண்பாடுகளைக் கொண்ட தெனினும், வருந்தத்தக்க, தன் இனத்துக்கே இழுக்குச் சேருமாறு வேறுபடுத்திப் பார்க்கும் மனப்பான்மை போன்ற தன்மைகளால் தாழ்ந்து கொண்டிருக்கும்  சிறுமைகளையும் கொண்டது. பேரறிஞர் மு. வரதராசன் போன்ற பெருமக்கள் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளனர். க. ப. அறவாணன் இத் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டு பல ஆய்வுகளைத் தந்தவர். இவர் மானுடவியலும் சமூகவியலும் அறிந்தவர். ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள செனகல் நாட்டுத் ‘தக்கார் பல்கலைக்கழகத்தில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றியவர்; உலகின் ஐந்து கண்டங்களையும் வலம் வந்தவர். ஆதலால், அவரால் இங்ஙனம் இன இயலை ஆழமாக ஆராய முடிந்தது.

உயரிய காதல் நெறியில், புறமுதுகிடாத வீரநெறியில் தலைநிமிர்ந்து வாழ்ந்த தமிழினம், இடையில் வீழ்ச்சியுற்ற துன்ப வரலாறு அவர் மனத்தைப் பெரிதும் வருத்தியது. இப் பொருள் குறித்து நிரம்ப பேசியும் எழுதியும் உள்ளார். இத் துறையில் அவர் 50 நூல்கள் வரை படைத்துள்ளார் என்னும் போது அவர் இனமான உணர்வில், அதன் மேம்பாட்டில், எத்துணையளவு வேட்கை கொண்டவர் என்பதனை உணர முடிகிறது. ‘தமிழர் அடிமையானது ஏன்?’ என்று வினா எழுப்பி, அதற்கான விடையையும் நூலாகத் தந்துள்ளார். அந்த விடைகளை எல்லாம் படித்து விழித்தெழுந்தால் இனம் மீளும் என்பதில் ஐயமில்லை.

இவர் ஆழ்ந்து கற்றுப் புலவர் பட்டம் பெற்றவர். தொடர்ந்து பல உயர் நிலைப் பட்டங்கள் பெற்று முனைவரானவர். தமிழ், ஆங்கிலம், மலையாளம், பிரஞ்சு போன்ற மொழிகளில் தேர்ச்சி பெற்றவர் ஆதலால், ஆய்வியல், வரலாற்றியல் போன்ற துறை சார்ந்த நூல்களைச் செப்பமான முறையில் உயரிய ஆவணங்களாகத் தர முடிந்தது.

அறவாணனின் மாணவராக…

மேலே கண்ட செய்திகள் யான் தொலைவிலிருந்து நூல்கள் வழிக் கண்டுணர்ந்த அறவாணர் பற்றியது. நெருங்கியிருந்து  கண்டுணர்ந்த அறவாணர் பற்றியும் சில சொல்லவே வேண்டும்.

யான் பல நிலைகளைக் கடந்து மதுரைக் காமராசர் பல்கலையில் (அஞ்சல்வழி) முதுகலை தேர்ந்தபின் முனைவர்பட்டம் பெற விழைந்து (பணி ஓய்வு பெற்றபின்) புதுவைப் பல்கலைக்கழகத்திற்குச் சென்றேன். அங்குத் தமிழ்த்துறைத் தலைவராய் இருந்த அவரிடம் ஆய்வு மாணவனாய்ச் சேர்ந்தேன். என்னைவிட அவர் நான்கு அகவை இளையவர் எனினும் கல்வி, கேள்விகளில் மூத்தவரான அவரிடம் கொண்டிருந்த பேரன்பும் பெருமதிப்பும் எங்களிடையே ஆசிரியர் மாணவர் என்னும் உறவில் எவ்வகைச் சிக்கலையும் ஏற்படுத்தவில்லை. என்னை முதிர் நிலை மாணவர் என்ற மதிப்பொடு வழிநடத்தினார்.

நான் ஆய்வு மாணவனாகச் சேர்ந்து பயிலத் தொடங்கிய காலை, பலர் என்னிடம், “ஐயோ, அவரையா நெறியாளராய்க் கொண்டீர்கள்? அவர் உயிரை வாங்கி விடுவாரே! நீங்கள் அவரிடம் தாக்குப் பிடிப்பீர்களா? பேசாமல் வேறு இடம் பாருங்கள்” என்றனர். அப்பேர்ப்பட்ட வழிகாட்டிதான் எனக்கு வேண்டுமென்றேன். சோம்பல் தன்மை கொண்டவர்கள், ஆய்வை மேம்போக்காக – சடங்காகச் செய்து பட்டம் பெற எண்ணுபவர் எவரும் அவரிடம் பெயர் போட முடியாது என்பதனை நேரில் கண்டு உணர்ந்தேன்.

ஆய்வாளர் எங்கிருந்து எதனைத் திருடி எழுதித் தாம் எழுதியதுபோல் கொடுத்தால், கண்டுபிடித்து, அக் கருத்து அங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதனையும் கூறி ஒதுக்கித் தள்ளி விடுவார்; ஆழ்ந்து ஆய்வு செய்து வேறு எழுதிவரப் பணிப்பார்.  யான் புதியன கற்றுக் கொள்வதில் கொண்டிருந்த ஆர்வத்தாலும் ஆய்வில் நன்கு தேர்ந்து காலூன்ற வேண்டுமென்ற உறுதியாலும் கடுமையாக உழைத்து அவர் மதிப்புக்குரிய ஆய்வாளனாக வளர்ந்தேன். அவர் காட்டிய மிகமிகக் கடுமையான வழிகளில் ஆர்வம் குன்றா உறுதியுடன் கால்கடுக்க நடந்தேன்.

“நீங்கள் ஆய்வு செய்வது மலேசியத் தமிழ்க் கவிதைகளை. அதில் நீங்கள் உரிமைச் சான்றாளராய் (authority) விளங்குபவர். நான் உங்களுக்கு ஆய்வுமுறைகளை உணர்த்தி வழிகாட்ட மட்டுமே முடியும். அனைத்தையும் தாங்களே தேடிப்பிடித்து ஆய்ந்து எழுத வேண்டும்.” என்றார். மற்றவர்கள் சொன்னது போலவே, ஆஸ்திரேலியா, (அமெரிக்க) கறுப்பர், சீனர் போன்ற புலம் பெயர்ந்தவர் இலக்கியம் (ஒப்பீடு) தொடர்புடைய கடுமையிலும் கடுமையான ஐந்து உள் தலைப்புகள் தந்தார். அவற்றிற்கு யான் தரவுகள் தேடி அலைந்தபோது “நாங்கள் சொன்னோமே பார்த்தீர்களா? அவர் உங்களைக் கசக்கிப் பிழியப் பார்க்கிறார். இதற்கு ஒப்புக் கொள்ளாதீர்கள் என்றனர்.

 

க.ப.அறவாணன் – கட்டுரையாளர் முரசு நெடுமாறன்

“நான் அவர் காட்டும் வழியிலிருந்து சிறிதும் பின்வாங்க மாட்டேன். எப்படியும் ஆய்வு செய்து முடிப்பேன்” என்ற உறுதியோடு பணியைத் தொடர்ந்தேன். சிக்கல்கள் தோன்றிய போதெல்லாம் அவரை அணுகினேன். சில சிக்கலுக்கு தீர்வு சொல்லுவார்கள். சிலவற்றுக்கு நீங்களே சொந்தமாக வழிகாணுங்கள் என்பார். ஒரு கடுமையான சிக்கலுக்குத் தீர்வுகாணப் பல நாள் முயன்றேன். எனக்கு அழுகையே வந்துவிட்டது. எங்ஙனமோ தெளிந்து புதுவழியும் கண்டேன். ஆய்வை முடித்து ஆய்வேட்டைத் தந்தேன். படித்துப் பார்த்து பாராட்டிப் பெரிதும் மகிழ்ந்தார். நான் புதிய அனுபவத்தைப் பெற்றேன்.

“இந்த ஆய்வு, நூலாக வரவேண்டும். இதனை இப்படியே வெளியிட்டால் அது ஒரு நூல் என்னும் தகுதியைப் பெறாது. இதற்கு நூலுக்குரிய அமைப்பைச் செய்து ஆய்வேடு என்ற தோற்றமே தெரியாமல் வடிவமையுங்கள். இதன் சிறப்புகள் பற்றித் தமிழக அரசின் ‘தமிழ் வளர்ச்சித்துறை’ இயக்குநரிடம் பரிந்துரைத்துள்ளேன். தங்களுக்கு நூலாக்கம் செய்ய 25 ஆயிரம் உருவா கிட்டும், முயலுங்கள் என்றார்.

யான் ஆய்வு மேற்கொண்ட காலத்தில் க.ப.அ. உள்ளிட்ட தக்கார் துணையுடன் மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியத்தைத் தொகுத்து வந்ததாலும், ஆய்வுப் பரப்பு மிக விரிந்ததாலும் காலம் மிக நீண்ட, ஏழு ஆண்டுகளைத் தொட்டது. எனினும் நான் மேற்கொண்ட ஆய்வால் அடைந்த பயன் மிகுதி. ஆய்வு   நெறிகளைக் கற்று முனைவர் பட்டம் பெற முடிந்தது என்பது ஒருபுறமிருக்க, எளிதில் பெற இயலாத எத்தனையோ புதிய உண்மைகளை, பட்டறிவை – அனுபவங்களைப்  பெற்றேன் என்பதில் மகிழ்ந்தேன்.

அப் பெருமகனாரிடம் நிறைந்திருந்த ஆளுகை – நிருவாகத் திறன் பற்றியும் சில சொல்ல வேண்டும். துறையை நிருவகிப்பதில் அவர் சிறந்த வல்லுநராய்த் திகழ்ந்தார். யாரும் குறைகூற முடியாத அளவு சிறப்பாகச் செயல்பட்டார். மதிக்கத்தக்க, யாரும் ஐயமுறமுடியாத நல்லொழுக்கம் மிக்கோராகவும் திகழ்ந்தார். அதனால் பொறாமையர், கையாலாகாதவர் எதிர்ப்புகளால் அவரை ஒன்றும் செய்ய இயலாமல் போயிற்று. இச்சிறப்புகள்தான் அவரைத் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மேதகு துணைவேந்தராய்ப் பணியாற்றிய பேறு பெற்ற பேராசிரியராய் ஆக்கிற்று.

என்னை அங்கும் அழைத்து இருநாள் தங்க வைத்து நெறிப்படுத்தினார். அவர் பொருளையே நோக்கமாய்க் கொண்டு தமக்காக மட்டும் வாழ்ந்து தம் ஆற்றல்களைத் தமக்கும் குடும்பத்தாருக்கும் மட்டுமே என்று வாழாமல் இறுதி மூச்சுவரை தமிழுக்காகவே வாழ்ந்தார். இன மேன்மைக்கே பாடுபட்டார்.

அவர் புகழுடம்பு எய்திய பின்னும் அவர்  உருவாக்கிச் சென்றுள்ள ‘அறவாணன் அறக்கட்டளை’, ‘ஆர்’ ஆய்வுமாணவர்க்கான அமைப்பு, ‘சிந்திக்க வாங்க / வாசிக்க வாங்க’ போன்ற அமைப்புகளின் பணி அவர் மறுமையிலும் தொடரும். இந்த வேளையில் அவர் தமிழுக்கும் தமிழ்க் குமுகாயத்தியும் விட்டுச் சென்ற தமிழ்க் கொடைகளை – நிலைத்து நிற்கத்தக்க ஆவணங்களை ஒரு கண்ணோட்டமிடுவோம்:

அப் பெருமான் “எழுதிய மொத்த நூல்கள் 108. ஆங்கில நூல்கள்: 5, அறயியல்: 2, பொதுயியல்: 2, புதினம்: 1, சிறுகதைத் தொகுப்புகள்: 6, இலக்கணம்: 8, திறனாய்வு: 10, பயண நூல்: 1, கல்வி: 4, தன் வரலாறு: 2, வரலாறு: 4, மொழிபெயர்ப்பு: 3, வாழ்வியல் முன்னேற்றம்: 2, சமூகவியல்: 50க்கு மேல், தமிழ்ச் சமுதாய வரலாறு: 9 தொகுதிகள், அற இலக்கிய களஞ்சியம்” (உலகத் தமிழ்க் களஞ்சியம் 2018, ப. 188).

இவர் வழிவகுத்துக் கொடுத்து மேற்பார்த்துச் செப்பம் செய்த கடைசி நூல் (3 பெருந் தொகுதிகள்), முதன்மைத் தொகுப்பாசிரியர் இ. ஜே. சுந்தரால் தொகுக்கப்பெற்று தமிழறிஞர் டத்தோ ஆ. சோதிநாதன் அவர்கள் பதிப்பித்து உமா பதிப்பகத்தின் வழி வெளிவந்துள்ள உலகத் தமிழ்க் களஞ்சியம் (2018) ஆகும்.

09.08.1941-இல் பிறந்து 23.12.2018-இல் புகழுடம்பெய்திய பேரறிஞர் க.ப. அறவாணன், “வரலாற்றைப் படி, வரலாற்றை ஆக்கு, வரலாறாய் வாழ்” என்று  கூறுவார். அவர் வாழ்வு அதற்கு இலக்கணமாய்த் திகழ்ந்தது. வாழ்க அப் பெருமகனார் புகழ்!

-முரசு நெடுமாறன்

Comments