தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு முன்னரே, சிவராஜ் மீண்டும் போட்டியிடுவது சாதகமா அல்லது அவருக்குப் பதிலாக ஒரு புதிய வேட்பாளரை அடையாளம் காண்பது வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்குமா என்ற விவாதங்கள் மஇகாவின் முன்னணி தலைவர்களிடையே விவாதிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு நேற்று வெளியிடப்படுவதற்கு முன்னரே தற்செயலாக, மஇகாவின் முக்கியத் தலைவர்களில் சிலர் கேமரன் மலையில் சந்திப்புக் கூட்டங்கள் நடத்துவதற்கு நேற்று வெள்ளிக்கிழமை அங்கு சென்று சேர்ந்திருக்கின்றனர்.
அதே போன்று, ஜசெக வேட்பாளராக மீண்டும் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படும் வழக்கறிஞர் மனோகரனும் கேமரனில் முகாமிட்டு தொடர்ந்து பிரச்சாரங்களிலும், சந்திப்புக் கூட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார்.
சிவராஜூக்குப் பதிலாக மூவர் பரிசீலனையில்…
மஇகாவின் மூன்று முக்கியத் தலைவர்கள் கேமரன் மலையில் போட்டியிட ஆர்வம் காட்டுகின்றனர் என்கின்றன கட்சி வட்டாரங்கள்.
முதலாமவர் டத்தோ டி.முருகையா (படம்). அண்மையில் நடந்த கட்சித் தேர்தலில் தேசிய உதவித் தலைவராக அவர் வென்றிருப்பதால், அவருக்கே முதல் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என அவருடைய ஆதரவாளர்கள் மஇகா தலைமைத்துவத்திற்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இவ்வாறாக பல அம்சங்களில் பொருத்தமான வேட்பாளராக முருகையா திகழ்வார் என மஇகாவின் சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கேமரன் மலை இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் கட்சியின் தேசிய உதவித் தலைவர் என்ற முறையில் அங்கு சென்று வாக்காளர்களைச் சந்திப்பது, மஇகா தலைவர்களுடன் கலந்துரையாடல்கள் என தனது தேர்தல் பணிகளை முருகையா ஏற்கனவே முடுக்கி விட்டார் என்பதும் – அதனால் அங்குள்ள வாக்காளர்கள், மஇகா உறுப்பினர்களிடையே அறிமுகம் பெற்றிருக்கிறார் என்பதும் – அவருக்கு சாதகமாக இருக்கும் மற்றொரு அம்சம்.
கடுமையாக உழைக்கக் கூடியவர் – இரவு பகல் பாராமல் பணியாற்றக் கூடியவர் – இளைஞர் – பொதுமக்களிடம் தன்மையாகப் பழகக்கூடியவர் – போன்ற சாதகமான குணாதிசயங்கள் கொண்டவர் என்றாலும், உதவித் தலைவர் தேர்தலில் வென்ற முருகையாவை விட்டுவிட்டு, தோல்வியுற்ற இராமலிங்கத்திற்கு வாய்ப்பு வழங்குவது கட்சியில் சில சலசலப்புகளை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்றாவதாக, டான்ஸ்ரீ எம்.இராமசாமியும் கேமரன் மலைக்குக் குறிவைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே, 2008 பொதுத் தேர்தலில் பேராக் மாநிலத்தின் பெஹ்ராங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சொற்ப வாக்குகளில் (1,027 வித்தியாசத்தில்) தோல்வியுற்றதால் கொண்டிருக்கும் தேர்தல் கள அனுபவம் – வெற்றிகரமான இந்திய வணிகப் பிரமுகர் என்ற தோற்றம் – தேர்தலில் போட்டியிட நிதி வலிமையைக் கொண்டிருப்பது – போன்றவை இவருடைய சாதகமான அம்சங்களாகப் பார்க்கப்படுகின்றன என்கின்றனர் மஇகாவினர்.
டான்ஸ்ரீ இராமசாமிக்கு (படம்) வாய்ப்பு வழங்கப்பட்டால், அதனால் சரவணனின் ஆதரவாளர்களிடையே அதிருப்தி ஏற்படும் என்பதால் – அதன் பிரதிபலிப்பு கேமரன் மலை பிரச்சாரங்களிலும் எதிரொலிக்கும் என்பதால் – அத்தகைய முடிவை கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் எடுக்கமாட்டார் என்றே மஇகா தரப்பினர் எதிர்பார்க்கின்றனர்.
அடுத்த சில நாட்களில், மேற்குறிப்பிட்ட மூவரில் ஒருவரை மஇகா தேசியத் தலைவர் விக்னேஸ்வரன் முடிவு செய்து அறிவித்ததும் – குளிர் காற்று வீசும் கேமரன் மலையில், இடைத் தேர்தலுக்கான அனல் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.
-இரா.முத்தரசன்