Home நாடு சிகாகோ உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு மலேசியக் குழு

சிகாகோ உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு மலேசியக் குழு

1811
0
SHARE
Ad
பத்திரிக்கையாளர் சந்திப்பு – இடமிருந்து : இணைப் பேராசிரியர் கிருஷ்ணன் மணியம், பெ.இராஜேந்திரன், த.மாரிமுத்து, இணைப் பேராசிரியர் குமரன், எழுத்தாளர் சங்கச் செயலாளர் விஜயராணி

கோலாலம்பூர் – உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் தமது 10-வது உலக மாநாட்டை அடுத்த ஆண்டு சூலை, 3 முதல் 7 வரை சிகாகோ, இல்லினோய்ஸ் மாநிலம், அமெரிக்காவில் நடத்தவிருக்கிறது.

உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் (IATR) தனது 9-வது மாநாட்டை 2015-இல் மலேசியாவில் நடத்தியது. இதற்கு அடுத்த 10-வது மாநாட்டை வட அமெரிக்கா தமிழ் சங்கக் கூட்டமைப்பு (FeTNA) மற்றும் சிகாகோ தமிழ் சங்கம் (CTS) ஆகிய இரு முக்கிய அமைப்புகளுடனும் இணைந்து உலகத் தமிழாராய்ச்சி மன்றம் நடத்துகின்றது.

வட அமெரிக்காவிலுள்ள அனைத்து முக்கிய தமிழ் அமைப்புகள் மட்டுமல்லாது அனைத்துலக ரீதியிலான அனைத்து தமிழ் நிறுவனங்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் தாங்கள் எதிர்பார்ப்பதாக உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் நடப்புத் தலைவர் டான்ஸ்ரீ த.மாரிமுத்து இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு மலேசியக் குழு

#TamilSchoolmychoice

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு செல்லும் மலேசியக் குழுவினருக்கும், பேராளர்களுக்கும் ஒருங்கிணைப்பாளராக மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரன் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.

பேராளர்களுக்கான கட்டணம், செலவினங்கள் போன்ற விவரங்களை ஏற்பாட்டுக் குழுவினர் முறையாக அறிவித்த பின்னர் இம்மாநாட்டில் கலந்து கொள்ள விழையும் மலேசியப் பேராளர்களின் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் இராஜேந்திரனால் எடுக்கப்படும் எனவும் மாரிமுத்து தெரிவித்தார்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தைப் பற்றி…

உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம், ஐரோப்பா, இந்தியாவைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள் ஆகியோரின் துணையுடன் 1964ஆம் ஆண்டு புது டில்லியில் அமரர் தவத்திரு சேவியர் தனிநாயகம் அடிகளார் அவர்களால் துவங்கப்பட்டது.

உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் அரசியல் சார்பற்ற மற்றும் இலாப நோக்கமற்ற நிறுவனமாகும். “அனைத்துவித திராவிட பொது ஆய்வுகளை அறிவியல் ரீதியில் பல பன்முகத் துறைகளில் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்காகவும், குறிப்பாக தமிழ் ஆய்வுகளும், அனைத்துலக அமைப்புகளின் கூட்டு ஒத்துழைப்புடன் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் இத்தகைய ஆய்வுகளில் ஆர்வமுள்ள அறிஞர்களை” ஒருங்கிணைப்பதும் இதன் நோக்கமாகும்.

நடந்து முடிந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள்

முன்னாள் பேராசிரியரும், 1960-களில் மலாயா பல்கலைக்கழக இந்திய துறையின் தலைவராகப் பணியாற்றியவருமான தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் ஏற்பாட்டில் முதல் மாநாடு –கருத்தரங்கம் ஆகியவற்றை 1966ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடத்தப்பட்டது.

இரண்டாவது மாநாடு 1968ஆம் ஆண்டு சென்னையில், தமிழ் நாட்டு முதலமைச்சர் பேரறிஞர் சி.என். அண்ணாதுரை அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. இதனைத் தொடர்ந்து முறையே மற்ற மாநாடுகள் பல நாடுகளில் நடைபெற்றன. அம்மாநாடுகள் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் நோக்கத்தைப் பொருந்தியே அமைந்தது. அதோடு உலகத் தமிழ் அறிஞர்கள், தமிழ்மொழி, இலக்கியம் மற்றும் நாகரீகம் ஆகியவற்றை சேர்ந்த அவர்களது ஆய்வுகளை கலந்துரையாடக்கூடிய ஒரு மன்றமாகவும் இம்மாநாடுகள் அமைந்தன.

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1970-இல் பாரிசிலும், 1974இல் ஜப்பானிலும், 1981-இல் மதுரையிலும், 1987 மற்றும் 2015-இல் கோலாலம்பூரிலும், 1987இல் மொரிஷியசிலும் மற்றும் 1995இல் தஞ்சாவூரிலும் முறையே நடைபெற்றது.

10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் அலுவலக நிர்வாகமும் அறிஞர்கள் குழுவும் இம்மாநாடு ஆய்வுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து வேறு எவ்வித அரசியல் குறுக்கீடும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்கிறது.

உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் முன்னாள் துணைத் தலைவர் அமரர் டாக்டர் வி.சி. குழந்தைசாமி அவர்கள், அமெரிக்க தமிழ் சமூகம் அடுத்த மாநாட்டினை வட அமெரிக்காவில் நடத்துவதற்கு தலைமை ஏற்று தகுந்த ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் என தமது விருப்பத்தை தெரிவித்தார்.

அவரின் இந்த உறுதியான ஊக்கத்தினை கொண்டு வட அமெரிக்கா தமிழ் சங்கக் கூட்டமைப்பு (FeTNA) மற்றும் சிகாகோ தமிழ் சங்கம் (CTS) ஆகிய இரு முக்கிய நிறுவனங்களுடன் இணைந்து 9வது மாநாட்டின்போது, அடுத்த மாநாடு வட அமெரிக்காவில் நடத்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தை அழைத்தது.

உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்ற தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் த. மாரிமுத்து அவர்களும், துணைத்தலைவர் டாக்டர் எம். பொன்னவைக்கோ அவர்களும் அந்த அழைப்புக்கு இணக்கம் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்துதான் 10-வது மாநாடு சிகாகோவில் எதிர்வரும் 2019, சூலை, 3 -7 நாட்களில் நடைபெறவுள்ளது.

டாக்டர் சோமா இளங்கோவன் அவர்கள் இம்மாநாட்டின் நிர்வாகக் குழுத் தலைவராக செயல்படுகிறார். அவரோடு திரு. சுந்தர் குப்புசாமி, தலைவர், வட அமெரிக்கா தமிழ் சங்கக் கூட்டமைப்பு (FeTNA) மற்றும் திரு. மணி குணசேகரன், தலைவர், சிகாகோ தமிழ் சங்கம் (CTS) ஆகியோரும் பணிபுரிகின்றனர். மேலும் பல முக்கிய தமிழ் அறிஞர்களின் கூட்டு முயற்சியிலும் செயல்பாட்டிலும் இம்மாநாடு நடைபெறவுள்ளது. ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா ஆகிய ஐந்து கண்டங்களுக்கான துணைத் தலைவர்கள் கலந்துக் கொள்ளவிருக்கின்றனர்.

கருப்பொருள் மற்றும் ஆய்வுக்கான தலைப்பு

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் நோக்கத்திற்கு முரணற்ற, 10வது மாநாட்டின் கருப்பொருள் பின்வருமாறு:

“புதிய வரலாறு, அறிவியல், தமிழர்களின் பழங்கதைப் பற்றிய ஒப்பீட்டு ஆய்வு, தமிழ்மொழி, கலாச்சாரம் மற்றும் நாகரீகம்”.

தலைப்புச் சார்ந்த ஆய்வுத் தாட்கள் உலகத் தமிழ் அறிஞர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது. மேல் விபரங்களுக்கு உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் வலைத்தளங்களில் அறியலாம.

www.iatrnew.org அல்லது http://icsts10.org அல்லது மினஞ்சல் : iatr2019@fetna.org