புத்ராஜெயா: கேமரன் மலை தொகுதி காலியாக உள்ளதாக மலேசிய தேர்தல் ஆணையம் இன்று உறுதிப்படுத்தியது. கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி வெற்றிப் பெற்றது செல்லாது என நீதிமன்றம் அறிவித்ததற்கு, அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிவராஜ், மேல் முறையீடு செய்யாததன் காரணமாக இத்தொகுதி காலியானதாக இன்று பத்திரிக்கைச் செய்தியின் வாயிலாகத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
காலியான இந்த தொகுதியில் 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான் ஹருண் தெரிவித்தார்.
மேலும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாடாளுமன்ற மக்களவை சபாநாயகருக்கு அனுப்பப்படும் எனவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 30) தேர்தல் நீதிமன்றம், கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிவராஜின் தேர்தல் வெற்றியை இரத்துச் செய்தது. தேர்தலில் வாக்குகள் விலை கொடுத்துப் பெறப்பட்டன என்று ஜனநாயக செயல் கட்சியின் வேட்பாளர், எம்.மனோகரன் வழக்கு தொடுத்ததால் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.