Home நாடு “பிரபஞ்சன் : மலேசியத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பங்காற்றியவர்” – பெ.இராஜேந்திரன்

“பிரபஞ்சன் : மலேசியத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பங்காற்றியவர்” – பெ.இராஜேந்திரன்

1111
0
SHARE
Ad

கோலாலம்பூர் –  (கடந்த வெள்ளிக்கிழமை டிசம்பர் 21-ஆம் தேதி புதுச்சேரியில் காலமான பிரபல எழுத்தாளர் பிரபஞ்சனின் நல்லுடல், நேற்று ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி அரசின் முழு மரியாதையுடன், 21 மரியாதை குண்டுகள் முழங்க – தகனம் செய்யப்பட்டது. புதுவை முதல்வர் நாராயணசாமி தேசியக் கொடியை பிரபஞ்சனின் நல்லுடலுக்குப் போர்த்தி மரியாதை செலுத்தினார். பிரபஞ்சனை மலேசியாவுக்கு வரவழைத்து மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பாக நாடு முழுக்க இலக்கிய நிகழ்ச்சிகளையும், சிறுகதைப் பயிலரங்குகளையும் நடத்திய அச்சங்கத்தின் தலைவர் பெ.இராஜேந்திரன் தனது நினைவுகளையும், கருத்துகளையும் செல்லியலுடன் பகிர்ந்து கொண்டார். அந்தத் தொகுப்பை இங்கே வழங்குகிறோம்)

“பிரபஞ்சனின் மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கு, அதிலும் குறிப்பாக சிறுகதைத் துறைக்கு ஒரு பேரிழப்பாகும்.

2010-ஆம் ஆண்டு பிரபஞ்சனை மலேசியாவுக்கு வரவழைத்து நாடெங்கிலும் இலக்கிய உரைகளும், சிறுகதைப் பயிலரங்குகளையும் நடத்தி அதன் மூலம் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களிடையே, குறிப்பாக வளரும் இளம் எழுத்தாளர்களிடையே எழுச்சியையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தினோம். பிரபஞ்சன் மலேசியத் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கும், ஊக்கத்திற்கு தனது பங்களிப்பையும் வழங்கியிருக்கிறார் என்பது எப்போதும் நாம் நன்றியுடனும், மனநிறைவுடனும் நினைவுகூரக் கூடிய ஒன்று.

பெ.இராஜேந்திரன்
#TamilSchoolmychoice

அவரது மலேசிய வருகையின்போது அவரைப் பற்றி மேலும் அதிகமாகத் தெரிந்து கொள்ளும் வாய்ப்புகளும் ஏற்பட்டது. தனக்கென தேவைகளை அதிகம் வைத்துக் கொள்ளாத நபராக அவர் இருந்தார். தங்கும் விடுதிகள் என்று வரும்போதுகூட ஆடம்பரமான விடுதிகள் வேண்டும் என வேண்டுகோள் வைக்காதவர் பிரபஞ்சன். உணவருந்தச் செல்லும்போதுகூட சாதாரண விலை மலிவான உணவகங்களுக்குச் செல்வோம் எனக் கூறுபவர். அந்த அளவுக்கு மிக எளிமையான மனிதர்.

பிரபஞ்சனை மலேசியாவுக்கு வரவழைப்பதில் உதவி புரிந்த கவிப்பேரரசு வைரமுத்து, பிரபஞ்சன் தமிழகம் திரும்பியதும், பிரபஞ்சனின் வருகை எப்படியிருந்தது என ஒருமுறை கேட்டார். அப்போது வைரமுத்துவிடம் நான் பின்வருமாறு கூறினேன்: “பொதுவாக தமிழகத்திலிருந்து நாம் அழைத்து வரும் பிரமுகர்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் குறித்து நமக்குக் கசப்பான அனுபவங்கள் ஏற்படும். ஆனால், பிரபஞ்சன் போன்றவர்களை நாம் வருடத்திற்கு நான்கு முறை கூட அழைத்து வரலாம். அந்த அளவுக்கு நமக்குத் தொந்தரவோ, நெருக்கடியோ கொடுக்காமல் நடந்து கொண்டவர் பிரபஞ்சன்”.

மலேசியாவிற்கு பிரபஞ்சன் வருகை தந்தபோது, அச்சு ஊடகங்களில் வெளிவந்த 20 சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து அவரிடம் தந்து அவற்றை விமர்சனம் செய்யச் சொன்னோம். மிக அருமையான, நடுநிலையான, விமர்சனத்தை வழங்கி அதில் சிறந்த கதைகளை வரிசைப்படுத்தி சிறந்த கதையையும் நமக்குத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தார்.

அண்மையில் நான் புதுச்சேரி மாநிலம் சென்றபோது மீண்டும் பிரபஞ்சனைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது நோயின் தாக்கத்தினால் அவர் பாதிப்புற்றிருந்தார். நோயின் பாதிப்பு அவரது உடலில் தெரிந்தது. இருந்தாலும், மனம் தளராமல் பேசினார். மலேசியாவில் தமிழ் இலக்கிய வளர்ச்சி எப்படியிருக்கிறது, சிறுகதைப் பயிலரங்குகள் தொடர்ந்து நடைபெறுகின்றனவா என அடுக்கடுக்காக ஆர்வத்துடன் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

2004-ஆம் ஆண்டில் மலேசிய எழுத்தாளர்களை அழைத்துக் கொண்டு தமிழகத்தில் இலக்கியச் சுற்றுலாவை மேற்கொண்டிருந்தோம். அப்போது கலைஞர் முதல்வராக இல்லாத நேரம். எனினும், புதுச்சேரி முதலமைச்சராக இருந்த இரங்கசாமியுடன் தொடர்பு கொண்டு எங்கள் வருகையைக் கூற அவரும் எங்களுக்காக இரண்டு நாள் நிகழ்ச்சிகளை புதுவை அரசு சார்பில் ஏற்பாடு செய்தார். அந்த நிகழ்ச்சிகளில்தான் பிரபஞ்சனைச் சந்தித்ததோடு, அப்போதுதான் அவருக்கும் எனக்கும் நெருக்கமும் ஏற்பட்டது.

2004-இல் புதுவையில் நிகழ்ந்த அந்த சந்திப்புக்குப் பின்னர்தான் வெளிநாட்டு இலக்கியங்கள் மீது அவருக்கு ஆர்வம் ஏற்பட்டதாகவும், அதிகமாக வெளிநாட்டுத் தமிழ் இலக்கியங்களைத் தேடிப் பிடித்துத் தான் படித்ததாகவும் பிரபஞ்சனே மலேசியாவுக்கு வந்தபோது கூட்டங்களில் கூறினார்.  

அதன் பின்னர்தான் 2010-ஆம் ஆண்டில் அவரை மலேசியாவுக்கு வரவழைத்து நிகழ்ச்சிகள் நடத்தும் வாய்ப்பு ஏற்பட்டது.

அதன்பின்னர் மீண்டும் ஒருமுறை பிரபஞ்சனை நமது நாட்டிற்கு வரவழைத்து இலக்கியக் கூட்டங்கள், பட்டறைகள், பயிலரங்குகள் போன்றவற்றை நடத்த வேண்டும் என்ற திட்டம் எங்களுக்கு இருந்தது.

எனினும், நமக்கு அந்த நல்வாய்ப்பு மீண்டும் கிடைக்கவில்லை.

பிரபஞ்சனின் தமிழ் இலக்கிய ஆளுமைக்கும், உயர்வுக்கும் மாறாக, அவர் மிக எளிமையாக நடந்து கொண்டார். அவரது இழப்பு நவீனத் தமிழ் இலக்கியத்திற்கும் இலக்கிய உலகுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.”