Home இந்தியா பிரபஞ்சன் மறைவு : முதல்வர் பழனிசாமி – ஸ்டாலின் இரங்கல்

பிரபஞ்சன் மறைவு : முதல்வர் பழனிசாமி – ஸ்டாலின் இரங்கல்

1034
0
SHARE
Ad

பாண்டிச்சேரி – சாகித்திய அகாடமி விருது பெற்ற பிரபல தமிழ் எழுத்தாளர் பிரபஞ்சனின் (படம்) மறைவைத் தொடர்ந்து, அவருக்கு தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் தங்களின் அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மலேசியாவுக்குப் பலமுறை வருகை தந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதோடு, இங்கு பல சிறுகதைக் கருத்தரங்குகளையும், பட்டறைகளையும் நடத்தியவர் பிரபஞ்சன். இவரது வானம் வசப்படும் என்ற நாவலின் மூலமாக சாகித்திய அகாடமி விருதையும் 1995-இல் வென்றவர்.

தமிழ் இலக்கியத்துறையில் கடந்த 57 ஆண்டுகளாக இடைவிடாது பணியாற்றி வந்த பிரபஞ்சன் புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பலனின்றி புதுச்சேரியில் இன்று காலமானார்.

#TamilSchoolmychoice

புதுச்சேரியில் ஏப்ரல் 27, 1942ஆம் ஆண்டில் பிறந்த பிரபஞ்சன் சாரங்கபாணி வைத்தியலிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்டவர். புதுச்சேரியில் பள்ளிப் படிப்பை முடித்த இவர், கரந்தை கல்லூரியில் தமிழ் வித்வான் பட்டம் பெற்றார். அதன்பின்னர் தஞ்சாவூரில் ஆசிரியராகப் பணியை தொடங்கிய பிரபஞ்சன் பின்னர் பத்திரிக்கையாளராகப் பணியாற்றி தீவிர எழுத்துப் பணியில் ஈடுபட்டார்.

இதுவரையில் பிரபஞ்சன் 46 புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் தெலுங்கு, இந்தி, ஜெர்மன், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

பிரபஞ்சனின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று என வர்ணித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “மகாநதி, மானிடம் வெல்லும், சந்தியா, அப்பாவின் வேஷ்டி, போன்ற எண்ணற்ற புதினங்களும் – நேற்று மனிதர்கள், விட்டு விடுதலையாகி, இருட்டு வாசல், ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள் போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும் தந்தவர் பிரபஞ்சன். அவரது குடும்பத்தினருக்கும், எழுத்துலக நண்பர்களுக்கும், எண்ணற்ற இரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தனது இரங்கல் செய்தியில் தெரிவித்திருக்கிறார்.

மு.க.ஸ்டாலின் இரங்கல்

“தமிழ் இலக்கிய உலகின் மிகச்சிறந்த எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் மறைவு இலக்கிய உலகத்திற்கு ஏற்பட்டிருக்கும் பேரிழப்பு! அவர் மறைந்தாலும், அவருடைய எழுத்துக்களும், தமிழ்த் தொண்டும் என்றைக்கும் நிலைத்திருக்கும். தனது தனித்துவமான தமிழ் நடையால் பல படைப்புகளை வழங்கி, வாசிப்பு நிலையை புதிய உயரத்திற்குக் கொண்டு சென்று பல்லாயிரம் வாசகர்களை மகிழ்வித்த பெரும் படைப்பாளியாகத் திகழ்ந்தவர்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

“திராவிட இயக்கத்தை நட்பு முரணுடன் அணுகிய எழுத்தாளர் பிரபஞ்சன் அரசியல் ரீதியாக பல விமர்சனங்களை முன்வைத்தபோதும், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரிடம் தனிப்பட்ட அன்பு கொண்டவர். ஓர் இலக்கியவாதியான தன்னிடம் கலைஞர் வெளிப்படுத்திய அன்பை பல மேடைகளில் அவர் வெளிப்படையாகப் பகிர்ந்திருக்கிறார்” என்றும் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்திருக்கிறார்.