“அண்மையில் உலகவாழ்வு நீத்த மலேசியாவின் பழம்பெரும் எழுத்தாளர் மா. இராமையாவுடன், 1960 முதல், அவர் மறைவுக்கு ஒருவாரத்திற்கு முன்பு வரை தொடர்பு கொண்டிருந்தேன்.


மலேசியாவின் மா. இராமையா – (தோற்றம் 15.05.1933) தமிழ்ச் செல்வன், மலைநாடன், எம் ஆர்.வி. எனப் புனை பெயர்கள் கொண்ட இவர் ஜோகூர் மாநிலத்தின் தங்காக் நகரில் பிறந்தவர். பெற்றோர் மாணிக்கம் – பாக்கியம் இணையர்.
தமிழ் ஏழாம் வகுப்புவரை கற்ற இவர், தொடர்ந்து பள்ளி இறுதி வகுப்புவரை (Senior Cambridge) கற்றுத் தேர்ந்தார். மலேசிய அஞ்சல் துறையில் எழுத்தராய்ப் பணியில் சேர்ந்து படிப்படியாக உயர்ந்து அஞ்சலக அதிகாரியாகி (Post Master) பணி ஓய்வு பெற்றார்.
இயல்பாகப் படைப்பார்வம் கொண்ட இவர், சுப.நாராயணன், பைரோஜி நாராயணன், வை.திருநாவுக்கரசு போன்றவர்களால் ஊக்கப்படுத்தப் பெற்றார். 1946 முதல் எழுத்துலகில் காலூன்றினார். மலேசிய வார, மாத இதழ்களில் நிறைய எழுதினார். தமிழக இதழ்களான சங்கொலி, கல்கி, மஞ்சரி, அமுத சுரபி, தாய் ஆகிய இதழ்களிலும், தில்லி தமிழ்ச் சங்க மலரிலும் எழுதியுள்ளார்.


மற்ற எழுத்தாளர்கள் கையெழுத்தில் தம்படைப்புகளை இதழ்களுக்கு அனுப்பிவந்த வேளையில் நேரடியாக இவரே தட்டச்சுப் பொறியில் தம் கற்பனைப் படைப்புகளை அச்சேற்றித் தந்து வந்தார். அன்று மலேசியாவில் இங்ஙனம் படைப்புகளைத் தந்தவர் இவர் மட்டுமே.
தொடக்கத்தில் இவர் எழுதிய வடிவம் சிறுகதையே. தொள்ளாயிரத்திற்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். சிறுகதைகளையடுத்து இவர் மிகுதியாக எழுதியது கவிதை. அவ்வப்பொழுது தேவைக்கேற்பக் கட்டுரைகளும் எழுதிவந்தார். புதினங்களும் எழுதியுள்ளார். திறனாய்வுத் துறையிலும் கருத்துச் செலுத்தியுள்ளார். பொன்னி இதழில் இவர் எழுதிவந்த கடுமையான விமர்சனங்கள் பலரால் பேசப்பட்டன. விமர்சனக் கருத்துகளைக் கதை வடிவில் தந்தவர் இராமையா.
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் இவர் படைப்புகள் குறித்து 1967-இல் நடத்திய கருத்தரங்கில் படிக்கப்பெற்ற கட்டுரைகள், திருமுகம் அச்சக உரிமையாளர் மா.செ.மாயதேவனால், ‘மா.இராமையாவின் இலக்கியப்பணி’ என்ற தலைப்பில் நூலாக்கம் பெற்றுள்ளது.
மா.இராமையாவின் இலக்கியப் பணிகளுள் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது அவர் எழுதிய ‘மலேசியத் தமிழிலக்கிய வரலாற்றுக் களஞ்சியமாகும். அது பயனுடைய பல வரலாற்றுத் தகவலகளைக் கொண்ட நூலாகும். ஒரு பார்வை நூலாகவும் அது பயன்பட்டு வருகிறது.
கவிஞருமான இவர் ‘கவிமஞ்சரம்’ (1976) மற்றும் ’மா.இராமையா கவிதைகள்’ என இரு கவிதைத் தொகுப்புகளும் வெளியிட்டுள்ளார். போட்டிகளில் பரிசுகளும் தங்கப் பதக்கங்களும் பெற்றுள்ளார். பல அமைப்புகளின் பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், 2000-ஆம் ஆண்டில் இவரின் ‘அமாவாசை நிலவு’ நூலைத் தேர்ந்தெடுத்து, டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு 5000 மலேசிய ரிங்கிட் வழங்கிப் பாராட்டியது.
இவர் இயக்கங்களுடன் தொடர்பு கொண்டு தொண்டு புரிந்தும் வந்தார். மூவர் தமிழ் இளைஞர் மணி மன்றம், தமிழ் இலக்கியக் கழகம், கோ.சாரங்கபாணி, பகுத்தறிவுப் பதிப்பகம், அரசியல் கட்சியான மலேசிய இந்தியர் காங்கிரசு, அகில மலாயா தமிழ்ச் சங்கம் (மூத்த இயக்கம்-தற்போது இயங்கவில்லை), மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், மலேசியத் தமிழ்ப் புலவர் சங்கம் போன்ற அமைப்புகளில் தொடர்பு கொண்டிருந்ததோடு தங்காக் தமிழர் சங்கத் தலைவராய்த் தொடர்ந்து பதவி வகித்து வந்தார்.
இன மறுமலர்ச்சிக்கு வித்திட்ட தமிழர் திருநாளைத் தொடர்ந்து கொண்டாடிய முன்னோடிகளில் ஒருவராகவும் விளங்கி வந்தார்.
இவரின் இடைவிடாத, நீண்டநெடிய தொண்டைப் பாராட்ட எண்ணிய மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் கடந்த 9.11.2019-இல் அவருக்குப் பாராட்டுவிழா எடுத்தது. கோலாலம்பூரில் நடந்த அவ்விழாவில் அவரின் தொண்டுகள் தக்காரால் பெரிதும் பாராட்டப் பெற்றன. கவிஞர்களின் பாமாலைகள் அவரை நெகிழ வைத்தன. ஏற்புரை நல்கியபோது அவர் எடுத்துரைத்த பழைய நிகழ்வுகள் எல்லாரையும் வியக்க வைத்தன. இந்த அகவையிலும் அவர் கொண்டிருந்த நினைவாற்றல் – அதனை அவர் எடுத்து வைத்த பாங்கு அவரின் தெளிவையும் அனுபவ ஆழத்தையும் நன்றி உணர்வையும் தெள்ளத்தெளிவாக எடுத்துக் காட்டின.
உலகவாழ்வு நீத்தபின் பாராட்டாமல் உயிரோடு இருக்கும்போதே பாராட்டுகிறீர்கள் என்று தம் நெகிழ்ச்சியை அவர் உதிர்த்த உயிர்த்துடிப்பான சொற்கள் உணர்த்தின.
இத்துனைச் சிறப்புகள் கொண்ட அவர் 13.11.2019இல் உலக வாழ்வு நீத்தார். கொள்கை மாறாமல் வாழ்ந்த அவரின் இறுதிக் கடனும் அவர் கொள்கைப்படியே, அவரது விருப்பப்படியே சீர்திருத்த முறையிலேயே நடந்தது.
இவரிடம் இருந்த ஒரு பெரும்சிறப்பு, யார் நூல் வெளியிட்டாலும் பணம் அனுப்பி இருபடிகள் வாங்கிவிடுவார். பணம் அனுப்பும்போது அஞ்சல் செலவையும் சேர்த்து அனுப்புவார். பெரும்பாலோரிடம் காணப்படாத இதுபோன்ற பண்பால் அவர் அகவையால் மட்டுமல்லாமல் உயரிய தன்மைகளாலும் மூத்து முதிர்ந்த சான்றோராக வாழ்ந்தார்.
இந்நேரத்தில் நமக்கொரு குறள் நினைவுக்கு வருகிறது:
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்
தமிழ்ச் செல்வராய் வாழ்ந்து வழிகாட்டிய அவர்புகழ் நீடுநிலைப்பதாக.