Home உலகம் சிங்கப்பூரின் தமிழ் நூல் களஞ்சியம் “தமிழ்ச்சோலை”

சிங்கப்பூரின் தமிழ் நூல் களஞ்சியம் “தமிழ்ச்சோலை”

1289
0
SHARE
Ad
“தமிழ் சோலை” வளாகத்திற்கு முத்து நெடுமாறன் அவரின் துணைவியார் பவானியுடன் அண்மையில் வருகை தந்தபோது…. அருகில் அழகிய பாண்டியன்
  • 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் ஒரே நூலகத்தில்!
  • தமிழ் மொழியின் பெருமையையும், தொன்மையையும் எடுத்துக் கூறும் 1,000-க்கும் மேற்பட்ட மலாய், சீன, ஆங்கில நூல்கள்
  • திருக்குறளின் 17 மொழியாக்க நூல்களின் திரட்டு

தமிழ்நாட்டுக்கு வெளியே தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் தந்துவரும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு பாடுபட்டு வரும் நாடுகளில் சிங்கப்பூர் எப்போதுமே முதலிடம் வகிக்கிறது. தமிழ் மொழி வளர்ச்சிக்காக சிங்கப்பூர் தன் திட்டமிட்ட செயல்பாடுகளாலும், அரசாங்க ஆதரவினாலும் எப்போதுமே முன்னணி வகிக்கிறது.

படம் : உட்லண்ட்ஸ் வட்டார நூலகத்தில் ‘தமிழ்ச் சோலை’ பகுதியை தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ (வலமிருந்து 3வது) திறந்து வைத்தபோது…உடன் தேசிய நூலக வாரிய தமிழ் ஆலோசனைக் குழுத் தலைவர் திரு அருண் மகிழ்நன், தேசிய நூலக வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு இங் செர் போங், தேசிய நூலக வாரிய தமிழ் மொழிச் சேவை கள் பிரிவின் தலைவர் திரு து. அழகிய பாண்டியன். படங்கள்: திமத்தி டேவிட்/ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் ஊட்லண்ட்ஸ் வட்டார நூலகத்தில் நாட்டின் மிகப் பெரிய தமிழ் இலக்கிய நூல்களின் திரட்டை ஒருமுகப்படுத்தியிருப்பதன் மூலம் சிங்கப்பூர் தமிழ் மொழிக்கான – நூல்களுக்கான – முன்னெடுப்பில் புதியதொரு மைல் கல்லை மீண்டும் தொட்டிருக்கிறது.

‘தமிழ்ச்சோலை’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த நூலக வளாகத்தில் தமிழ் மொழி தொடர்பான இருபது ஆயிரம்  நூல்கள் திரட்டப்பட்டிருக்கின்றன.

#TamilSchoolmychoice

இதில் திருக்குறளின் 17 மொழியாக்க நூல்களும் அடங்கும். இந்த நூலக வளாகத்தை சிங்கப்பூரின் தொடர்பு தகவல் அமைச்சர் ஜோசப்பின் தியோ கடந்த சனிக்கிழமை ஏப்ரல் 16ஆம் தேதி அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார்.

ஜோசப்பின் தியோ உள்துறை அமைச்சுக்கான இரண்டாவது அமைச்சருமாவார்.

அழகிய பாண்டியன் தலைமையிலான தமிழ்சோலை நூலகப் பிரிவு பொறுப்பாளர்கள்

தமிழ்ச்சோலை நூலகப் பகுதியைத் திறந்து வைத்து உரையாற்றிய ஜோசப்பின் தியோ “தமிழ்ச் சோலை தமிழ் சமூகத்திற்கு மட்டும் உரியது அல்ல. சிங்கப்பூரின் சமூகங்களுக்கான இணைப்பை முன்னெடுத்துச் செல்லும் – வலிமைப்படுத்தும் மற்றொரு செயலாக்கத் திட்டமாகவும் இது அமையும். ஒவ்வொரு சமூகமும் தங்களின் சொந்த மொழியையும் கலாச்சாரத்தையும் கொண்டாடும் அதேவேளையில், மற்ற கலாச்சாரங்களையும் அறிந்து கொள்ளவும் இதுபோன்ற திட்டங்கள் உதவும்” எனத் தெரிவித்தார்.

தனது உரையில், திருக்குறளின் சில பகுதிகளையும் ஜோசப்பின் தியோ மேற்கோள் காட்டினார்.

3 முனை இலக்குகள் கொண்ட ‘தமிழ் சோலை’ திட்டம்

சிங்கப்பூரின் நூலகத் திட்டத்தின் பங்களிப்பு என்பது மூன்று முனை இலக்குகளைக் கொண்டதாகும்.

வாழ்நாள் முழுவதும்  கற்றுக் கொள்ளுதல்– மற்ற கலாச்சாரங்களிலிருந்து பரவலாக கற்றுக் கொள்ளுதல் – நூலகங்களை நமக்குப் போதிக்கும் மையங்களாக உருமாற்றுதல் –  ஆகியவையே அந்த மூன்று இலக்குகளாகும்.

இந்தத் தமிழ்ச்சோலையின் பெருமை என்னவென்றால் நவீன தமிழ் இலக்கியங்களையும் பழமையான சங்ககால தமிழ் இலக்கியங்களையும் ஒரு சேர திரட்டி வைத்திருப்பதாகும்.

அது மட்டுமன்றி ஆங்கிலம், மலாய், சீனம் ஆகிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட – தமிழ் மொழி தொடர்பான – ஆயிரத்திற்கும் மேற்பட்ட  நூல்களும்  இங்கு சேகரித்து வைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த தேசிய நூலக வாரியத்தின் தமிழ்மொழிப் பிரிவுக்கான தலைவர் அழகிய பாண்டியன். இந்த தமிழ் நூல் சேகரிப்பத் திட்டத்தில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்.

“தமிழ் ஆர்வலர்கள் தமிழ்ச்சோலையின் அரிய திரட்டுகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு தமிழ்மொழியில் படித்து பயன்பெறுவார்கள் என நம்புகிறேன். இதன் மூலம் சிங்கப்பூருக்கே உரிய இரு மொழி திறன் ஆற்றல் மேலும் கூர்மைப்படுத்தப்படும், வலிமைப்படுத்தப்படும் என நம்புகிறேன். தமிழ்ச்சோலை நூலக வளாகத்தையும் அங்கு வைக்கப்பட்டிருக்கும்  கண்காட்சியையும் பார்ப்பவர்களுக்கு  நமது தமிழ்மொழியின் தொன்மை குறித்த மேலும் ஆழமான புரிந்துணர்வும் பெருமையும் ஏற்படும் எனவும் நம்புகிறேன்” என அழகிய பாண்டியன் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய அமைச்சர் ஜோப்பின் தியோ தேசிய நூலக வாரியத்திற்கும் சிங்கப்பூர் கலாச்சார மையத்திற்கும் இடையிலான கூட்டு ஒத்துழைப்பின் கீழ் சிங்கப்பூர் தமிழர்களுக்கான இணையம் வழியான கலைக்களஞ்சியத்தை உருவாக்கும் திட்டத்தையும் அறிவித்தார்.

சிங்கப்பூரில் ஆண்டுதோறும் தமிழ்மொழி விழா நடத்தப்படுகிறது. இந்த தமிழ் மொழி விழா ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் தேதி தொடங்கி மே ஒன்றாம் தேதி நிறைவடைகிறது.

இதுவரையில் நடைபெற்றிருக்கும் நாற்பதுக்கும் மேற்பட்ட அத்தகைய நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாகவும், அவற்றின் மூலம் கிடைக்கப் பெற்ற களஞ்சியங்களில் இருந்தும் தமிழ்ச்சோலை நூலகத் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.

தமிழ்ச் சோலை திறப்பு விழா தொடர்பில் அனைத்து வயதினருக்குமான வாசிப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. மேல் விவரங்களை கீழ்க்காணும் வலைத்தள இணைப்பில் காணலாம்.

நன்றி: மூலம் –  சிங்கப்பூர் ஸ்ட்ரேயிட்ஸ் டைம்ஸ்