மலாக்கா: அனைத்து 13 தேசிய முன்னணியைச் சேர்ந்த மலாக்கா மாநில சட்டமன்ற உறுப்பினர்களும் மாநில அரசாங்கத்தின் தலைமையின் மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை முன்வைத்தால் அதை மாற்றுவதற்காக ஆதரிக்க தயாராக உள்ளதாக மலாக்கா மாநில எதிர்க்கட்சித் தலைவர் இட்ரிஸ் ஹாருன் தெரிவித்தார்.
மாநிலத்தில் உள்ள அனைத்து அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் அவ்வாறு செய்ய ஒப்புக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.
“நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு இருக்கும் என்று வதந்திகள் உள்ளன, தேசிய முன்னணி தரப்பான நாங்கள் ஏற்கனவே தற்போதைய அரசாங்கத்தை நம்பவில்லை. நம்பிக்கையில்லா தீர்மானம் இருந்தால், நாங்கள் 13 தேசிய முன்னணி சட்டமன்ற உறுப்பினர்கள் அதற்கு ஆதரிப்போம்” என்று அவர் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் மலேசியாகினியிடம் கூறினார்.
மலாக்கா சட்டசபையில் 28 இடங்கள் உள்ளன. அவற்றில், 13 இடங்களை அம்னோ கொண்டுள்ளது. மீதமுள்ள 15 இடங்களை நம்பிக்கைக் கூட்டணிக் கொண்டுள்ளது.
நேற்று மலாக்கா பிகேஆர் தலைவர் அப்துல் ஹலீம் பாச்சிக் மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்க முதலமைச்சர் அட்லி ஜஹாரியால் முன்மொழியப்பட்டது நிராகரிக்கப்பட்டது. அவருக்கு 13 வாக்குகளுக்கு எதிராக 12 வாக்குகளுக்கு மட்டுமே கிடைத்தது.